ப.மதியழகன்/சபை

பல பல ரூபங்கள்
எதுவும் சொந்தமில்லை
நித்திரை வேண்டியதாய் இருக்கிறது
மகாநித்திரையும்
இந்த உடலுக்கென்று
சில உறவுகள் இருக்கின்றன
எத்தனை தாய் தந்தையோ
எனக்கு
இளமையும் முதுமையும்
தேகத்தை துருப்பிடிக்கச்
செய்துவிட்டன
இனி மீண்டும்
எத்தனை முறை
மயானம்புக வேண்டுமோ
எத்தனை பெண்களை
கண்களால் மோகித்து
கைகளால் தீண்ட
வேண்டுமோ
எத்தனை முறை
கனவு நாகம்
படமெடுத்து ஆடுமோ
மாயையில் சிக்குண்டவரையில்
எனக்கு மறுஜென்மம் உண்டு
மகுடத்தைத் தேடினேன்
எல்லாம் பிடிமண்
ஓயாமல் அலறுகிறேன்
பேய்களுக்கும் உண்டு
ஈவு இரக்கம்
நரனாகும் முன்பு
புல்லாய் புழுவாய் இருந்தேன்
உடல் புழுத்து அழுகினாலும்
மனதின் காமவேட்கை
தணியவில்லை
மாயவனும்
புணர்ந்து எழுகிறான்
மஞ்சத்தில் அனுதினமும்
இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளவே
படைத்தானோ இவ்வுலகை
இடப்பாகத்தில்
சக்தி இருக்கும்வரை
ஆடித்தான் தீர்ப்பான்
தில்லை நடராசப்பெருமான்!