பானுமதி/மாலை நேரத்து விடியல்

விருட்சம் நடத்திய 78 வது கதைஞர்கள் கூட்டத்தில் வாசித்த கட்டுரை

29/03/24 அன்று திருமதி கௌரி கிருபானந்தன் மொழி பெயர்த்த திருமதி. சத்ய வதி எழுதிய மேற்கண்ட சிறுகதையை மிகவும் ரசித்துப் படித்தேன்
தமிழிலேயே எழுதியதைப் போல மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பு செய்துள்ள திருமதி கௌரி கிருபானந்தனுக்கு அருமையான பாராட்டுக்கள்.
மனைவி என்று ஆகும் பெண் ஒரு குடும்பத்தில் சிக்கிக் கொண்டு படும் மன உடல் கஷ்டங்களை இந்த சிறுகதை பேசுகிறது.
‘வெள்ளை நிற மேகத் துகள்கள் மாலை நேரத்து செவ்வானத்தில் கலை ந்து போவதை, வானம், காயம் பட்ட இதயம் போல் சிவப்பாக மாறியதை, கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவிழ்ந்து வருவதை அருந்ததி வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தாள்.’
கதைக்குப் பொருத்தமான ரத்தம் கசியும் இதயத்துடன் இருக்கும் அருந்ததியை இந்த வாக்கியத்தின் மூலமாகவே ஆசிரியர் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறார்.
அருந்ததி சுவாமிநாதன் தம்பதியினருக்கு ரவி என்ற மகனும் லதா என்ற மருமகளும் கருணா என்ற மகளும் மோகன் என்ற மருமகனும் இருக்கிறார்கள்.
அனைவரும் இவர்களின் இல்லத்தில் கூடியிருக்கிறார்கள். கருணாவிற்கு அம்மாவையாவது தன்னுடன் அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம். அம்மா இல்லாமல் அப்பாவிற்கு யார் அனைத்தும் செய்வார்கள் என்ற கட்சி கட்டுகிறான் மகன்.
வேண்டுமானால் இருவரையும் அழைத்துப் போ என்றும் சொல்கிறான்.
மருமகன் சொல்லியும் சுவாமிநாதன் இந்த யோசனையை ஏற்கவில்லை.
தானும் மகள் வீட்டுடன் வந்து இருக்க மாட்டேன், மனைவியும் அப்படிப் போகக்கூடாது என்பதை காரமான சொற்களால், கத்திரிக்காய் கூட்டில் உப்பு அதிகம் என்று உப்புச் சப்பு இல்லாத காரணத்தைச் சொல்லி கோபத்தைக் காட்டுகிறார்.
மருமகள் லதாவிற்கு அருந்ததியின் மௌனம் வியப்பாக இருக்கிறது. தன் அன்னையுடன் மாமியாரை ஒப்பிட்டுப் பார்க்கிறாள். அம்மா எப்போதுமே உற்சாகப் பந்து தன் மகளைப் பற்றி பெருமை தனக்காக மகள் கொண்டு வந்ததை எல்லாம் அனைவரிடம் காட்டி பெருமைப்படும் ஒரு தாய். அவர்களுக்குள் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. தன் வீட்டில் தான் ராணி என்றும் மகன் வீட்டிற்கு வந்தால் அந்த மருமகள் தான் எஜமானி என்றும் திட்டவட்டமாக ச் சொல்லும் தைரியம் உள்ள அம்மா எங்கே, இந்த மாமியார் எங்கே?
இப்போது பத்து நாட்களாக தான் அவளால் மாமியாரை அருகில் இருந்து பார்க்க முடிகிறது.
தன் மகளை தூண்டி விட்டு விட்டு ஊமை வேஷம் போடுகிறாள் என்று சுவாமிநாதன் மேலும் தன் மனைவி அருந்ததியை வார்த்தையால் சாடுகிறார். அருந்ததியின் எண்ணம் என்ன என்று எவரும் கவலைப்படவில்லை
அப்பா சொன்னதைப் படித்து , அவர் கைகாட்டிய வரனை மணந்து, உடலாலும் மனதாலும் காயப்பட்டு வாழ்ந்த அருந்ததி இன்று அதற்கான ஒரு முடிவை தானாகவே எடுக்கப் போகிறாள்.
மருமகள் கொண்டு வந்த கொடுத்த முத்து பவளம் நான்ஸ்டிக் கல், இன்ன பிறவும் அவளை மகிழ்ச்சி படுத்தவில்லை.
30 வருட தாம்பத்தியத்தில் எண்ணிப் பார்க்க என்ன ஒரு இனிமை இருந்திருக்கிறது, ஒன்றுமில்லை.
தாகம் என்று கேட்ட பக்கத்து வீட்டு கல்லூரி மாணவனுக்கு தண்ணீர் கொடுத்ததற்காக அவளை ஏசிய சுவாமிநாதன், கொதிக்கும் காபியை அவள் மீது கொட்டியவர, சாதத்தட்டை விசிறி அடித்தவர, இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணங்கள் இருந்த போதெல்லாம் அவளுக்கு இருந்த கால் கட்டுகள் குழந்தைகள் அவள் இறந்தால் மாற்றம் தாயிடம் வதைப்படுவார்களோ என்ற அச்சம், அவளைப் பொறுமை காக்க வைத்திருக்கிறது.
இந்த வயதிற்கும் தேக்கு மர நாடாக்கட்டிலை அருந்ததி தூக்கிக் கொண்டு வந்து வராண்டாவில் போட்டு மெத்தை விரித்து அயன் பண்ணின விரிப்பு விரித்து முக்காலியில்குடி நீரும், டம்ளரும் வைத்து, மாத்திரையை கையில் எடுத்துக் கொடுத்து இத்தனை செய்கிறாள்.
பார்த்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளை வராண்டாவிலேயே கட்டிலை போட்டு வையுங்கள் என்று சொல்கிறான். அதற்கும் ஒரு எதிர்ப்பு தெரிவிக்கிறார் அவர். படுக்கை அழுக்காகி விடுமாம், வாசலுக்கு நேர் எதிரே படுக்கையை போடக்கூடாதாம்.
மருமகள் லதா மாமியாரை தொடர்ந்த கவனித்துக் கொண்டிருக்கிறாள். தன் கணவன் ரவி தன்னை எப்படித் தாங்குகிறார், அப்பாவிடம் எப்போதுமே நெருக்கமாக பேசுகிறான் அம்மாவிடம் தொடூகை கூட இல்லை என்பதெல்லாம் வியப்பாக இருக்கிறது அவளுக்கு.
அருந்ததி தன்னுடைய அறைக்கு வந்து கதவை சாத்திவிட்டு ஜன்னலை திறந்து நல்ல குளிர் காற்றை அனுபவித்து விட்ட பிறகு தலையணை அடியில் சாவிக்கொத்தை தேடுகிறாள் அது அங்கு இல்லை. படுக்கையை கீழே தள்ளி போர்வையை உதறி, தேடித் தேடிப் பார்த்தும் சாவிக்கொத்து இல்லை
அவளுடைய அலமாரியில் அவளுடைய துணிமணிகள் தான். முட்டாள் என்ற பெயர் வாங்கிய அவள் அலமாரியில் தங்கம் வெள்ளி தஸ்தா வேஜுகள் எதையும் வைப்பாரா சுவாமிநாதன்?
இதிலும் தனக்கு தோல்வியோ தன் விருப்பம் இதிலும் நடக்காதோ என்று அருந்ததி நினைக்கும் போது அவள் கதவு தட்டப்படுகிறது.
லதா அந்த சாவி கொத்துடன் நிற்கிறாள். ஒரு மாத்திரை தருவேன் தூங்குவதற்கு மட்டும் முழு பாட்டில் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்கிறாள்.
இங்கே ஆசிரியர் அருந்ததியின் உடல் மற்றும் முக மொழியை அருமையாக எழுதியிருக்கிறார்.
அருந்ததியின் கண்கள் நெருப்புத் துண்டகளாக ஜொலித்தன. அவமானத்தால் ஏற்பட்ட வெறுப்பு எரிமலையாக கொந்தளித்துக் கொண்டிருந்தது வியர்வையில் கலைந்து போன குங்குமம் பரவியதில் அவள் முகம் அஸ்தமிக்கும் சூரியன் போல் இருந்தது சிவப்பு புடவையில் அருந்ததி தகதகவென்று எரியும் சந்தன மரம் போல இருந்தாள்.
அறையில் இறுகிக் கிடந்த நிசப்தம். யாரும் வாயை விட்டு பேசவில்லை.
ரொம்ப நேரம் கழித்து ஜன்னல் அருகில் வந்த லதா அருந்ததியை நெருங்கி அன்புடன் அனைத்துக் கொண்டாள்.
பல வருடங்களாக இறுகிப் போயிருந்த துக்கம் அந்த ஸ்பரிசத்தின் வெப்பத்தில் கரைந்து வெள்ளமாக மாறியது
தொலைவில் விடியல் சூரியனின் வெளிச்சக் கீற்றுகள்.
இந்த சிறுகதைக்கு கவித்துவமான தலைப்பு அமைந்திருக்கிறது. பொதுவாக விடியல் என்பது காலை நேரத்து சம்பவம். ஆனால் அருந்ததியின் வாழ்நாளின் மாலையில் விடியல் நிகழ்கிறது. அருந்ததி என்ற கற்புக்கரசியின் பெயரில் பாத்திரத்துக்கு வைத்ததில் ஆசிரியர் சுட்டிக் காட்ட விரும்புவது புரிகிறது.
உலகில் இந்த மாதிரி பல சுவாமிநாதன்கள் இருக்கிறார்கள். மகன் மகளை நன்றாக வளர்த்த ஆளாக்கியவர் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து வைத்தவர், வரதட்சணை வேண்டாம் என்று சொன்னவர், சொந்த உழைப்பால் வீடு கட்டி பெற்றோரை பேணியவர், மனைவியை ஒரு சக மனுசியாக கூட நினைக்காத ஆணின் அர்த்தமற்ற ஆணவம் கொண்டவர், அவளை உடலாலும் மனதாலும் துன்புறுத்தியவர், ஆனால் இது மட்டும் எனக்கு அதீதமாகப்படுகிறது மனைவி ஊரில் இல்லாத பத்து நாட்களில் தன் வீட்டிலேயே மற்றொரு பெண்ணுடன் அவர் உறவு கொண்டது. ஒரு மனிதன் தவறுகள் பல செய்பவனாக இருப்பான் இருக்கிறான் ஒரு நல்ல தந்தையாக இருப்பவர் நல்ல கணவராக இருப்பதில்லை என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே ஆனால் சமூகத்திற்கு பயந்தாவது அப்படி மற்றொரு பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து வந்து உறவு வைத்துக் கொள்வார் என்பது மொத்த வில்லத்தனத்தையும் ஒரு ஆண் கதாபாத்திரத்தில் காட்டும் முயற்சியோ என்ற சந்தேகம் எழுகிறது.
நல்ல சிறுகதை திறமையான மொழிபெயர்ப்பு