சுகன்யா சம்பத்குமார் /நேர்மைக்குக் கிடைத்த பரிசு

வழக்கம் போல் காலை எழுந்ததும் வீட்டு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சிவகாமி , அவளுக்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் கோபு . மிகவும் நல்ல குழந்தை . எதையும் அவ்வளவு சீக்கிரம் வாயைத்திறந்து கேட்க மாட்டான் .தன் குடும்ப கஷ்டம் தெரிந்தவன் . அவன் அப்பாவோ வெளியூரில் கூலித் தொழிலாளி அவரால் முடிந்த வரை குடும்பத்திற்கு தன் வருமானத்தைக் கொடுப்பார் .
கோபு என்றும் போல் அம்மா வேலைக்குக் கிளம்பியதும் பள்ளிக்குக் கிளம்பினான் . அவன் இருக்கும் அன்று பள்ளி கட்டணம் கட்டாதவர்களை ஆசிரியர் தனியாகக் கூப்பிட்டு இரண்டு நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாவிடில் இந்த பள்ளியை விட்டு நின்று விட வேண்டும் என்று கூறினார் . அவன் அதை தன் அம்மாவிடம் எப்படிக் கூறுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான் .
அடுத்த நாள் காலை கோபு எழுந்து ,”அம்மா , நானும் உங்களோடு இன்று நீங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு வரட்டுமா ? சமத்தாக இருப்பேன் “ என்றான் . அவளும் “ அப்பொழுது பள்ளிக்கூடம் ? என்று கேட்டதற்கு ,”இல்லை அம்மா இன்று ஒரு நாள் நான் விடுமுறை போடட்டுமா ? ப்ளீஸ் …. “ என்றான்’.
அவளும் சரி என்று கூறிவிட்டு அழைத்துச் சென்றாள் . அவள் வீட்டினுள் இருக்கும் வேலையெல்லாம் முடித்துவிட்டு வீட்டின் கொல்லைப்புறத்தில் பாத்திரங்களைத் தேய்க்கச் சென்றாள் . சிறு குழந்தையாக இருந்தாலும் தன் அம்மா தனக்காகத் தான் கஷ்டப்படுகிறாள் , என்பதை உணர்ந்து , அந்த வீட்டின் முதலாளி அம்மாவிடம் கேட்டு ஒரு குடை வாங்கிக்கொண்டு , அவன் அம்மா அருகில் சென்று ஒரு சின்ன ஸ்டூல் போட்டு ஏறி நின்று குடை பிடித்தான் , சிவகாமிக்கு இந்த செயலை பார்த்து கண்கள் கலங்கின ,
அப்பொழுது அவன் மெதுவாகப் பேச ஆரம்பித்தான் . “அம்மா நேற்று எங்கள் பள்ளிக்கு ஒரு பெரிய மருத்துவர் வந்தார் ,அவர் அரசுப் பள்ளியில் தான் படித்தாராம் , ஏன் எங்கள் பள்ளி முதன்மை ஆசிரியர் கூட அரசுப் பள்ளியில் தான் படித்தாராம் ,…..” என்று இழுத்தான் . அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்தது , “என்னடா கோபு, இப்போ என்ன சொல்ல வர ,? என்று கேட்டதற்கு , “அம்மா நான் அரசுப் பள்ளியிலேயே படிக்கிறேன் , எனக்கு இந்த பள்ளி வேண்டாம் , என்றான் , அவள் அனைத்தையும் கேட்டறிந்து “சரி யோசிப்போம் , என்று கூறிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றாள் .
சிவகாமி துணிகளைத் தோய்த்து உலர்த்த ஆரம்பித்தாள் , அப்பொழுது அந்த வீட்டு எஜமானின் 5 பௌன் தங்கச் சங்கிலி அவளுடைய புடவையில் மாட்டிக்கொண்டது , அதை எடுத்துக்கொண்டு கடகடவென உள்ளே சென்றாள் .எஜமானியிடம் கொடுத்தாள் .அந்த எசமானியோ ,”சிவகாமி உன் மகன் பேசியதைக் கேட்டேன் , அவன் பள்ளியில் அவன் பணம் கட்ட வென்றும் என்ற நெருக்கடி உள்ளது , இந்த நிலையில் நீ இந்த சங்கிலியை எடுத்திருக்கலாமே ? என்று கேட்டதற்கு “அம்மா எங்களுக்குத் திருட்டு பழக்கம் கிடையாது , நாங்கள் ஏழைகள் தான் , ஆனால் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படுபவர்கள் இல்லை “ என்றாள் . இதை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டே வெளியில் வந்தார் கோபு பள்ளியின் முதன்மை ஆசிரியர் .
அப்பொழுது தான் கோபுவிற்கு புரிந்தது அந்த வீடு பள்ளி முதன்மை ஆசிரியர் உடையது என்று . அவன் சிவகாமியைக் கட்டி அணைத்துக்கொண்டு , அவள் புடவை தலைப்பில் தன்னை மறைத்துக் கொண்டான் .
அவர் அவனை அருகில் அழைத்து , நீ இந்த சிறு வயதிலேயே உன் அம்மா கஷ்டம் அறிந்து செயல்படுவது எனக்கு ஆச்சியமாக உள்ளது , தவிர உன் அம்மா நேர்மையின் சிகரமாக இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது , நான் கூறுகிறேன் , இனி நீ உன் படிப்பு முடியும் வரை பள்ளி கட்டணம் செலுத்த வேண்டாம் , நீ உன் அம்மாவைப் போல் நேர்மையாக மட்டும் இரு” என்றார் .
தன் நேர்மைக்குக் கிடைத்த பரிசையும் , தன் மகனின் மனப்பக்குவத்தையும் நினைத்துப் பூரித்துப் போனாள் சிவகாமி ………

                மடிப்பாக்கம்