தங்கேஸ் கவிதை

வெளியில் இருக்கும் மனது
எப்படி உள்ளே வருகிறது
என்று கேட்டால்

நான் என்ன பதில் சொல்வது?
உள்ளேயிருக்கும் ஒன்று
காலியாகி கொண்டிருக்கிறதென்று
வேண்டுமானால் சொல்லலாம்

ஒரு பறவையின் வசிப்பிடத்தை
திறந்த கூடென்றும் அழைக்கலாம்
ஆனாலும் அது அவ்வளவு
பொருத்தமாக இராது

கூட்டுக்குள் நுழைந்து
வெளியேறும் பறவை
ஒரு இறகோ
ஒரு மின்மினியோ
சிறி தானியமோ
என்று ஏதாவதொருபிரியத்தை
மிச்சம் வைத்து விட்டுத் தானே
செல்கிறது

நீங்கள் எவ்வளவுதேடினாலும்
அங்கே
ஒரு கபட புன்னகையை
காணமுடியாது
வேண்டுமானால்
வெது வெதுப்பாக உருளும்
ஒரு வெண்முட்டையை
உள்ளங்கையில் ஏந்தி
உருட்டி விளையாடலாம்