சசிகலா விஸ்வநாதன்/இழப்பு

அத்தனையும்இழந்தேன்;
என நினைத்துக் கண்ணீர் சிந்தி கவலையுற்று இருக்க;
இனி என்ன?
என்னும் அஞ்சுதலில் நான்….

தொலைவில் ரங்கராட்டினத்தில் சிறார்களின் கூவல்
ஆனந்தக் களிப்பு டன்…
அச்சத்துடன் சில குழந்தைகள் கண்மூடி …

அழுகையில்
சில குழந்தைகள்

உயரத்தில் போகையில் அஞ்சுதலின்
உச்சத்தில் உறைந்தும்; அலறியும்

மற்றும் சில குழந்தைகள் உற்சாக கூப்பாடு‌….

மனதிற்குள் மின்னல் ஒளி!

வாழ்வென்னும் சுழற்சியில்,
கீழும்,மேலும் ,
முன்னும்,பின்னும்,
ஊசலாட்டம்;ஒரு இயல்பான நடைமுறை.

எதுவும் முடிவதில்லை;
முடிவில்லா சுழற்சி.
முடிவிலி வகுத்த விதி இது.

வரம்பின்றி போகுமது;
அதன் கதியில்…

அதன் போக்கறிந்து,
மதியால் வெல்ல;
மனம் நின்றாடாமல்,
நிலை பெறும்.

வாழ்வில் …
அஞ்சுவதும் கெஞ்சுதலும் இல்லை.

விஞ்சுவதும் மிஞ்சுவதும் அனுபவம்.

இழப்பும் இழிவும் இல்லை;
உயர்வும் இல்லை.

வாழ்வின் சமன்பாடு அறிய,
தெளிர்ச்சியில் தெளிவோம்.

எதுவும் நம் பார்வையில்.‌‌..
கண்ணோட்டத்தில்;

விழி நீர் துடைத்து
எழுந்தேன்…
தொலைந்த சமன்பாட்டை கண்டறிந்து
மீண்டும் வாழ.

உற்சாகக் கூவலில் களிக்கும்
ரங்கராட்டின பிள்ளைகள் போல்.