இலக்கிய இன்பம் 11

கோவை எழிலன்

காவிரிக்கு வையையோ

சோழ மன்னனின் அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தர். பாண்டிய நாட்டின் இளவரசியோடு சீதனமாய் வந்தவர் புகழேந்திப் புலவர். இருவரும் அவ்வப்போது வாதப்போர் செய்வதுண்டு. அதில் ஒட்டக்கூத்தர் சோழநாட்டிற்கு பாண்டியநாடு நிகரில்லை என நிறுவ முயல்கிறார்.

சோழனின் புரவியான கோரத்திற்கு பாண்டியனின் கனவட்டன் நிகராகுமோ? காவிரிக்கு வைகை நிகராகுமோ? ஆத்தி மலருக்கு வேம்பு நிகராகுமோ? சூரியனுக்கு (சோழர் சூரிய வம்சம்) சந்திரன்(பாண்டியர் சந்திர குலம்) நிகராகுமோ? புலிக்கு மீன் நிகராகுமோ? உறையூருக்கு கொற்கை நிகராகுமோ? சோழநாட்டிற்கு பாண்டிய நாடு நிகராகுமோ? என்று வினாவும் அப்பாடல் இங்கே.

“கோரத்துக் கொப்போ கனவட்ட மம்மானை
கூறுவதுங் காவிரிக்கு வையையோ வம்மானை
ஆருக்கு வேம்பு நிகராகுமோ வம்மானை
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ வம்மானை
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ வம்மானை
வெற்றிப் புலிக்கொடிக்கு மீன்கொடியோ வம்மானை
ஊருக்கு உறந்தைநிகர் கொற்கையோ வம்மானை

ஒக்குமோ

சோணாட்டுக்குப்

பாண்டிநா

டம்மானை”