ம.அரங்கநாதன் அவர்களின் நினைவு நாள்/முபீன்

இன்று எழுத்தாளர் ம.அரங்கநாதன் அவர்களின் நினைவு நாள். அவருடைய சிறுகதைகள் தமிழின் சிந்தனையை மாற்றி அமைத்தவை. அவருடைய குறிப்பிடத்தக்க ஒரு சிறுகதை பற்றி ஒரு சிறு விளக்கம்:

ஜேம்ஸ்டீனும் செண்பகராமன்புதூர்க்காரரும்-
ம.அரங்கநாதன் எழுதிய கதைகளில் குறிப்பிடத்தக்கக் கதை இது.

இதில் இரண்டு தளங்கள் உள்ளன. ஒன்று புனைவு. மற்றொன்று உண்மை. இரண்டு தளங்களிலும் கதை நிகழ்கிறது. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து உருவான இந்தப் பிரதியை வாசிக்கையில் இந்தப் பிளவை அறிவது கதையின் பொருளாம்சத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

இந்தக் கதையில் இருக்கும் அம்சங்களைக் கீழ்க்கண்டவாறு குறித்துக்கொள்ளலாம்:

-செண்பகராமன்புதூரிலிருந்து அமெரிக்காச் சென்ற முத்துக்கறுப்பன்
-ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் டீன்
-கடிதம் எழுதும் ஹாஃப்மேன்
-செண்பகராமன்புதூரில் கடிதங்களைப் பெறும் ஆண்டிப்பிள்ளை

உண்மைச் சம்பவம், ஜேம்ஸ் டீன் கார் விபத்தில் மரணம் அடைந்தது
புனைவு, முத்துக்கறுப்பனும் விபத்தில் மரணம் அடைவது
உண்மை: ஜேம்ஸ் டீன் நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்
புனைவு: முத்துக்கறுப்பனும் இதையே சொன்னது
உண்மை:ஜேம்ஸ் டீன் வானவெளியில் கலப்பதை விரும்பியவர்
புனைவு:முத்துக்கறுப்பனும் அதையே சொன்னது

இந்தக் கதையில் உண்மையும் புனைவும் இணையும் புள்ளி எது என்றால், ஜேம்ஸ் டீன் கார் விபத்தில் மரணம் அடையும் இடம்தான். அது உண்மையில் நடந்த சம்பவம். ஆனால் புனைவுக்குள் அந்த மரணம் வெறும் சம்பவமாக நடக்கவில்லை. முத்துக்கறுப்பன் பாத்திரத்தின் முன் கணித்துக் கூறலின் பேரில் நடந்தது போல் கற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

ஜேம்ஸ் டீன் நட்சத்திரங்களுடன் கலக்கவேண்டிய ஒரு நபர் என்பதால் இனி நடிக்கவேண்டியதில்லை என்ற முத்துக்கறுப்பனின் கணிப்புதான் உண்மையை மாற்றி எழுதியிருக்கிறது. ஜேம்ஸ் டீன் மரணமடைவார் என்று கணித்துக் கூறிய செண்பகராமன் புதூர்க்காரரான முத்துக்கறுப்பன் அதற்குத் தண்டனையாக அதே போன்று அகால மரணமடைந்துவிடுகிறார்.

ஜேம்ஸ் டீன் என்ற உண்மை நடிகருடன் எந்தத் தொடர்பும் இல்லாத முத்துக்கறுப்பன் என்ற பாத்திரத்தை இணைத்து வாசகர்கள் தெரிந்து வைத்திருக்கும் உண்மையுடன் புனைவு கலக்கப்பட்டிருக்கிறது.