புத்தாண்டுப் பழக்கம் / ஆர் வத்ஸலா

அதிகாலையில் எழுந்து போவார் அப்பா
அம்மா சொல்படி காய் கனிகளும்
அதிகம் புளிக்காத கிளிமூக்கு மாங்காய்
(இல்லாவிட்டால் ஏக வெல்லம் இழுக்குமாம்)
வாங்கி வர

பெரிய குடையின் வளைவு பிடி உபயத்தில்
வந்து சேரும் வீட்டிற்கு
சின்னச் சின்ன வேப்பம் பூக்கள் சிரித்தபடி

அம்மா சமைக்க
பூஜையறையை அலங்கரிப்பேன்
நான்

பூஜை முடிந்ததும்
முதலில் மாங்காய்ப் பச்சடி உண்போம்
அம்மா சொல்படி

தட்டோரம் ஒதுக்குவேன்
வேப்பம் பூக்களை
நான்
வழக்கம் போல

அம்மா பச்சடி தத்துவம் சொல்லத் தொடங்குவாள்
வழக்கம் போல
“வாழ்க்கையில் கசப்பும் இருக்கும்னு…”

“பச்சடிலெயாவது ஒதுக்கறேனே!”
என்பேன் நான்
வழக்கம் போல

மௌனம் படரும்
வழக்கம் போல