ப.மதியழகன்/வேஷம்

மனிதனை நினைக்கும்போது
கடவுள் என்பது
கேவலமான ஒரு வார்த்தை
ஆகிவிடுகிறது
கடவுளின் சாயல்
மனிதனென்பது
அதைவிட மிகக் கேவலமானது
அவன் கொடுத்த
வாழ்க்கையென்பது
புழுபுழுத்த மாமிசம்தான்
சுவர்க்கத்திற்காக
அவன் நியமித்த
ஏஜென்ட்கள்
மயானத்தில் கோட்டைகட்டி
மரணத்தைக்கூட
வியாபாரமாக்கிவிட்டார்கள்
அவனுக்கு பொழுதுபோகவில்லை
என்றால் நட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருக்க
வேண்டியது தானே
விளையாட வேண்டுமென்றால்
நிலவினைக் கடலில்
தூக்கிப் போட்டு
விளையாடி இருக்கலாம்
உலகம் என்பது
வேதனையின் கூடாரமாக
இருக்கும் போது
வேதத்தை ஓதிக்கொண்டிருப்பவன்
சாத்தானாகத்தானே
இருந்தாக வேண்டும்
ஓலமிடுபவர்களின் குரல் கூட
கேட்காதவாறு எங்கே
ஒளிந்து கொண்டிருக்கிறாய் நீ
தேடுபவர்களை பைத்தியமாக்கும்
நீ படைத்த உலகம்
வேறெப்படி இருக்கும்
சத்தியம் ஒருநாள்
நிலைபெறுமென்றால்
சாவிலிருந்து நீ கூட
தப்பிக்க முடியாது
நினைவில் வைத்துக் கொள்!