சசிகலா விஸ்வநாதன் /எளியோன்

எளியோன் என்றால்
எள்ளலே வாழ்க்கையாகும்
வலியோன் என்றே
நம்பி;
வலியோனாய் ஆகிவிடு
தலைவனாய் இரு
தாழாமல் இரு
தாழ்மையுடன்
வலியோனாய் இருந்தாலும்
எளிதாய் இரு எளிமையுடன்,
வளமையுடன, வலிமையுடன்,
வண்மையுடன, வன்மையுடன்
உண்மையுடன்:நினைவில்
நிறுத்து;
கடிது ஓச்சி மெல்ல எறிந்து,
தலைவனாய் ஆகும்
கலையைக் கல்.
பிளறினால்தான் வேழம்;
சீறினால்தான் சர்ப்பம்;
கர்ஜித்தால்தான் சிம்மம்;
தன் வலி உணர்ந்து,
உணரச் செய்து,
நீ உயர்; எள்ளல் தவிர்த்த
எளியோனாக, உயர்.

13-4-2024