பி. ஆர்.கிரிஜா/கோகுலின் ஓவியம்

ஐந்து வயது கோகுல் வரைந்த படத்தைப் பார்த்து அவன் அக்கா கிண்டல் செய்ய ஆரம்பித்தாள். ” இது என்ன கோகுல், ஆண் மாதிரியும் இல்ல, பெண் மாதிரியும் இல்ல, ஒரு பொம்மை மாதிரி இருக்கு ஆனா அழகா இல்ல” என்றாள். கோகுலின் முகம் சுருங்கிப் போனது. அவன் தன் அக்காவிடம் பாராட்டை எதிர்பார்த்தான்.
அவன் அப்பா, அம்மாவிற்கு இந்த ஓவியம், படம் வரைவது , இவற்றைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது.
அடுத்த நாள் பள்ளியில் ஏதாவது புது வித ஓவியம் ஓவியப் போட்டிக்கு வரைந்து கொண்டு வருமாறு அவன் வகுப்பு ஆசிரியர் கூறி இருந்தார். கோகுலும் ஆர்வத்துடன் இதை வரைந்து முடித்து முதலில் தன் அக்காவிடம்தான் காண்பித்தான். அவள் இப்படிச் சொன்னவுடன் அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
அப்போது பார்த்து அவன் அப்பாவும் ” பாடத்த படிக்காம என்ன பண்ணிட்டு இருக்க ? ” என்று சிடு சிடுத்தார்.
கோகுலுக்கு கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய் விட்டது.
அதையே நினைத்துக் கொண்டு அப்படியே தூங்கிப் போய்
விட்டான். அடுத்த நாள் காலை எழுந்தவுடன் என்ன ஆனாலும் சரி, இதையே போட்டிக்கு எடுத்துச் செல்வது என்று முடிவு செய்தான். பள்ளிக்குச் சென்ற போது அவன் வகுப்பில் மற்ற நண்பர்களும் படம் வரைந்து கொண்டு வந்திருந்தனர்.
அவற்றை எல்லாம் பார்த்தான் கோகுல்.
அவன் மனதில் சற்றே நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது. மற்றவர்களின்
ஓவியங்களைக் காட்டிலும் தன்னுடையது நன்றாக இருப்பதாக அவன் மனதிற்கு பட்டது.
தன்னுடைய வகுப்பு ஆசிரியரிடம் தன்னுடைய படத்தைக் கொடுத்தான் கோகுல். அவரும் வாங்கி வைத்துக் கொண்டாரே தவிர ஒன்றும்
சொல்லவில்லை. கோகுலுக்கு ஏமாற்றம். அவன் மனது அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.
அப்போது எதிர்பாராமல் ஒருத்தர் உள்ளே நுழைந்தார். உடனே அவன் வகுப்பு ஆசிரியர் ” வணக்கம் ஐயா, என்று
சொன்னதோடு தன் வகுப்பு மாணவர்களையும் வணக்கம் சொல்லச் சொன்னார்.
கோகுலுக்கு புரிந்து விட்டது இவர் ஏதோ முக்கியமானவர் என்று.
வந்தவர் இவன் வகுப்பு ஆசிரியர் கையில் உள்ள ஓவியத்தைப் பார்த்தார். கோகுலுக்கு அப்போதுதான் தெரிந்தது அது தன்னுடைய ஓவியம் என்று. அவர் அதை வாங்கிப் பார்த்து ” ஆஹா, பிரமாதம், இந்த மாதிரி ஓவியம் வெளி நாடுகளில் இருந்தால், மில்லியன் டாலருக்கு ஏலம் விடுவார்கள். இது யார் வரைந்தது? நான் இதை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்” என்றார்.
ஆசிரியரும்
கோகுலை அவருக்கு அறிமுகப்படுத்தினார். அவர் கோகுலை தட்டிக் கொடுத்து மிகவும் பாராட்டினார்.
அவனுக்கு போட்டியில் வென்றால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ அதை விட பல மடங்கு சந்தோஷ அலை அவன் மனதில் பொங்கியது.

One Comment on “பி. ஆர்.கிரிஜா/கோகுலின் ஓவியம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன