ஜெ.பாஸ்கரன்./கனவின் நிஜம்!

கை,கால்,உடல் எல்லாவற்றையும் குறுக்கிக்கொண்டு பெரிய ‘ஜவ்’வாலான குழாயில் வழுக்கிக்கொண்டிருக்கிறேன். அந்தக் குழாயின் வளைவு, நெளிவுகளில் சிக்கி நானும் வளைந்து நெளிந்து வழுக்குகிறேன். என் கால் மற்றும் புட்டப் பகுதியில் குழாய் சுருங்கி, என்னை உள்ளே தள்ளுகின்றது. கைக்குப் பிடிமானம் ஏதும் கிடைக்கவில்லை; குழாயின் சுவற்றில் ஏதோ பசை போன்ற திரவம்!
ஒரே இருட்டு. ஒவ்வொருமுறை தள்ளப்படும்போதும், ‘வெளிச்சம் வருமோ’ என்ற எதிர்பார்ப்பு எனக்குள். வழுக்கும் என் வயிற்றுப் பகுதியில், ஏதோ குத்துகிறது. கையால் தடவிப் பார்க்கிறேன் – சின்ன எலும்புத் துண்டு. எனக்குக் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது.
அடுத்த தள்ளலில் என் தலை, ‘ஜவ்’வுக் குழாயைப் பிதுக்கிக் கொண்டு செல்கிறது. மற்றொரு கையில் சிறியதாய் ஏதோ பறவையின் கால் போல ஒன்று அகப்படுகின்றது.
சுமாராய்த் தெரிந்த வரையில் அந்தக் குழாயின் உட்பக்கத்தில் பல நீளமான விரல்கள் போன்ற சின்னச் சின்ன குழாய்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்குக் கூடக் கண்கள் இருக்கின்றன. கண்களும், உடலும் எரிய, அப்படியே வழுக்கியவன், திடீரென்று குழாயுடன் உருண்டேன்.
சே, என்ன கனவு இது… படுக்கப் போகுமுன் ஒரு பெரிய மலைப் பாம்பு, கோழி ஒன்றை முழுங்குவது போலவும், சின்ன ஆட்டுக்குட்டியை அப்படியே ‘கபளீகரம்’ செய்வது போலவும் ‘வாட்ஸ் ஆப்’ விடியோவில் பார்த்ததின் இஃபெக்ட் – நான் பாம்பின் வயிற்றில் வழுக்கியிருக்கிறேன்!
இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்த காட்டிலாகா அதிகாரி நான். காட்டுப் பங்களாவில் தூங்குவதற்கு முன் இப்படிப்பட்ட வீடியோவைப் பார்த்தது தவறு என்று நினைத்துக்கொண்டேன். கட்டிலில் திரும்பிப் படுத்து தூங்கிப் போனேன்.
என் வயிற்றையும், கையையும் மீண்டும் அந்தப் பாம்பு சுற்றியது. பற்கள் தெரிய வாய் பிளந்து என் தாடையையும், தலை உச்சியையும் வாய்க்குள் பொருத்தி, என்னை உள்ளே இழுக்க முயன்று கொண்டிருந்தது.
மீண்டும் கனவா என சலித்து, கைகளையும் உடலையும் உதறித் திரும்பினேன். ‘பொத்’தென்ற சத்தத்துடன் கீழே விழுந்த மலைப்பாம்பின் திறந்திருந்த வாயில் கொத்தாக என் தலைமுடி!