லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

ஒரு காட்டில் சாது ஒருவர் தண்ணீர் எடுக்கச் சென்று கொண்டிருந்தார்.
பறவைகள் சத்தம் கேட்டு மேலே பார்க்க, பருந்து ஒன்றை பல காக்கைகள் துரத்திக் கொண்டிருந்தன.
பெரிய முரட்டுப் பருந்துதான் அது. ஆனாலும் அதன் வாயிலிருக்கும் இறைச்சித் துண்டிற்காக அத்தனைக் காக்கைகளும் விடாமல் துரத்தின.
சிறிது நேரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் வாயிலிருந்த அந்த மாமிசத் துண்டை கீழே போட, காக்கைகள் கலைந்து அந்த மாமிசத்தை நோக்கிச் சென்றன. பருந்தும் நிம்மதியாய் அருகிலிருந்த மரக் கிளையில் அமர்ந்தது.
இதனைப் பார்த்த அந்த சாது நினைத்தார். இந்த மாமிசமாகிய உடல் பற்று இருக்கும் வரை காக்கைகளாகிய துன்பங்கள் சுற்றிக் கொண்டேதான் இருக்கும். இதனை நீக்கி விட்டால் அமைதிதான்” என்று நினைத்தார்.


இந்தக் கதை ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது.
உடல் பற்று நீங்க வேண்டும் என்றால் “நான்” நீங்க வேண்டும். இந்த உடலும் மனமும்தான் “நான்” என்ற எண்ணத்திற்கு மூல காரணம்.
ரமண மஹரிஷியைப் பற்றி மலையாளத்தில் எழுதிய ஒரு புத்தகத்தை அவரிடம் ஒருவர் கொண்டு கொடுத்தார். “தங்களின் வாழ்க்கை வரலாற்றை இதில் எழுதியுள்ளேன். ப்ரூஃப் பார்த்துத் தர வேண்டும்” என்றார் அவர்.
ரமணரும் அதை சிரமேற் கொண்டு செய்து விட்டு தன் சிஷ்யனிடம் கொடுத்து, இதைக் கொடுத்தவர் வருவார். கொடுத்து விடவும்” என்று சொன்னார்,
அவரது சிஷ்யர் மலையாளி என்பதால், ஆர்வத்துடன் அதனை வாசிக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்திலேயே அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“என்ன ஸ்வாமி, இதில் தங்களைப் பற்றி பல பொய்யான முரண்பாடான கருத்துக்கள் வந்துள்ளது” என்றார்.
அதற்கு உடனே அவர்,”இது மட்டும் மெய்யோ?” என்றாராம் தன்னைக் காட்டி.
மீண்டும் அந்த வேதாந்த வகுப்புக்குச் செல்வோம்.
அன்று வகுப்பை ஆரம்பித்த குரு, “சிஷ்யர்களிடம், எல்லோரும் மரணத்திற்குத் தயாரா?” என்றார்.
சிஷ்யர்கள் ஒருவரையொருவர் விநோதமாகப் பார்த்துக் கொண்டனர்.
அந்த வகுப்பின் சாராம்சத்தைப் பார்ப்போம்.
மனம் +ஈசன்=மனுஷன்
ஒரு டாக்டர் தன் அறையிலிருக்கும்போது ‘உள்ளே” என்றும் வெளியே போயிருக்கும் போது “வெளியே” என்றும் போர்டு இருக்கும்.
அது போல, மனதில். ஈஸ்வரன் நிறைந்திருக்கும் போது, “நான்” எனும் எண்ணம் ஒடுங்கும்.
மனம் தன்னைச் சுற்றியே இருக்கும் போது ஈஸ்வரன் வெளியே போயிருப்பார் என்று சொல்லவும் வேண்டுமா?
இதற்கு தினப்படி நாம் செய்யும் ஒரு செயலே உதாரணம்.
தினமும் இரவு தூங்குகிறோம்.
காலை எழுந்து விட்டு, “நேற்று நன்றாகத் தூங்கினேன்” என்கிறோம். இதை எப்படிச் சொல்கிறோம்? நாம் தூங்கி விட்டாலும், நம்மை ஒருவர் கூர்ந்து பார்த்துக் கொண்டு, கவனித்துக் கொண்டு இருக்கிறார் என்றுதானே அர்த்தம். இதைச் சொல்வதும் அவர்தானே!
நாம் அவருடன் இணைந்து இருக்கும் ஒரு நிலை உண்டு. அதுதான் ஆழ் தூக்க நிலை.
அங்கு நாம் அந்த பிரம்மத்துடன் இரண்டறக் கலந்திருப்போம். அங்கு “நான்” எங்கே போயிற்று?
தூங்கும் போது மஹாராஜாவாயிருந்தாலும் பிச்சைக் காரனாயிருந்தாலும் ஒரே நிலைதானே?
அங்கு நம் சட்டைகளான மனம், உடல் என எல்லாவற்றையும் கழட்டி வைத்து விட்டு பிரம்மத்துடன் கலந்து விடுவோம். ஆவரணங்கள் இல்லாத நிலை. நிர் ஆவரண நிலையான இதுவே நிர்வாண நிலை.
இதையே “தூங்கிக் கண்டார் சிவ லோகமும் தன்னுள்ளே”-என்கிறார் திருமூலர்.
முழித்துக் கொண்டிருக்கும் போதும் இந்நிலையில் இருப்பவர்கள் யோகிகள். ஜீவன் முக்தர்கள்.
இப்படி தனக்குள்ளே தானாக இருக்கும் பிரம்மத்துடன் இணையத் தடையாயிருக்கும் “நான்” (ego) இல்லாமல் போவதே உண்மையான மரணம்.’
என்று முடித்தார் குரு.
இதையே,“செத்தாரைப் போலத் திரி” என்கிறார் திருமூலர்.
அப்படி இருக்க முடியுமா?
இருக்க முடியும்.
அப்படி தன் மனம், உடல் என்று எந்த பிரஞ்கையும் இல்லாமல், இருக்கும் ஆட்டிஸ நிலையாளர்கள் அதற்கு உதாரணம்.
சரி, நான் என்பது இந்த உடல் மற்றும் மனம் இல்லை என்பதை உபநிஷத் எப்படி விளக்குகிறது? பார்க்கலாம்.

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்”

Comments are closed.