லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

அத்வைத சாரம்!

அ-த்வைதம்
என்றால் இரண்டல்ல என்று பொருள். அப்படியானால் இருப்பது ஒன்றே!
என்ன இருக்கிறது?
பரம்பொருள் ஒன்று மட்டும்தான் இருக்கிறது.
“அப்போ, நான், நீ, எதிரில் தோன்றும் பொருட்கள் எல்லாம் பொய்யா?” கேட்கலாம்.
“ஆம். இதெல்லாம் மாயத் தோற்றமே” என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கரர்.
“ஏன்?”
“இதை எல்லாம் எது உனக்குள் இருந்து புரிய வைக்கிறதோ அதுவே சத்யம். அதுவே ஆத்மா. அதுவே உண்மை. அதுவே பிரம்மம். மற்றவை எல்லாம் மாயா. அந்த சத்தியப் பொருள் இல்லாவிட்டால் இது எல்லாம் உனக்குத் தெரியாதே” என்கிறார்.
அது ஒளிர்வதால் எல்லாம் ஒளிர்கிறது. அது ஓடி விட்டால் ஒன்றும் இல்லை.
நேற்று வரை நடமாடிக் கொண்டிருந்தவர் மரணமடைந்த பிறகு, எத்தகைய உயர் பதவியிலிருந்தாலும் “அது” வாகி விடுகிறாரே!
“சிவம் போனால் சவம்”.
நமக்குள்ளிருக்கும் ஆத்மா, உடலை விட்டுக் கிளம்பி விட்டால், எதன் மூலமாக கண் பார்த்ததோ, காது கேட்டதோ அப்போது அதனை அறிய முடியவில்லையே! அந்த சிவம் உடலிலிருந்து ஓடி விட்டால் சவமாய் கிடக்கிறோமே!
அதனால், அதுவே நீ! உனக்குள்ளிருக்கும் உள் ஒளியை உணர்ந்து கொள்” அதுவே ஒவ்வொரு ஜீவனின் குறிக்கோள்” என்கிறார்
ஆதிசங்கர பகவத் பாதாள் ஓர் அறையில் வாசல் பக்கம் முதுகைக்காட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
அப்போது ஒருவர் உள்ளே நுழைவது அறிந்து யார்? என்றார் அவர்.
அதற்கு வந்தவரோ நான்தான் ஸ்வாமி” என்றார்.
“நான்” என்றால்?
திரும்பாமலே என்றார் பகவத்பாதாள்
“நானேதான்” என்று பதில் வந்தது.
அப்போது, அவரை அருகில் அழைத்து, ‘உனக்கு இந்த “நான்” ரொம்ப பிடிக்கும் போலிருக்கே!’ என்றார்.
வந்தவர் நமஸ்கரிக்க, “ஒன்று செய். இந்த “நானை நன்கு விசாரம் செய்து அது இல்லாமல் செய்து விடு.
அது முடியவில்லை என்றால், நான் இல்லை. இருப்பது எல்லாம் நீதான் என்று புரிந்து கொள்-நீ அதுவே-தத்வமஸி” என்று ஆசீர்வதித்தார்.
அவன்,அவள்,அது என்று பிரித்திருந்தாலும் உண்மையில் இருப்பது ஒன்றே! அது பிரம்மம் மட்டுமே! காட்சிப் பிழையாக அது ஒன்றின் மேல் ஏறி அதுவாகத் தோற்றமளிக்கிறது. அதனை விசாரம் செய்தவன், தனக்குள்ளிருக்கும் சித் ஸ்வரூபமே ‘நான்’ என்றுணர்ந்து “அஹம் ப்ரம்மாஸ்மி” என்று உணர்கிறான்.
அது மட்டுமின்றி, தன் ஸ்வரூபத்தைத் தெளிவாக அறிந்த ஞானி, எல்லோரது இதய குகையில்ஒளிரும் ஆத்மாவே இங்கும் இருக்கிறது என்று அகண்ட போதமாகவே இருப்பான்.
“அயம் ஆத்மா ப்ரம்ஹ” என்பதன் பொருள் இதுவே!
அவன் முன் ஒருவர் வந்தாலும் பலர் நின்றாலும் அவனுக்கு அவன், அவள், அது, நீ, நான் என்ற வித்தியாசம் தெரிவதில்லை.
இதையே “புவனமுழுதுமெனதுஅகமுறக்காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி” என்கிறார் அகஸ்தியர் தன் பாடலில்.
“ப்ரக்ஞானம் ப்ரம்ம” என்பதே அவனது அனுபவம்.
அதாவது, ப்ரம்மம் ஒன்றே!
உடல் பற்று அழிந்தவனுக்கு எதிரில்இருப்பவர்களிடையே எந்த ஒரு வித்தியாசமும்இல்லை!
ஒருசாது ஒருவர்ஜன நெருக்கடி உள்ள ஒரு இடத்தில் நடந்து செல்லும் போது, தவறி ஒரு துஷ்டனை மிதித்து விட்டார். அவன் கோபம் கொண்டு அவரை நன்கு அடித்தான். அவர் மயங்கி விழுந்து விட்டார்.
இதனைக் கேள்விப் பட்ட அவரது சிஷ்யர்கள் ஓடி வந்து அவருக்கு தண்ணீர் கொடுத்து விசிறி விட்டார்கள்.
அவர் கண் திறந்து பார்த்தவுடன், சிஷ்யன், “ஸ்வாமி, தங்களுக்குப் பணிவிடை செய்வது யார் என்று தெரிகிறதா?” என்று கேட்டான்.
“இந்த சரீரத்தை அடித்த கை இப்போது பணிவிடை செய்கிறது” என்றார் சாது.
உண்மையான ஞானிக்கு, நண்பன் என்றும் பகைவன் என்றும் கிடையாது. பிரித்தறிய முடியாது. எல்லோரும் ஆத்மாதான் அவர்களுக்கு.
நம் உடலின் ஒவ்வொரு செல்லும் 7 வருடங்களுக்கொரு முறை முற்றிலுமாக மாற்றதுக்குள்ளாகிறது.
இதைத்தான், உபநிஷத் ஸவிகாரம்-நிர்விகாரம் என்கிறது.
அதாவது, நீ மாறுவதில்லை
உடல் மாற்றத்துக்குள்ளாகிறது.
நாம், கையில் புத்தகம் வைத்துள்ளோம்.
இந்தப் புத்தகத்தை வைத்திருப்பது நீயா?
இல்லை.
கண்கள் பார்க்கிறது. புத்தகம் பார்க்கப் படுகிறது.
இதனை உணர்வது நீ.
இதனை, த்ரஷ்டா-த்ருஷ்ய
பார்ப்பவன்-பார்க்கப் படும் பொருள்
இதனை உணர்வது நீ.
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், அதை உணர்கிறீர்கள் என்றுதானே பொருள்.
இதனை, சித்-ஜட
உயிருள்ளது-உயிரற்றது
இதனை உணர்வது நீ
ஏகம்-அநேகம்
உடல் பல்வேறு உறுப்புகளால் மட்டுமின்றி மனம், புத்தி, அகங்காரம், சித்தம், நினைவு என பலவற்றால் ஆன கலவை.
ஆனால் இதனை உணர்வது நீ.
ப்ரத்யக்-பரா
என் உடல் சட்டைக்குள் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் உண்மையில் நீ இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மா. உள்ளிருந்து
அத்தனையும் சாக்க்ஷியாய் பார்த்திருப்பதே நீ.
இதனை மறந்து விடும் போது, உன்னை உடல், மனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறாய். அப்போது துன்பத்துக்கு ஆளாகிறாய்.
நான் உடல், மனம் அல்ல. நான் இந்த உடலை, மனதை உணர்கிறேன் என்பதே மெய்.
உடலுடன் கூடிய உணர்வே நீ.
அது போலவே எல்லா உடலும் உணர்வில் உள்ளது.
எப்படி தண்ணீரின்றி அலை இருக்க முடியாதோ, அது போல, உணர்வின்றி உயிரில்லை.
அத்வைதம் இரண்டு படிகளில் மேலும் சொல்கிறது.

  1. நான் இவ்வுடல் என்பதிலிருந்து
    வெளி வரவும்
  2. எல்லோருக்குள்ளும் ‘நான்’ என்று உணரப்படுவது இந்த பரபிரம்மமே! எல்லோருக்குள்ளும் அது மட்டுமே ஒளிர்கிறது. இதை உணரவும்.
    அதை எப்படி உணர்வது? அதற்குத் தடையாயிருப்பது என்ன? பார்க்கலாம்.
  3. லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன