- புதுவைத் தியாகம்

பாரதியாரது மனம் நாளாக நாளாக யோகம் செய்வதில் ஆவலுற்றது. அவர் வெளி வேஷத்தை வெறுத்தார்; மனம் தீவிர வைராக்கியம் கொண்டது; ஆணவக்கட்டை அகற்றியது. அவரது ஜீவாத்மா பரமாத்மாவை நேரில் காண ஆவல் கொண்டு தவித்தது.
பெரும் வெள்ளத்தைப் போன்று பெருக்கெடுத்து கவிதா விலாஸத்தால் தமிழ்நாட்டிலே ஒரு புதிய ஜீவனைப் புகுத் தினார் பாரதியார். புதுமை உணர்ச்சியும் இதுகாறும் காணாத புதிய கவிதாரஸமும் அவர் வாக்கில் பொங்கி வழிந்தன.
1914-ம் வருஷமாக இருக்கலாம். ‘சுதேசிமித்திரன்’ காரியாலயத்திலிருந்து பாரதியாருக்குக் கடிதம் வந்தது. அவருடைய கட்டுரைகளை ‘மித்திர’னில் பிரசுரிப்பதாகவும், மாதா மாதம் பொருளுதவி செய்வதாகவும் ஸ்ரீமான் ஏ. ரங்கஸ்வாமி ஐயங்கார் அவர்களே வாக்களித்து மனமுவந்து எழுதியிருந்தார். பாரதியாரின் ஹாஸ்யச் சிறுகதைகளும், அறிவை வளர்க்கும் சுவை மிகுந்த கட்டுரைகளும், ‘மித்திர’னை அலங்கரித்தன. அன்று முதல் ‘மித்திர’னுக்கு ஒரு தனி ஒளி ஏற்பட்டு ஜ்வலிக்கத் தொடங்கியது. இன்னிசைத் தீம்பாடல்கள் ‘மித்திர’னில் நடனமாடின. எங்கள் குடும்பத்திலும் ‘லக்ஷ்மி’ வாசஞ்செய்ய ஆரம்பித்தாள். தற்காலிகமாக மனதும்
நிம்மதியடைந்தது. கடிதப் போக்குவரத்து முதலில் சிற்சில விஷயங்களில் காருண்ய அரசாங்கத்தார் சௌகரியம் ஏற்படுத்தித் தந்தனர். நண்பர்களுடனும் கட்டுப்பாடுகளுக் கிடையிலும் சற்றுத் தாராளமாகப் பழகிக் காலங் கழிக்க அனுமதிக்கப்பட்டோம்.
‘காங்கிரஸ் சரித்திரம்’ ஸ்ரீ பாரதியாரால் சுதேசமித் தரனுக்கு எழுதி அனுப்பப்பட்டது. சுமார் ஐம்பது அத்தியாயங்கள் வெளிவந்தன. காலஞ்சென்ற ஜகதீச சந்திர வஸு எழுதிய தாவர சாஸ்திர நூல், ‘ஜீவவாக்கு’ என்னும் பெயரால் தமிழில் ஸ்ரீ பாரதியாரால் மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரமாயிற்று. டாகூரின் சிறுகதைகள் ஆங்கிலத்தில் உள்ளவற்றைத் தமிழில் அரங்கேற்றினார். அதைப் பார்வை யிட்ட சிலர், “பாரதியாரின் மொழிபெயர்ப்பு முதனூலாகவே தோற்றுகின்றதேயன்றி மொழிபெயர்ப் பென்று சொல்ல இயலாது” என்றனர்.
அதற்குள்ளாகத் தேசத்தில் எத்தனையோ மாறுதல்கள் உண்டாகிவிட்டன. அன்னிபெஸண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கம், காந்திஜியின் தென்னாப்பிரிக்கா சத்யாக்ரஹ இயக்க வெற்றி, ஜெர்மனிக்கும் பிரிட்டிஷாருக்கும் யுத்தம் ஆகியவை நிகழ்ந்தன. டாகூர், ஜகதீச சந்திரவஸு, பி.எஸ்.ராய் முதலிய அறிஞர்கள் அந்நிய நாட்டாரால் மதிக்கப்பட்டுச் சிறப்படைந்தார்கள்.
நாளாக ஆக, ஜன்மபூமிக்குப் போய் ‘ஜீவனம்’ செய்யும் காலம் வருமா என்று ஒவ்வொருவர் மனத்திலும் ஏக்கம் உண்டாயிற்று. மனிதம் எதையும் புறக்கணிக்கலாம்; ஜன்ம பூமியை மறக்க முடியுமா? பிறந்த இடத்தைப் பார்க்க வேண்டுமென்று எல்லாருடைய மனமும் தவித்தன. பாரதியாருக்கும் புதுவை வாழ்க்கையில் சலிப்புண்டாகி விட்டது. “சிறை வாசத்துக்குத் தான் ஏன் அஞ்ச வேண்டும்?” என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது. கடைசியாக, ‘என்ன வந்தாலும் வரட்டும்’ என்று துணிந்து 1919-ம் வருஷத்தில் ஒருநாள் புதுவையிலிருந்து புறப்பட்டு, பிரெஞ்சு எல்லையைக் கடந்தோம். கடலூரில் போலீசார் கைது செய்ய வந்தார்கள். “என் பேரில் என்ன குற்றம்? எதற்காக வாரண்டு? அதைச் சொல்லிவிட்டுப் பின்புதான் கைது செய்ய வேண்டும்” என்றார் பாரதியார். போலீசார் என்ன பதில் சொல்ல முடியும்? கடைசியில், “மேலதிகாரிகளின் உத்தரவு” என்று சொல்லிக் கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அந்த சமயம் என் ஸகோதரர்கள் இருவர் என்னுடனிருந் தார்கள். “விசாரணையின்போது பார்த்துக் கொள்ளுவோம்” என்று கருதி நாங்கள் யாவரும் சென்னை நண்பரும் பிரபல வக்கீலுமான ஸ்ரீ எஸ்.துரைஸ்வாமி அய்யர் வீட்டில் வசித்து வந்தோம்.
இருபது நாட்களுக்குப்பின் பாரதியார், “தென்னாட்டில் ஒரு குறிப்பிட்ட ஊரில் வசிக்கலாம்; இஷ்டப்படி சுற்றக்கூடாது; மற்ற ஊர்களுக்குச் சென்றால் கண்காணிப்பு அவசியம்” என்று உத்தரவு பெற்று விடுதலையடைந்து சென்னை வந்து சேர்ந்தார்.
செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்”
Comments are closed.