செல்லம்மா பாரதி /பாரதியார் சரித்திரம்

  1. கடையவாஸம்

விடுதலையடைந்து வந்த பாரதியாரைச் சென்னை யிலிருந்து கடையத்திற்கு அழைத்துச் சென்றோம். பாரதியார் முன்பு சொன்ன வாக்கு மெய்யாயிற்று. புதுவையிலிருந்து வந்ததினால் அதிக சுகமொன்றும் நான் அடையவில்லை. எதிர்பார்த்ததற்கு மாறாகத்தான் பலன் கிடைத்தது.
கடுமையான யோகாப்பியாசத்தினாலும் சகிக்க முடியாத பல கஷ்டங்களாலும் என் கணவரது பொன்நிற மேனி கருகிப் பார்க்கச் சகிக்காமல் எலும்புந் தோலுமாக மாறியது.
‘சுதேச மித்திர’னுக்கு வியாசங்களும் கட்டுரைகளும் பாடல்களும் எழுதியனுப்பிக் கொண்டுதான் இருந்தார். பணமும் ஓரளவு கிடைத்து வந்தது வாஸ்தவமே. ஆனால், அவர் எதிர்பார்த்தபடி ஒரு ‘கலாநிலையம்’ ஏற்படுத்தக் கூடியவாறு இட உதவியோ பொருளுதவியோ கிட்டவில்லை. அப்போதுதான் உலக மகாயுத்தமும் முடிவடைந்த சமயம். கேட்பானேன்! புஸ்தகங்கள் அச்சிட்டு வெளியிடுவதற்கான முயற்சிகள்கூடப் பலனளிக்கவில்லை. பொருளாதார நிலை ஒரு காரணம். மற்றொன்று ‘கலையுணர்ச்சி’ நாட்டில் சிறிதளவேனும் இல்லாதது. மூன்றாவது மக்களைப் பிடித்திருந்த ஆங்கிலக் கல்வி மோகம்.
தமிழ் மக்களுக்குப் பாரதியார் சொன்னதெல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதியது போல்தான் ஆயிற்று.
கடையமோ நகரிக வாஸனையில்லாத ஒரு பிற்போக்கான கிராமம். அவ்விடத்தில் உட்கார்ந்து கொண்டு சமூக முன்னேற்றத்திற்கு ஒருவன் உழைத்தால் அவன் கதி என்னவாகும்? ஆனாலும், கடையவாஸத்தில் பாரதியார் ஆனந்தமடைவதற்குக் காரணங்களுமிருந்தன.
பாரதியார் இயற்கையன்னையின் தெய்வீகத் தோற்றத்தைக் காண ஆவல் கொண்டார். கடையத்தில் அவருக்குப் பிரியமான மலைகளும், ஆறுகளும் உண்டு. பழைய கிராமத்தில் மேற்கோரத்திலுள்ள பட்டர் வீட்டில் நாங்கள் வாஸம் செய்தோம். நாலுபுறமும் விசாலமான வெளியுண்டு. சுற்றடைப்புச் சுவர் மண்ணினாலானது. புளியமரமும் வேப்பமரமும் உண்டு. ஏழைக் குடியானச் சிறுவர்கள் தினந்தோறும் அதிகாலையில் வந்து வேப்பம்பழம் பொறுக்கிக் கொண்டும், அடுப்பெரிக்கப் புளிய இலைச்சருகுகள் அரித்துக் கொண்டும் செல்லுவார்கள்.
ஒருநாள் பாரதியார் அவர்களிடம் சென்று, “சிறுவர் களே! எதற்காக வேப்பம் பழம் பொறுக்குகிறீர்கள்?” என்றார். சாமி, வயிற்றுக்கில்லாததால் வேப்பம் பழத்தைத் தின்கிறோம்” என்றார்கள். அவர்களுடன் தாமும் சேர்ந்து வேப்பங்காயையும் புளியங்காயையும் பறித்துத் தின்றார்.
“பகவானது சிருஷ்டிப் பொருள்கள் யாவும் அமிர்தம் நிறைந்தவை. ‘வேப்பங்காய் கசக்கும்’ என்று மனத்தில் எண்ணுவதனால்தான் கசக்கின்றது. ‘அமிர்தம்’ என்று நினைத்தால் தித்திக்கின்றது” என்று சொல்லி, அன்று முதல் நாவின்பத்தைத் துறந்தார்.
சின்ன வயதில் நெய் சற்று நாட்டமடித்தாலும் அவர் பாத்திரத்தோடு எடுத்துச் சாக்கடையில் ஊற்றி விடுவார். அதிருசியான உணவும், நேர்த்தியான புதிய புதிய ஆடையும் வேண்டுபவரான பாரதியார், மனத்துறவு ஏற்பட்டு ஹரிஜனச் சிறுவர்களுடன் சேர்ந்து வேப்பங்காய் தின்னவும் இடுப்பில் மட்டும் நாலு முழ வேஷ்டி அணியவும் ஆரம்பித்தார்.
கிராமத்திலிருந்து ஆற்றுக்குச் செல்லும் வழியில் பச்சைப் பசேலென்று கண்ணைக் கவரும் எலுமிச்சந் தோட்டங்களும், குயில் கூவும் மாந்தோப்புக்களும், தான்ய லக்ஷ்மி தாண்டவ மாடும் நெல்வயல்களும் பாரதியாரின் கண்களுக்குப் புனிதமான தோற்றம் அளித்தன. ஊருக்கு மேற்கே எங்கே பார்த்தாலும் ஒரே நீலமலைச் சிகரங்கள். அவைகளிலிருந்து விழும் நீர் வீழ்ச்சிகளும், சலசலவென்று ஓடும் சிற்றாறும் அவருக்குப் பரமானந்தம் அளித்தன.
இரண்டு மைல் தூரத்தில் கல்யாணி அம்மன் கோவில் இருக்கிறது. வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் ஆற்றோரத்தில் ‘தட்டப் பாறை’ என்றொரு கற்பாறை உண்டு. அதில் ஏறிக் காலை மாலைகளில் உலாவுவார். அங்கிருந்து ஒரு மைல் சென்றால் ‘வாஸகிரி’ என்ற மலை இருக்கின்றது. மலைமேல் முருகக்கடவுளும், விநாயகரும் கோவில் கொண்டிருக்கின் றார்கள்.
கல்யாணி அம்மன் கோவிலுக்குப் பின்புறமும் மலைகளே உள்ளன. அங்கே சுனைகளும் ரிஷீச்வர்கள் தவம் செய்யும் குகைகளும் உள்ளன. அவைகளுக்கு அருகில் பத்திரகாளி அம்மன் கோவில்; அதன் பக்கத்தில் ஒரு தடாகம். ‘ஜகத் சித்திரம்’ என்ற நூலில் பாரதியார் மேற்படி கோவிலை நன்கு வர்ணித்துள்ளார்.
அதற்கும் மேற்கே நான்கு மைல் தூரத்தில் சாஸ்தா கோவில்; இடையில் ‘சூக்ஷ்மமுடையவர்’ என்ற ஐயனாரின் ஆலயம். எப்படிப்பட்ட சஞ்சல மனமுடையவரானாலும் கூட அந்த இடங்களுக்குச் சென்றால் மனச்சாந்தி ஏற்படுவது திண்ணம்.
பாரதியாருக்கு இரவைத் தவிர மற்ற நேரமெல்லாம் மேலே சொன்ன இடங்களில்தான் கழியும்.

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

2 Comments on “செல்லம்மா பாரதி /பாரதியார் சரித்திரம்”

Comments are closed.