எஸ் வி வேணுகோபாலன்/இருபது ஆண்டு காத்திருத்தல்…

இன்று காலையில்
எழுப்பியவர்
அவராக இருக்குமோ
என்று
தோன்றியது ஒரு கணம்

இராப் பொழுது ஏதோ வாசித்துக் கொண்டிருக்கையில் விளக்கணைத்துவிட்டு
உறங்குங்கள் என்பவர்
விடியல் தூக்கத்தின் ஊடே
வெளிச்சம் போட்டு
எழுப்பிச் சென்றுவிட்டிருப்பார்

அவ்வப்பொழுது
தூங்கிக்கொண்டு
எப்போது பார்த்தாலும்
இயங்கிக் கொண்டிருக்கும்
தேனீ அவர்

வீட்டின்
நறுமண காஃபியைக் காட்டிலும்
பாய்லர் பளபளக்க
உழைப்பாளி
ஒருவனின்
வேக ஆற்றலில்
மிதந்து வரும்
தேநீர்க் கோப்பையின் ஆவி
இழுத்துப் போகும்
இவரது ஆர்வ நடையைக்
கடையை நோக்கி

யாரையோ பார்க்க
என்றில்லாது
எந்தக் காரணமும்
தேவைப்படாது
ஓடிக் கொண்டிருந்த நடையை
ஒரே திசையில் நடந்திருந்தால்
எட்டி இருக்கலாம் இமய மலையை

பாப்பா பொம்மை வாங்கிக்
கொடுத்துக் கொண்டே இருக்கணும்
வீட்டுக் குழந்தைகளுக்கு

தெருவோரத்
தள்ளு வண்டியில்
இஸ்திரி போடுபவருக்கு
அவர் கேட்குமுன்
அடுக்கிப் போய்த்
துணிகளைக்
கொடுத்தாக வேண்டும்
கேட்ட மாத்திரத்தில்
இருநூறு ரூபாய்க் கடனும்

பேரக் குழந்தைகளின்
பள்ளி வாகன ஓட்டிக்குப்
புத்தாண்டு காலண்டர் டயரி
வீட்டு வேலைக்கார
அம்மாவுக்கு ஒரு பத்துரூபாய் நோட்டு
பக்கத்து வீட்டு
வாட்ச்மேனுக்கு
வெற்றிலை பாக்கு
பீடிக்குக் காசு

விகடன் குமுதம்
வாரம் தவறாது
கண்ணில் பட்டாக வேண்டும்
திட்டு விழும் மருமகனுக்கு
எடுத்துப் படிப்பது படிக்காதது
தேனீயின் விருப்பம்

தெரியாதவர் வந்தாலும்
வாய் நிறைய வரவேற்பும்
வாழைப் பழமும்
தம்ளரில் தண்ணீரும்
எடுத்துக் கொடுத்து விட்டு
நடக்கணும் நடையைத்
தனது தேநீருக்கு

எழுந்த நேரத்தில் பூசும் திருநீறு
சாயம் போன
நீல லுங்கி
அந்தந்த வாரத்து
ஆனந்த விகடன்
தெருமுனைக் கடையின்
ஆவி பறக்கும் தேநீர்
……
…….

காத்திருக்கின்றன
இருபது ஆண்டுகளாக

இந்த நாளில்
இயக்கம் நிறுத்திக்கொண்ட
இனிய ஜீவனுக்காக!

(மே 20, 2004இல் மறைந்த என் மாமனார் திரு வி மாத்ருபூதம் அவர்கள் நினைவில்)

5 Comments on “எஸ் வி வேணுகோபாலன்/இருபது ஆண்டு காத்திருத்தல்…”

  1. உண்மையான பதிவு. யாருக்கும் பயப்படாமல் பொதுபணித்துறை பணியாளர், அதன்பலன் பலமுறை மாற்றலாகி அப்பப்பா, நேர்மையான மனிதர்.

  2. மற்றவர்கள் மீது மிகவும் கரிசனமுமம் அன்பும் கொண்ட சிறந்த மனிதர். எனக்கும் இந்த அனுபவம் அவரிடம் கிடைக்கப் பெற்றேன். அலுவலக பணிக்காலத்தில் எத்தனை மாற்றல்கள். அத்தனையும் எதிர்கொண்டு தன் குடும்பத்தார் அனைவரையும் எதிர்கொள்ளும் திறமையை வளர்த்த மாமனிதர்.
    குடும்பத்தினர் அனைவரின் ஆதரவையும் பெற்றது அவரின் சிறப்பு.

  3. உங்கள் வரிகளில் அவரை தெரிந்துகொண்டேன். எளிய வாழ்வு. பிறருக்கு உதவும் குணம். அன்பை அடிப்படை கொண்ட மனம். தேநீர் கடைக்கு செல்வோர் சமுகத்தை உள்வாங்கிகொள்வர். பகிர்வுக்கு நன்றி தோழர்.

Comments are closed.