ஜெ.பாஸ்கரன்/இருமுகம் (அ) நாணல்

சின்னச் சின்னப் பூ போட்ட காட்டன் புடவை, வலது கையில் குட்டி டைட்டன் வாட்ச், கொஞ்சமான ஹைஹீல் செருப்பு, ஓல்ட் ஃப்ளேம் செண்டின் மெல்லிய வாசனை – நந்தினி என்னும் டெர்ரர் வந்துவிட்டாள்! அவள் வந்துவிட்டாலே அலுவலகம் இராணுவ தளமாகிவிடும் – அவ்வளவு ஸ்ட்ரிக்ட் உயர் அதிகாரி அவள்.

“என்ன தாரா, இவ்வளவு டைப்பிங் மிஸ்டேக்ஸ்? பார்த்து டைப் செய்யக்கூடாதா?…. கமான் குவிக், திருப்பி அடித்துக்கொண்டு வா..”

“மிஸ்டர் சிங், இந்த பாலன்ஸ் ஷீட்ல ஒரு மேஜர் தவறு உள்ளதே, கவனிக்கலையா?”

“ஹலோ, நந்தினி ஹியர்.. ஆமாம், அதுக்கு எதுக்குப்பா இன்னும் இரண்டு நாள்? இன்னிக்கே மெசேஜ் குடுத்துட்டு, நைட் ஃப்ளைட்ல திரும்பிடுங்க சரவணன். அவங்க நேரத்தையும், உங்க நேரத்தையும் வீணாக்காதீங்க..”

எதையும் சரியாகச் செய்ய வேண்டும், நேரத்தில் முடிக்க வேண்டும் நந்தினிக்கு.

“முனுசாமி, என்ன வேலை செய்யறீங்க நீங்க? இங்கே பாருங்க, இந்த மூலைல ஒரே டஸ்டு. தினமும் துடைக்கிறதில்லையா?”

நீல வண்ண யூனிஃபார்மில் முனுசாமி, “கவனிக்கலேம்மா. இதோ க்ளீன் செய்துடறேன்.”

மாலை மணி ஐந்து முப்பது. நந்தினி கிளம்பி விடுவாள். லேட்டாக அலுவலகம் வருவது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு லேட்டாக அலுவலகத்தில் தங்கி வேலை செய்வதுவும் – கொடுத்த டைம்ல வேலைய முடிக்கணும் என்பாள் நந்தினி.

அறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த முனுசாமியிடம், “இந்தாப்பா, நாளைக்குப் பிள்ளைக்குப் பீஸ் கட்டணும்னு சொன்னியே, இதை வெச்சுக்கோ”. பணத்துடன் கவர் கை மாறியது. வாங்கிய கை குவிந்தது, மனது வாழ்த்தியது.

“நந்தினி வந்துட்டயாம்மா, வா. மூணு மணிலேர்ந்து ஒரே தலைவலி. நீ ஒரு மாத்திரை தருவியே, அதைக் கொடேன்” மாமியார் சாரதா. வயதானாலும், குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு, ஏதோ தன்னாலான உதவியையும் செய்யும் மாமியார்.

“இதோ தர்றேன் அத்தை. கொஞ்சம் இருங்க, புதுசா டிகாக்‌ஷன் இறக்கி, சூடா ஒரு டம்ளர் காப்பியும் தர்றேன், சரியாய்டும். ஏன் மதியம் தூங்கலையா?”

“இல்லைம்மா. பதினோரு மணி சீரியல் வில்லி படுத்தின பாட்டில் என் மதியத் தூக்கம் போச்சு”

“நந்தினி, மார்க்கெட்ல ஃப்ரெஷா கீரை இருந்தது, இரண்டு கட்டு வாங்கினேன். நாளைக்குக் கீரை மசியல், கீரைத் தண்டு சாம்பார் செய்துடு. எங்கம்மா அந்தக் காலத்துலே கீரை தினமும் செய்வாள்”

“சரிப்பா, செய்துடறேன்.” நந்தினிக்கு மறுநாள் ஆபீசுக்குச் சீக்கிரம் போக வேண்டும். ‘பரவாயில்லை, இரவே கீரை ஆய்ந்து, நறுக்கித் தண்ணீரில் போட்டு வைத்து விடலாம்’ – நந்தினி நினைத்துக்கொண்டாள்.

“அம்மா எப்பவும் இட்லி, தோசை தானா? போரடிக்குது. இன்னிக்கு நைட் வேறெ ஏதாவது டிபன் செய்யேன்..”

“ம்.. என்ன செய்யலாம்? ..ஆ. பாவ் பாஜி?”

“ஹையா.. பாவ் பாஜி ஓக்கேம்மா..” குழந்தைகளின் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்தாள்!

ஏழு மணிக்கு வந்த கணேஷ், கையிலிருந்த மல்லிகைப் பொட்டலத்தைக் கொடுத்து விட்டு, “எல்லாருக்கும் எல்லாம் கேட்டபடி நடக்கிறது இங்கே” என்றபடி கையில் காப்பியை வாங்கியபடி, டையைக் கழுத்திலிருந்து இறக்கினான்.

ஒரு புன்னகையுடன், “உங்களுக்கும் கேட்டது கிடைக்கும்; எப்பொ என்று தனியா வந்து சொல்றேன்” சொல்லியபடியே அவன் ஆபீஸ் சூட்கேஸை ஒழுங்காக வைத்துவிட்டு சமையலறைக்குத் திரும்பினாள்.

வேலைகள் முடிந்து இரவு ஒன்பது மணிவாக்கில் ‘நந்தினி டைம்’ – அவளுக்கான நேரம் -மொட்டை மாடியில் நின்றாள். தூரத்து ஏரியின் குளுமையுடன் காற்று அவளது முகத்தையும் உடலையும் வருடிச் சென்றது.

‘நந்தினி, வாழ்க்கையில் நாணல் போல இரு. எல்லாவற்றுக்கும் வளைந்து கொடு, ஜெயிப்பாய். மூங்கிலாய் இருந்தால் முறிந்துவிடும் வாழ்க்கை’

அம்மாவின் குரல் நந்தினியின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. மூங்கிலாய் எல்லோரிடமும் கடுமையாய் இருந்து, தன் வாழ்வையே தொலைத்த அம்மாவின் இறுதி அறிவுரை.

நந்தினியின் விழியோரங்களில் ஈரம் கசிந்தது.