கும்பகோணமு……/மோகன் ஜி


நேற்று கும்பகோணம் பற்றி ஒரு நண்பர் எழுதியிருந்தார். கும்பகோணம் பற்றிய
ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.
சுந்தரத் தெலுங்கில் ‘கும்பகோணம்’ என்ற வார்த்தை ‘ஏமாற்று, பித்தலாட்டம், ஊழல்’ என்ற எதிர்மறை அர்த்தத்தில் புழக்கத்தில் இருக்கிறது. அதற்கு ஏதேனும் காரணமிருக்கலாம். அல்லது ஊருக்கும் இந்த பிரயோகத்திற்கும் சம்பந்தமேயில்லாமல் கூட இருக்கலாம். இருந்தாலும் ஆந்திரத்தில் இந்த வார்த்தையை எதிர்மறையாகக் கேட்கும்போது, எனக்குள்ளேயிருக்கும் ‘தமிழ்ப் பற்றாளன்’ பொங்கத் துடிப்பான். ஒருமுறை பொங்கியும் விட்டான்.
பல வருடங்களுக்குமுன் ஹைதராபாதில் பணிபுரிந்த போது, ஏதோ ஒரு கூட்டத்தில் பேச அழைக்கப் பட்டிருந்தேன். எனக்குமுன் ஒருவர் தெலுங்கில் உரையாற்றியபோது ‘கும்பகோணமு’ இரண்டுமூன்று முறை சந்தி சிரித்தது. ‘புளக்… புளக்’ சத்தம் கேட்டதா? அமர்ந்தபடி பொங்க ஆரம்பித்திருந்தேன். என் முறை வந்தபோது இப்படித்தான் தெலுங்கில் பேசின தெளிவான ஞாபகம்..
இனி ‘டைரக்ட் ஸ்பீச்’ல….
” பேசும்போது பேராசிரியர் கும்பகோணம் என்ற வார்த்தையை உபயோகித்தது பற்றி எனது சிறிய கருத்தை முதலில் சொல்லிவிடுகிறேன். இங்கு ‘சீ’ படும் கும்பகோணம், தமிழகத்தில் தன்னிகரற்ற புராதான நகரம். மிகப் பழமை வாய்ந்த பெருங்கோயிலகள் நிறைந்த புண்ணியபூமி. புராணங்களில் பிரசித்தி பெற்ற ஊர். பிரளய காலத்தில் அமிர்த கலசத்தை, சிவன் வில்லாலடித்து உயிர்களைத் தழைக்கச் செய்தது இங்கே தான். புனித மகாமகம் நடப்பது இங்கே தான். கணிதமேதை சீனிவாச ராமானுஜன் முதல் பல மேதைகள் வாழ்ந்த ஊர்.
இவ்வளவு ஏன்? சாஸ்திரத்திலேயே நிகரில்லாத இந்த ஊரைப் பற்றி ஒரு சுலோகமே இருக்கிறது. பவிஷ்யோத்திர புராணத்திலே இப்படி சொல்லியிருக்கிறது. கேளுங்கள் :
அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம்
புண்யக்ஷேத்ரே வினஸ்யதி ;
புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம்
வாரணாஸ்யே வினஸ்யதி ;
வாரணாஸ்யாம் க்ருதம் பாபம்
கும்பகோணே வினஸ்யதி ;
கும்பகோணே க்ருதம் பாபம்
கும்பகோணேவ வினஸ்யதி.
அதாவது, ‘பிற இடங்களில் செய்த பாவத்துக்கு புண்ணிய தலங்களில் விமோசனம் உண்டு.
புண்ணிய தலங்களில் பாவம் செய்தால் காசியில் போக்கிக் கொள்ளலாம். காசியில்
செய்யும் பாவங்களுக்கு விமோசனம் கும்பகோணத்தில் தான் இருக்கிறது. கும்பகோணத்தில் செய்யும் பாவத்திற்கு விமோசனமோ, கும்பகோணத்திலேயே கிடைக்கும்’ என்று பொருள்.
நானும் கும்பகோணத்திலேயே ஒரு பாவம் செய்தேன். அப்பாவிப் பெண் ஒருத்திக்கு நிரந்தர அவஸ்தையாக வாய்த்த பாவம்… கும்பகோணத்திலேயே தான் என் கல்யாணம் நடந்தது!
ஆகவே, உங்களில் யாருக்கேனும், ஏதேனும் பாவம் செய்யும் உத்தேசமிருந்தால் அங்கே இங்கே செய்ய வேண்டாம். நேராக கும்பகோணத்துக்கே போய் செய்யுங்கள். பாவ விமோசனம் மட்டுமன்றி, அங்கே ஈடில்லாத முறுகல் ரவா தோசையும், கும்பகோணம் டிகிரி காபியும் கிடைக்கும்”
இதெல்லாம் சொல்லிவிட்டு அப்புறந்தான் பேச வேண்டிய சப்ஜெக்ட்டுக்கே போனேன்.
கும்மோணமா கொக்கா?!