செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

  1. ஐயரும் பாரதியாரும்

ஸ்ரீ வ.வே.சு. அய்யர் சோகரஸமாகக் கதைகள் எழுதுவதிலேயே பிரியம் கொண்டார். “குளத்தங்கரை அரசமரம்” என்ற கதையைப் பாதி எழுதியவுடன் எங்களிடம் படித்துக் காண்பித்தார். மறுநாள் பாரதியார் மட்டும் அவர் வீட்டுக்குப் போயிருந்தார். திரும்ப வீடு வந்ததும், “அப்பா, அய்யர் கதையை எவ்விதம் முடித்திருக்கின்றார்?” என்று தங்கம்மாள் கேட்டாள். “கேட்பானேன்? அந்தப் பேதைப் பெண் ருக்மணியைக் குளத்தில் தள்ளியாயிற்று” என்று சிறிது வருத்தத்தோடு சொன்னார். பிற்காலத்தில் அன்பர் அய்யரின் மரணமும் அதே விதமாகவே நேர்ந்ததை எண்ணும்போது, வியப்பும் துக்கமும் உண்டாகின்றன. அய்யருடைய சொந்தக் கதையே ஒரு சோகரஸக் கதையாக அல்லவா ஆகிவிட்டது?
மனக் கவலையைப் பாரதியார், “வைத்தியர்களின் கண்ணுக்குக்கூடப் புலப்படாத விஷக்கிருமிகளுக்கு உண்டான சக்தியைக் காட்டிலும் அதிக சக்தி படைத்தது” என்று கூறியிருக்கிறார்.
மனத்தின் பலஹீனம் உடம்பைத் தாக்குவதால், தேகமும் தளர்ச்சியடைகின்றது. வைத்தியர்கள் சரீரத்தின் சில வியாதிகளுக்கு இடமாறுதல் வேண்டுமென்கிறார்கள். மன வியாதிக்கும் ஒரு மாறுதல் அவசியம். மனத்திடமில்லாதவர்கள் அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்றோ,மனோதிடமுள்ளவர்கள் மனதினாலேயே பகவானைத் தியானிப்பதிலோ நினைவை மாற்றினால், அதுவே மனநோய்க்கு மருந்தாம்.
ஒருநாள் மாலை மூன்று மணிக்கு பாரதியை மேலே சொன்ன நோய் பீடிக்க ஆரம்பித்தது. இந்த நோய் வரும்பொழுது நாம் மற்றவரைச் சிடுசிடுப்பதிலும், எரிந்து விழுவதிலுந்தான் சாதாரணமாய் நமது மனோநிலையை வெளிக் காண்பிக்கின்றோம். ஆனால் பாரதியோ! “குழந்தைகளே! எனக்கு உடம்பு சரியில்லை; யார் வந்தாலும் மாடிக்கு வரவிடக் கூடாது. பிரும்மாதிகளானாலும் சரி” என்று உத்தரவிட்டுச் சென்றார்.
ஒரு மணி நேரமாயிற்று. சோதனை போல ஸ்ரீ.வ.வே.சு. அய்யர் வந்து சேர்ந்தார். அவசர அவசரமாக மாடிப்படி ஏற ஆரம்பித்தார். ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆக்ஞையினால், ஸனகாதி முனிவர்களை உள்ளே வரவிட மறுத்த துவார பாலகர்களின் நிலையை நாங்கள் அடைந்தோம். பின் சிறிது தயக்கத்தோடு, “அய்யரே! அப்பாவுக்கு உடம்பு சரியாயில்லை. ஒருவரையும் பார்க்க முடியாதென்று சொல்லியிருக்கின்றார்” என்று கூறினாள் தங்கம்மாள். “அப்படியா? என்னைக் கூடவா?” என்று சிறிது வியப்போடு கேட்டார்.
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றோம்.
அதற்குள் கையில் ஒரு காகிதத்தோடும் உற்சாகமான முகத்தோடும் பாரதியார் வந்து, ஐயரை வரவேற்று, அப்போது இயற்றிய கண்ணன் பாட்டைப் பாடிக் காண்பித்தார்:-

தூண்டிற் புழுவினைப்போல் – வெளியே
சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக எனது
-நெஞ்சந் துடித்ததடி.”
“கனவு கண்டதிலே – ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்
இனம் விளங்கவில்லை – எவனோ
என்னகத் தொட்டு விட்டான்.”

“உச்சி குளிர்ந்ததடி! ஸகியே
உடம்பு நேரமாச்சு
மச்சிலும் வீடுமெல்லாம் முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடி.”

செல்லம்மா பாரதி/ பாரதியார் சரித்திரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

3 Comments on “செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்”

Comments are closed.