ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 72/அழகியசிங்கர்


ஆசிரியர் பக்கம்

17..04.2024

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம். 
ஜெகன் :  நேற்று நடந்த கூட்டம் எப்படி நடந்தது?
அழகியசிங்கர் :சிறப்பாக நடந்தது.
மோகினி :மா.அரங்கநாதன் கூட்டம் தானே?
அழகியசிங்கர் :  ஆமாம்.  எனக்கு அவரை முன்றில் ஆரம்பித்த நாளிலிருந்து தெரியும்.  விருட்சம் இதழிற்கும், முன்றில் இதழிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு.  இரண்டும் ஒரே அச்சாபிஸில்தான் அச்சடிக்கப்பட்டது.  முன்றில் அடித்துவிட்டுப் போவார்கள். உடனே நான் விருட்சத்தைக் கொண்டுபோவேன்.
மோகினி : அவர் கதைகளைப் படித்திருக்கிறீர்கள் இல்லையா?
அழகியசிங்கர் : அவர் கதைகளில் பெரும்பாலும் படித்துவிட்டேன்.   வாசகர்களைக் கஷ்டப்படுத்தாமல் இரண்டு அல்லது இரண்டரை பக்கங்களில் கதைகளை எழுதி விடுவார்.  இன்று அவருடைய எறும்பு என்ற கதையைப் படித்தேன்.அவர் உயிரோடு இருந்தால் அவரிடம் சில கேள்விகள் கேட்டிருப்பேன். 
மோகினி :  என்ன சந்தேகம்?
அழகியசிங்கர் :. எறும்பு கதையை அற்புதமாக எடுத்துக்கொண்டு போகிறார்.  ஆரம்பத்தில் பழமொழிகளைக் கேள்விக்கு உட்படுத்துகிறார். ஒரு இடத்தில். 

‘பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னவரா மனுசாத்திரப்படி நிற்க என்று சொல்வார். வேடிக்கைதான் . இது பரிமேலழகர் அருளிச் செய்த உரை. அவர் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர். நிற்க.’ என்கிறார் மா அரங்கநாதன். கதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஏன் இந்த இடத்தில் இதைக் கொண்டு வருகிறார் என்ற கேள்வியைக் கேட்டிருப்பேன்.
ஜெகன் : கதாசிரியர் இப்படி கதைக்குள் நுழைந்து குறுக்கிடுவது சரியில்லை என்று எனக்குப் படுகிறது.
அழகியசிங்கர் : உண்மைதான்.
மோகினி : உட்காரக்கூடச் சிலருக்கு இடம் கிடைக்கவில்லை. அவ்வளவு கூட்டம்.
அழகியசிங்கர் : உண்மைதான். அவர் புதல்வர் நீதியரசர் மகாதேவன் சிறப்பாகக் கூட்டத்தை நடத்திச் சென்றார். எல்லோரும் சொன்ன நேரத்திற்குப் பேசி முடித்தார்கள். மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2024ல் பெற்றவர்கள் தமிழில் தலை சிறந்த 2 தமிழ் அறிஞர்கள்.1. டாக்டர் தெ.ஞானசுந்தரம் 2. கு.மெ.பாலசுப்பிரமணியம்
மோகினி : அவர்களுக்கு வாழ்த்துகள்.
ஜெகன்: இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
அழகியசிங்கர். முடித்துக் கொள்ளலாம்.
(இரவு 10.09)