செல்லம்மா பாரதி/ பாரதியார் சரித்திரம்

  1. ‘பகைவனுக்கருள்வாய்’

புதுவையில் ஒரு சமயம் பாரதியும், அவரது நண்பர் ஒருவரும் ரகசியமாக மேல் மாடியிலிருந்த கீற்றுக் கொட்டகையில் உட்கார்ந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தார் கள். எப்போதும் இடிபோன்ற குரலில் பேசும் சுபாவமுள்ள வர்கள் அன்று மிகச் சன்னமான குரலிற் பேசியது ஆச்சரியத்தை விளைத்தது.
சிறிது நேரத்திற்கெல்லாம் இடைப்பகல் சிற்றுண்டியுண்டு, தேநீர் அருந்தி, தாம்புலந் தரித்து இருவரும் உல்லாசமாக வெளியேறினார்கள். எங்கே செல்லுகிறார்களென்று உரைக்கவில்லை. சாதாரணமாகப் பாபு அரவிந்தர் வீட்டிற்குப் போனால் கூடச் சொல்லி கொண்டுதான் போவது வழக்கம். எனக்கோ அவரைக் கேட்பதற்குத் தைரியமில்லை. ஆனால் மனம் மட்டும் சஞ்சலமடைந்தது. இன்னதென்று விவரிக்க முடியாத வகையில் குழம்பித் தத்தளித்தது.
இரவு சமையலைத் தயாரித்து விளக்கேற்றி, தேவியை நமஸ்கரித்துவிட்டு, அவரின் வருகைக்காகக் காத்திருந்தேன். மணியோ 10, 11, 12 ஆய்விட்டது! அவர் வரவில்லை. நிம்மதியின்றி இரவைக் கிழித்தேன். மறுநாள் காலையிலுங்கூட அவர் வரவில்லை. உடனே வேலைக்காரக் கிழவியை அனுப்பி அரவிந்தர், ஐயர், ஸ்ரீனிவாஸாச்சாரியார் முதலியவர்களை
விசாரித்து வரச் சொன்னேன். நண்பர்களுக்கு இச்செய்தி ஆச்சரியத்தையும் பயத்தையும் ஒருங்கே யளித்தது.
“ஒருகால் அருகிலுள்ள ஊர்களாகிய முத்யால்பேட்டை, மயிலம், வில்லியனூர் முதலிய சிற்றூர்களுக்குச் சென்றிருக் கலாம்” என்று சமாதானப்படுத்தினார்கள்.
“யாருடன் வெளியில் சென்றார்?” என்று கேட்டனர்.
மேற்படி நண்பரின் பெயரைச் சொன்னதும் திடுக்கிட்டு, “இப்படி ஒரு மனிதருண்டா? இம்மாதிரிக் குழந்தை உள்ளத்துடன் இருந்தால் விரோதிகள் படுகுழியில் இறக்கி விடுவார்களே! அந்த மனிதர் பிரிட்டிஷ் சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, சுதேசிகளைப் பிரெஞ்சு எல்லையிலிருந்து ஏமாற்றி அழைத்துச் சென்று, பிரிட்டிஷ் சர்க்காரிடம் பிடித்துக் கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று எல்லோரும் சொல்லுகின்றார்களே! இந்தச் சமயத்தில் அவரை நம்பி, அவர்கூடச் சென்றிருக்கிறாரே? என்ன கெடுதி விளையுமோ, தெரியவில்லையே!” என்று யாவரும் கவலைப்பட்டார்கள்.
எனக்கு அதைக் கேட்டதும் பாதி ஜீவன் போய்விட்டது. என் தகப்பனாரை உடனே வரும்படி தந்தியனுப்பிவிட்டு, பித்துப் பிடித்தவள் போால் ஏங்கியிருந்தேன். அன்றிரவும் கழிந்து, பொழுதும் விடிந்தது. காலை ரயிலில், என் தகப்பனார் வந்திறங்கினார். விஷயத்தைத் தெரிந்து கொண்டு, என்னைப் பார்த்துப், “பைத்தியக்காரி, இதற்காகவா இவ்வளவு பயந்து தந்தியனுப்பினாய்? பாரதிக்கு ஒரு கெடுதலும் நேரிடாது. அவனுக்குத் தீங்கு விளைவிப்பது லேசான காரியமல்ல. பயத்தைவிடு!” என்று தைரியப்படுத்தினார்.
எல்லா நண்பர்களும், ஐந்து நிமிஷத்திற்கு ஒரு தடவை ஆள் அனுப்பி, “பாரதி வந்துவிட்டாரா?” என்று கவலையோடு விசாரித்தனர். பகல் மணி 11 இருக்கும்; தெருவில் ‘பூம் பூம்’ என்று மோட்டார் ஹார்ன் சத்தங் கேட்டது. வாயில் வெற்றிலையும், கையில் புஷ்ப மாலையும், புதிய வேஷ்டி, கோட்டும் தரித்துக் கொண்டு மாப்பிள்ளைக் கோலத்தோடு பாரதியும் அவரது வக்கீல் நண்பர் ஒருவருமாக உள்ளே வந்தனர்.
மாமனாரைப் பார்த்து, “மாமா, எப்போ வந்தீர்கள்?” என்று பாரதியார் உபய குசலம் விசாரித்தார். அவர் விஷயங்களைக் கூறவும், வக்கீல் நண்பர், “ஸ்ரீசெல்லம்மாள் பயந்தது சரிதான். அந்த நயவஞ்சகத் துரோகி ‘உங்களுக்கிருந்த வாரண்டை எடுத்தாயிற்று; சென்னைக்குப் போகலாம்” என்று கூறியதை இவர் நம்பி மோட்டாரில் ஏறிச் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். நான் தற்செயலாகத் திருப்பாதிரிப் புலியூருக்கு அருகில் சந்தித்தேன். எனக்கு அந்த மனிதனுடைய மோசம் ஏற்கனவே தெரியும். சுதேசிகளுக்கு பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த வாரண்டை இன்னும் எடுக்கவில்லை யென்னும் விஷயமும் எனக்குச் சந்தேகமறத் தெரியுமாதலால் மோட்டாரை நிறுத்தி, இவரை என் நண்பர் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகவும், மற்றொரு சமயம் சென்னைக்குப் போய் கொள்ளலாமென்றும் கூறினேன். மேற்படி மனிதருக்கு இது சம்மதமில்லாதபடியால் ஏதேதோ சொன்னார். பாரதி என் சொல்லுக்கு இணங்கிவிட்டபடியால், வேறுவழியின்றி அவர் சென்றுவிட்டார். பின்பு இவரை என் நண்பர் வீட்டில் இருக்குபடி சொல்லிவிட்டு, எனக்கு அங்கு சில அவசர வேலையிருந்தபடியால், அதையும் முடித்துக் கொண்டு, இவரையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தேன். நான் மட்டும் இன்று அவரைச் சந்திக்காவிடில், சிறிது நேரத்திற்குள்ளாகப் பிரெஞ்சு எல்லையைக் கடந்து, இதற்குள் ஜெயிலில் இருந்திருப்பார்” என்று கூறி முடித்தார். எல்லோரும் அவரைப் புகழ்ந்து கொண்டாடினோம்.
இரண்டு நாளைக்கெல்லாம் ஏமாற்றி அழைத்துச் சென்ற நண்பர் திரும்பிவந்தார். பாரதி அவரிடம் கொஞ்சங்கூட வேஷம் பாராட்டாமல் வரவேற்று வார்த்தையாடினார். எனக்குக் கோபம் பொறுக்க முடியவில்லை. முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்து பாரதியார்,

“புகை நடுவினில் தீயிருப்பதை
புவியில் கண்டோமே – நெஞ்சே
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கிறான் – நெஞ்சே”

“தின்னவரும் புலி தன்னையு மன்போடு
சிந்தையிற் போற்றிடுவாய் – நெஞ்சே
அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்
அவளைக் கும்பிடுவாய் நெஞ்சே”

“பகைவனுக் கருள்வாய் – நெஞ்சே
பகைவனுக்கருள்வாய்!”

என்று பாடி முடித்தார்.
மேற்படி மனிதர் எழுந்து பாரதியார் காலில் விழுந்து, “நான் அயோக்கியன்! இன்றுதான் எனக்கு புத்தி வந்தது. என்னை மன்னிக்க வேண்டும். அம்மணி! தாங்களும் க்ஷமிக்க வேண்டும்” என்று கெஞ்சினார். பாரதியார் அவருக்கு ஆறுதல் மொழிகள் கூறி, அறிவுறுத்தினார்.
ஸ்ரீ பாரதியார் ஓர் ஆத்மஞானி. எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருப்பதை நடைமுறையில் நடத்திக் காட்டியவர். பார்ப்பவர்களுக்கு அது ‘பித்தன்’ செய்கையாகத் தோன்றலாம். ஒருசமயம் கழுதைக் குட்டி ஒன்றைத் தோள்மேல் தூக்கி முத்தமிட்டார். அப்பொழுது நாங்கள் அறிவீனத்தினால் அதற்காக இரத்தக் கண்ணீர் சிந்தினோம்! இன்று அதே செய்கைக்காக ஆனந்தக் கண்ணீர் சொரிகிறோம்! அவரது பண்பட்ட மனதை நினைத்துப் புளகாங்கித மடைகின்றோம்!
“வேதம் படித்த அந்தணனிடத்திலும், மாமிசம் தின்னும் புலையனிடத்திலும், பசுவினிடத்திலும், நாயினிடத்திலும், அறிஞர் சமநோக்கு உடையவர்கள்” என்றும் கீதையின் வாக்கியங்களுக்கு ஸ்ரீ பாரதியாரை உதாரணமாகக் காட்டலாம். அவர் தத்துவத்தின் மெய்ப்பொருள்! பாரத நாட்டின் ஜோதி! ரிக் வேதம் படிக்கப் படிக்க அவரது மூளையில் உண்மையாகவே தாம் அக்னி தேவன் ருத்ரகுமாரன் வாயு முருகன் என்றெல்லாம் தோன்றலா யிற்று. அவரது பாடல்களிலும் ஆவேசமும் தெய்வக் கனலும் ஏற ஆரம்பித்தன. ஆன்ம ஒளியில் மூழ்கியிருப்போர்க்கு அச்சம் ஏது! மானாபிமானம் விட்டு, சித்தத்தை பராசக்தியிடம் லயிக்க வைத்து ஏகாந்தமாகத் தவம் செய்வதில் விருப்பம் கொண்டார். தாம் கண்ட சுகாநுபவத்தை உடனே மற்றவர்களுக்கு, தனிமை கண்டதுண்டு; அதிலே சாரமிருக்குதம்மா” என்று உரைப்பார்.
இப்பேர்ப்பட்ட பரமஞானியை யோகியை பித்தனென்று உலகோர் மதித்தனர். ஒருநாள் என் பெண் தங்கம்மாள் மனம் வருந்தி, “அப்பா! எல்லோரும் உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதென்று சொல்லுகின்றார்களே!” என்றாள். அவர் சிரித்து, “ரொம்ப சபாஷ்! பித்தன் என்பது சிவபெருமான் நாமமல்லவா? இதற்கேன் வருந்தவேண்டும்?” என்று கூறினார். “நீ பயப்படாதே அம்மா!” என்று.

“திருவைப் பணிந்து நிதம்
செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே
மகிழ்வுற் றிருப்போ மடி!”

என்ற கிளிக்கண்ணிகளை ஹார்மோனியத்தின் எட்டாங் கட்டை சுருதிக்கு மேல் பாட ஆரம்பித்தார்.

செல்லம்மா பாரதி/ பாரதியார் சரித்திரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “செல்லம்மா பாரதி/ பாரதியார் சரித்திரம்”

Comments are closed.