லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

அகண்டாகாரமும்
மரணமும்!

யாரறிவார் எங்கள் அண்ணலின் பெருமையை
யாரறிவார் அதன் அகலமும் நீளமும்
பேரறியாத பெரும் சுடர் ஒன்று-அதன்
வேரறியாமை விளம்புகின்றேனே!”

என்று திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்.

இன்னது என்று சுட்டிக் காட்ட முடியாத பூரண பிரம்மம். அகண்ட ஜோதியாயிருக்கும் பரபிரம்மத்தை யார் அறிவார் அதை?
அந்த பீச்சுக்குப் போகிறோம். அகண்டமான அதன் வடிவம்பிரமிப்பாகஇருக்கிறது. ஆனந்தமாயிருக்கிறது. அகண்டத்தை உணருகிறோம்.
நமை அறியாமலே அகண்டத்துக்கு (vastness) ஏங்கும் தாபம் நம்முள் இருப்பதால் அகண்டத்தில் ஆனந்தம் கிடைக்கிறது.
என்னதான் ஏர் கண்டிஷன் அறையில் படுத்தாலும், மொட்டை மாடியில் வானத்தை வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டு சிறிது உட்கார்ந்து விட்டு வந்தால், அதன் சுகமே அலாதிதான்.
ஏன்? அகண்டமே ஆனந்தம். அதுவே நம் சுய ரூபம்.
இப்படி கண்ணுக்குத் தெரியும் ஆகாசத்தையும் கடலையும் அளக்க முடியுமா?
நாம் பார்ப்பது அகண்டத்தின் ஒரு திவலைதான்.. அதையே அளக்க முடியாது.
தவம் செய்து ஒரு வருடத்திற்கு ஒரு பாட்டு வீதம் மூவாயிரம் வருடத்திற்கு மூவாயிரம் பாட்டெழுதிய திரு மூலரும் இதைத்தான் மேலே சொல்கிறார்.

“அகலமும் நீளமும் இல்லா அகண்ட பெரும் ஜோதியின் வேர் தெரியவில்லை என்று சொல்கிறேன்” என்கிறார்.

வேதாந்த வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் அந்த குரு.
தன் சிஷ்யனை அழைத்து “அங்கு ஒரு பானை இருக்கிறது, அதில் என்ன இருக்கிறது? பார்த்து வா” என்றனுப்பினார்.
போய் பார்த்து வந்த அவன்”அதில் ஒன்றுமில்லை ஸ்வாமி” என்றான்.
“சரி. நீ போய் பார்த்து விட்டு வா” என்று மற்றொரு சிஷ்யனை அனுப்பினார் அவர்.
“அதற்குள் ஆகாசம் (space) இருக்கிறது ஸ்வாமி என்றான்” அந்த சிஷ்யன்.
“அந்தப் பானைக்கு வெளியே என்ன இருக்கிறது?’ என்றார் குரு.
“ஆகாசம்” என்றனர்.
“அப்போது, இங்கு தடையாயிருப்பது, பானைதான். அதை உடைத்து விட்டால், இரண்டு ஆகாசத்திற்கும் டை வெளி இல்லை அல்லவா?” குரு கேட்டார்.
“அப்புறம் என்ன ஆகும்?” சிஷ்யன் கேட்டான்.
“பானை உடைந்து விட்டால், முதலில் என்ன இருந்ததோ எப்படி இருந்ததோ அது அதுவாயிருக்கும்.” என்றார் குரு.
இந்த உடல் மெய் அல்ல என்றுணர்ந்த வெங்கட்ராமனாகிய ரமண பகவான், திருவண்ணாமலைக்குக் கிளம்பும் போது, கடிதம் எழுதினாராம்.

“என் அப்பாவைப் பார்க்கச் செல்கிறேன் இதைத் தேட வேண்டாம்’ என்று எழுதி விட்டு வெங்கட்ராமன் என்று கையெழுத்து கூடப்
போடவில்லையாம்.
அங்கு பெயர், வடிவம், குணம் எதற்கும் வேலை இல்லை. அந்த அகண்டமே, பர பிரம்மமே, பூரணமே ஜோதிஸ்வரூபமாய் தானே தானாய் ஒளிரும். அங்கு இருப்பது ஆனந்த மயமே! இதுவே சச்சிதானந்தம்!(சத்- சித்-ஆனந்தம்) இதுவே பூரண ஞானம். இதை அடைவதே ஒவ்வொரு ஜீவனின் குறிக்கோள். இதை அடைந்தவனே ஜீவன் முக்தன்” குரு சொன்னார்.
பானை உடைய வேண்டுமென்றால், மரணம் ஏற்பட வேண்டும் அல்லவா?” சிஷ்யன் கேட்டான்.
“ஆம்” என்று புன்னகையுடன் சொல்லி விட்டு அன்றைய வகுப்பை முடித்து விட்டார் அந்த குரு.
அவர்களும் அவரை நமஸ்கரித்து அடுத்த வகுப்புக்கு ஆவலுடன் காத்திருந்தனர்.

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்”

Comments are closed.