லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

அந்த ஐந்து உறைகள்

ஓரு சுடர் மிகும் நவ ரத்தினக் கல்லை ஒரு பானையைப் போட்டு மூடி வைத்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது மட்டுமல்ல, அந்தப் பானை மேல் அழுக்குத் துணி, கல், மண் மட்டும் கைக்கு கிடைத்த குப்பை எல்லாவற்றையும் கொட்டி மூடி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.
அது இருப்பது தெரியுமா?
அது இருக்கும் சுவடே தெரியாது.
அது போல எலும்பு, நரம்பு, மஜ்ஜை, இரத்தம், வாதம், பித்தம், கபம், பிராணன், மனம், புத்தி, அகங்காரம் என்ற குப்பைகளால் அந்த மாணிக்கத்தை மறைத்து வைத்து விட்டு நடமாடுகிறோம் நாம்.
இதையே ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸரும் படக் காட்சிகள் மாறினாலும் திரை அப்படியே இருக்கிறது. துக்கம், இன்பம், சண்டை, சிரிப்பு என்று காட்சிகள்தான் மாறும். திரை அப்படியே இருக்கும்.
சித் ஆகாசம் என்னும் திரையின் மீது ஜகத் என்னும் படம் உண்டாகி அழிந்து கொண்டிருக்கிறது. சினிமா என்னும் படம் உயிரற்ற ஓவியம். ஜகத் (உலகம்) என்னும் படமோ உயிர் ஓவியம். ஏனென்றால் அதற்கு ஆதாரமான சித்ஸ்வரூபத்திடமிருந்து அது சைதன்யத்தை அதாவது உணரும் தன்மையைப் பெறுகிறது.
ஜகத் அல்லது க்ஷேத்திரத்துக்கு அதாவது உலகம் மற்றும் உடலுக்கு அது உயிர் வழங்குவதால் பரமேஸ்வரன் எனப்படுகிறது.
திரையின்றிப் படமில்லை. பரமேஸ்வரனன்றி உலகமில்லை. அப்பரமேஸ்வரனையும் அவன் மயமாக உலகத்தைக் காண்பவனே உண்மையைக் காண்பவன்.
மற்றவர்கள் படத்தை உண்மையென நினைக்கும் குழந்தைகள் போலாகிறார்கள்.
சூரியன் உலகம் முழுதும் சமமாகப் பிரகாசித்து வெளிச்சம் கொடுக்கிறது. ஆனாலும், சிறு மேகம் அதனை மறைத்து நம் கண்ணுக்குத் தெரியாமல் செய்து விடுகிறது.
அது போல மாயையாகிய பொருள் எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளை மறைத்து விடுகிறது.
மாயையை நீக்கிப் பார்ப்பவருக்கு எல்லாம் சச்சிதானந்த ஸ்வரூபமாய் தோன்றும்.
என்று அழகாக விளக்குகிறார்.
இதை தைத்ரீய உபநிஷத் எப்படி விளக்குகிறது? பார்க்கலாம்.
நம் உண்மையான ஸ்வரூபம் ஐந்து கோஷங்களால் (உறைகளால்) போர்த்தப் பட்டு மறைக்கப் பட்டுள்ளன. அதனை விலக்கினால் “நான் யார்?” என்று தெரியும். அவை:
அன்னமய
பிராணமய
மனோமய
விஞ்ஞானமய
ஆனந்த மய என்கிறது.
இதனைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அன்னமய: நாம் சாப்பிடும் உணவே இந்த உடல். உணவுப் பஞ்சம் இருக்கும் எத்தியோப்பிய நாட்டுக் குழந்தைகளைப் பாருங்கள். எளிதில் விளங்கும்.
நன்கு பாலும், தயிருமாய் சாப்பிட்டு வளரும் குழந்தைகளின் ஆரோக்யம் அதன் கண்களிலேயே தெரியும். அதனால் இந்த உடலோ, மினுமினுக்கும் தோலோ, மெலிந்த தேகமோ நான் அல்ல. இன்னும் கொஞ்சம் உள்ளே போக வேண்டும்.
பிராணமய: மூச்சு சீராக இருக்கிறது. அதன் வழியே செல்லும் ஆக்ஸிஜன், இரத்தம் முதலியவை நரம்புகள் வழியே கடத்தப் படுகின்றன. இதனால், உள்ளுறுப்புகள் ஒழுங்காக இயங்குகின்றன.
ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் கல்லீரல் (liver) சுரக்கும் நுண்ணுயிரிகளை (Biochemicals) உற்பத்தி செய்ய சுமார் 500 ஏக்கர் தொழிற்சாலை வேண்டுமாம்.
அப்போது உடல் தேவையான சக்தியைப் பெறுகிறது. பசி, தாகம், சோர்வு, வலிமை எல்லாமே பிராணன்தான். நன்கு மூச்சுப் பயிற்சி செய்பவர்கள் பசியைக் கட்டுப் படுத்த முடியும்.
ஒருவரின் ஆரோக்யத்தில் மிக முக்கிய பங்கு பிராணனுக்கு உண்டு. இதைக் கட்டுப் படுத்தி பயிற்சி பெற்றால் எல்லாவற்றிலும் வெற்றிதான். ஆயுர்வேத சிகிச்சை முறை, பிராணனை மையமாக வைத்து செயல்பட முக்கியத்துவம் கொடுக்கிறது.
பிராணனில் ஏற்படும் மாற்றங்களை உணர்கிறோம். இதுவும் “நான்” அல்ல. இன்னும் உள்ளே போக வேண்டும்.
மனோமய: நாம் நம்மை பெர்சனாலிடியுடன் அதாவது ஆளுமையுடன் தொடர்பு படுத்திக் கொள்கிறோம். நான் இந்த உடல். அது இங்குதான் உணரப் படுகிறது.
ஒரு நாளில் சுமார் 16,000 எண்ணங்கள் தோன்றுகிறதாம் நமக்கு இந்த எல்லா எண்ணங்களாகவும் நாம் இருக்க முடியுமா?
இன்னும் உள்ளே கடந்து போவோம்.
விஞ்ஞானமய: அறிவுத்திறன் இங்குதான் உணரப் படுகிறது. புத்தியின் இருப்பிடமும் இது. நான், எனது, எனக்கானது, எனக்கு என்பதற்கான இடம் இது.
“நான் கண்டு பிடித்து விட்டேன்”. “நான் தோற்று விட்டேன்”, “நான் முடித்து விட்டேன்” என்று மார்தட்டிக் கொள்ள வைக்கும் கோஷம் இது.
இது ஆத்மாவிற்கு மிக அருகில் இருக்கும் கோஷம். ஆத்மாவின் ஒளிர்வால் மின்னிக் கொண்டிருக்கும்.
இது “நான்” அல்ல. இன்னும் கட. உடல் இல்லை, பிராணன் இல்லை, மனம் இல்லை, அறிவு இல்லை. எல்லாவற்றையும் தாண்டி ஆனந்தமய கோஷத்துக்கு வந்து விட்டோமா?
மேலே இருக்கும் இந்த நிலையில்தானே ஆழ் தூக்கத்தில் இருப்போம். மனம், புத்தி,அகங்காரம் எனும் எல்லா சட்டையையும் கழட்டி வைத்திருப்போமே! அங்கு என்ன இருக்கும். ஆனந்தம் இருக்கும். சாந்தி இருக்கும்! நிறைவு இருக்கும்! பூரணத்துவம் இருக்கும்!
இங்கு என்ன இருக்கிறது?
வெங்காயத்தை உரிக்க உரிக்க உள்ளே ஒன்றுமில்லையே என்று தோன்றலாம்.
வித்யாரண்யர் “பஞ்சதசி”யில் இதனை ஒரு சிறிய எடுத்துக்காட்டால் அழகாக விளக்குகிறார்.
அன்னமயத்தால் ஆன இந்தக் கையைத் தூக்க பிராணமயத்தின் சக்தியால் முயல்கிறோம். நான்
கையைத் தூக்க வேண்டும் என்று மனோமயத்துடன் தொடர்பு படுத்திக் கொள்கிறோம்.
தூக்கும் போது, நான் தூக்குகிறேன் என்று விஞ்ஞான மயத்தில் நிற்கிறோம்.
தூக்கியவுடன் ஆனந்தப் படுகிறோம்” என்கிறார்.
அது மட்டுமல்ல, இன்னொரு அழகான கதையையும் இங்கு சொல்கிறார்.அந்த ஆற்றங் கரையில் ஒருவன் மிக சோகமாக உட்கார்ந்திருந்தான்.
அவனிடம் காரணம் கேட்டார் ஒருவர்?
“நாங்கள் பத்து பேர் நீந்தி வந்தோம். ஒருவரைக் காணவில்லை” என்றான் அவன்.
“எங்கே அவர்கள்?” என்றார் அவர்.
“அதோ” என்று காண்பித்தான்.
அவர் எண்ணிப் பார்த்து விட்டு, சரியாகத்தானே இருக்கிறது” என்றார்.
‘இல்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள்” என்றான் அவன்.
“நீயே மறுபடியும் எண்” என்றார் அவர்.
மீண்டும் எண்ணி விட்டு “ஒன்பதுதானே’ என்றான்.
‘எண்ணிய உன்னையும் சேர்த்துக்கொள்” என்றார் அவர்.
“சரிதான் ஐயா! என்று சந்தோஷித்தான் அவன். இது போல்தான் நாமும். இத்தனை கோஷத்தையும் கடக்கும் நாமே ஆனந்த மயம்தான்.
நம் தன்மையே பொருள் ஒன்றைத் தேடி துக்கப் படுவதே!
இது தேடப்படும் பொருள் அல்ல. உணர்வே அதன் ஸ்வரூபம். அதுவே தூய உணர்வு. மேலே போர்த்தப் பட்ட உறைகளை நீக்கி விட்டால், உமி நீக்கிய நெல் போல் உணரப் படும்.
இதன் பெயர்தான் கடவுள். கட+உள்=கடவுள். இந்த உடல், பிராணன், மனம், அறிவு, அகங்காரம் என எல்லாவற்றையும் கடந்து உள்ளே சென்றால் பூரண நிலையான சாந்தியை அடையலாம்!
சர்க்கரையை நீரில் கலந்தாலும் பாலில் கலந்தாலும் இனிப்பு கிடைக்கிறது. இதற்கு ஆதாரம் இனிப்புதான். அது போல உலகில் எதைப் புரிந்து கொள்ளவும் உணரவும் பிரம்மம் வேண்டும்.
இதனையே, ‘சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மம்” என்கிறது வேதம்.
பிறப்பெடுத்த எல்லா ஜீவர்களின் குறிக்கோளும் இதனை அடைவதே!
சரி. ஆட்டிஸ நிலையாளர்களின் இந்த ஞான நிலையைப் பற்றி அடுத்து பார்க்கலாம்.

One Comment on “லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்”

Comments are closed.