அத்வைதமும் ஆட்டிலமும்!
உன்னிலிருந்து இரண்டாவதாக வேறொன்றுமில்லை. இருப்பது ஒன்றே! அது ப்ரம்மமே! என்பது அத்வைதம் என்று பார்த்தோம்.
எனக்கு எதிரில் இருப்பவர் தெரிகிறது. மரங்கள், மனிதர்கள், புத்தகம், பேனா, மேஜை இவை எல்லாம் என்னிலிருந்து வேறு பட்டவைதானே! கேட்கலாம்.
ஆம் உன்னிலிருந்து வேறு பட்டவைதான். ஆனால் அப்படி இரண்டாகத் தோற்றமளிக்க வைப்பது உனக்குள்ளிருக்கும் “நான்” எனும் அகங்காரம்.
எப்படி?
ஒரு குழந்தையின் ஒன்றரை வயதில்“நான்” என்பது உணரப்படுகிறது என்று ஏற்கனவே பார்த்தோம். அது வரை “நான்” உணரப் படாமல் அகண்டாகார விருத்தியில் இணைந்திருக்கும் அது.
“நான்” உணரப் படும் போதுதான் தன்னை உலகிலிருந்து பிரித்து அறியத் தொடங்குகிறது குழந்தை. அப்போதுதான் “எனக்கு” என்ற வார்த்தை ஆரம்பிக்கிறது அதனிடம்.
இவ்வாறு பிரித்தறிய ஆரம்பித்த பிறகுதான், கற்றல் நடக்கிறது. ஐம்புலன்களைக் கொண்டு சிறு சிறு வார்த்தைகள், பொருட்கள் என்று கற்க ஆரம்பிக்கிறது. வாழ்க்கை எனும் ஓட்டப் பந்தயத்தில் முதல் அடியில் வெற்றிகரமாக கால் எடுத்து வைத்து விடுகிறது.
ஆட்டிஸ நிலையாளர்களுக்கு இந்த “நான்” உணரப் படாமலிருக்கும். அதனால்தான் அவர்கள் தங்களை உலகிலிருந்து பிரித்தறிய முடியவில்லை.
பிரித்து அறிந்தால்தான், எதிரிலிருப்பவரோ எதிரிலிருப்பவையோ தன்னிலிருந்து அன்னியம் என்று உணர முடியும். எதிரிலிருப்பவரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும்.
பிரித்து அறியாத நிலையில் அவனும் எதிரிலிருப்பதும் ஒன்றே!
கை கிழிந்த ஒரு பொம்மையைப் பார்த்துக் கதறிய ஒரு ஆட்டிஸ நிலையாளர் இங்கு என் நினைவுக்கு வருகிறார். இவரைப் பொறுத்த வரை, அந்த ஜடப் பொருளும், இவரும் ஒன்றே!
இந்த “நான்” எனும் அகங்காரம் எழுந்தால்தான் ஒருவர் நமைப் போல இயல்பாக இயங்க முடியும்.
“நான்” ஒழிந்த அல்லது இயல்பாக உணரப் படாத நிலையில் அவர்கள் நமைப் போல இயங்க முடியாது.
நமைப் போல மாயையில் உழல விடாமல், “நான்” உணரப் படாத உன்னத நிலை இவர்களுக்கு இவர்கள் அறியாமலேயே ஞானத்தைக் கொடுத்து விடுகிறது.
தன்னிலிருந்து அன்னியமாய் ஒன்றில்லை என்ற நிலையில் தானே தானாய் இருக்கிறான்.
ஆட்டிஸ நிலையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ஒருவரைப் போல் ஒருவர் இல்லை. வயது முதிர்ந்தும் தினப்படிஅலுவல்களுக்கே
பெற்றோரைச் சார்ந்திருப்பவரும் உண்டு. ஓரளவு வேலைகள் செய்யப் பழக்கப்பட்டிருப்பவரும் உண்டு. பல்வேறு
நடத்தைக் கோளாறுகளுடனும் உண்டு. சாந்த ஸ்வரூபியாய் உட்கார்ந்தால் எழுந்திருக்காமல் இருப்பவர்களும் உண்டு.
பிரம்மத்தை அளவிட முடியாது அல்லவா? அதனால், ஆத்மானுபத்தில் திளைத்து தன் மயமாய் இருக்கும் இவர்களையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விடவே முடியாது.
அதனால் குணங்களும் எல்லோருக்கும் ஒரே போல் இருக்காது. ஆனாலும் ஒட்டு மொத்தமாக ஒன்றைச் சொல்லலாம். உலகத்துடன் ஒட்ட மாட்டார்கள் என்பதுதான் அது.
மேலும், பெரும்பாலானவர்கள் பேச்சு இருந்தாலும் பேசுவதில் விருப்பமில்லாதவர்களாயிருப்பார்கள்.
பெரும்பாலான ஆட்டிஸ நிலையாளர்களுக்கு “நான்” என்ற உணர்வு இருக்காது. இந்த அகங்காரம் இல்லாத நிலையே அவர்களை எளிதில் பிரித்துக் காட்டி விடும்.
விஞ்ஞானமயத்தில் “நான், எனக்கு, என்னுடைய, எனைப் பற்றி” போன்றவை உணரப் படுகிறது என்று முன்பு பார்த்தோம்.
சாதாரணமாக, நம் தினப்படி வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சி இது.
காலையில் தூங்கி எழுந்தவுடன், நமக்கு முதலில் தோன்றுவது “நான்” என்ற எண்ணம். அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து அன்றைய அலுவல்கள்.
படுக்கையை விட்டு எழுந்து வருவதற்குள் அன்றைய நாள் முழுவதுக்குமான வேலைகளை அடுக்கி விடும் மனம்.
இந்த “நான்” ஒழுங்காய் உணரப்பட்டால்தான், இந்திரியங்கள் ஒழுங்காய் வேலை செய்யும். அதாவது ஐம்புலன்களான கண், செவி, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகிய ஐந்து முக்கிய புலன்கள் இயல்பாக இயங்க, “நான்” சரியாக உணரப் பட வேண்டும்.
அதனால்தான் இவர்களுக்கு புலனுறுப்புகள் சரியாக உணரப் படுவதில்லை.
இந்த ஐம்புலன்களையும் திறந்து வைத்து நாம் உலகத்திலிருந்து வெளி விஷயங்களை வாங்கிக் கொள்கிறோம்.
ஆனால் ஞானியாய் இருக்க இதனை மூட வேண்டும்.
இதையே ஒளவையார்,
“ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங்காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்தி பேச்சினை அறுத்தே‘
“உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து” என்கிறார் விநாயகர் அகவலில்.
அந்த மோன நிலையை எட்டி விட்டால் பேச்சுக்கு அங்கு இடமில்லை.
“உப்பால் செய்யப் பட்ட சிலையைக் கடலில் கரைத்து விட்டால், பிறகு அது தன் கதையைச் சொல்ல வருமோ?” சமாதி நிலையை எட்டி விட்டால், ஜீவன், ஜெகத், அஞ்ஞானம், ஞானம் இவை பற்றிய ஆராய்ச்சி எல்லாம் அடங்கி விடுகின்றன” என்கிறார் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர்.
சரி, இன்னும் பார்க்கலாம்.
பார்வை நேராக இருக்காது. பேச்சு இருக்காது. இருந்தாலும் குறைவாகவே இருக்கும். செவித் திறன் இருந்தாலும் கூப்பிட்டால் திரும்ப மாட்டார்கள். யாராவது தொட்டாலும் உடனே தெரியாது.
இவர்களுக்கு நண்பன், பகைவன், விருப்பு, வெறுப்பு, ஆசை, போட்டி, பொறாமை, ஆண், பெண் என்று எந்த வேறுபாடும் கிடையாது.
எதிரில் தங்கக் கட்டியையும் கல்லையும் வைத்தால் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாது.
ரத்தினங்களுக்கெல்லாம் ரத்தினத்தின் மகத்துவத்தை அறிந்த பின் இவை எதற்கு?
பேச்சு இல்லைதான்.
அதற்காக, கருத்துப் பரிமாற்றம் இல்லை என்று அர்த்தம் இல்லை. இன்னும் சொல்லப் போனால், வார்த்தை சிறிது புரிய வைக்கும். மௌனம் மிக நன்றாகப் புரிய வைக்கும்.
இதையே ரமணமகரிஷியும், “வாக்கிறந்து நிறைந்து நின்றதோர் வாக்கியப் பொருள்” என்கிறார்.
இந்த ஆத்மானுபவத்தில் திளைக்கும் போது, காலம், நேரம், காரணம், காரியம், பசி, தூக்கம், வலி என்று எதற்கும் அங்கு வேலை இல்லை. இந்நிலையையே,
“செயலற்று இருக்க சிவானந்தம் உண்டாகும்
செயலற்றிருப்போர் சிவ யோகம் தேடார்
செயலற்றிருப்போர் ஜெகத்தோடு கூடார்
செயலற்று இருப்போர்க்கு செய்தி உண்டாமே!”
என்கிறார் திரு மூலர்.
இவர்கள் உலகத்துடன் ஒட்ட மாட்டார்கள். இவர்கள் தேவ செய்தியாளர்களாக செயல்படுவார்கள் என்கிறார்.
இவர்கள் பார்வை, ஞான ஆகாசத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும். அதாவது அவரது மனம் ஒரு முகப் பட்டு உள் முகமாய் இருக்கும். இதுவே சிவ மயம். இதுவே விஷ்ணுவின் பரமபதம். அதனால், நம்மை நேருக்கு நேராய் பார்க்க மாட்டார்கள்.
இவர்களைத் தூற்றினாலும் போற்றினாலும் அவர்களுக்கு ஒன்றுதான்
நான், எனது என்பதான அகங்காரம், மமகாரம் விட்டொழித்த இந்நிலையை, ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்ஸர், “உடம்பிலிருந்து தலை வெட்டப் பட்ட பிறகு சிறிது நேரம் வரை உயிர் இருப்பதைக் காண்பிக்க ஆட்டின் உடல் அசைந்து கொண்டிருக்கிறது. அது போல பரிபூரண நிலையை அடைந்த ஞானியின் அகங்காரம் அழிவுற்ற போதிலும் சரீர சம்பந்தப்பட்ட அலுவல்களை கவனிக்க அகங்காரத்தின் சக்தி கொஞ்சம் எஞ்சியிருக்கிறது. ஆனால் அவனைத் திரும்பவும் உலகத்தோடு இணைக்கக் கூடிய பலம் அதனிடம் இல்லை.” என்கிறார்.
“இப்படி நடமாடுபவனுக்கு எதுவுமே ஆச்சரியத்தைக் கொடுக்காது. அவனுக்கு “தன்யன்” என்று பெயர்” என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கரர்.
“அவன் கை, கால் உள்ள எல்லையற்ற பொருள். அனந்தமாக ஆகாசமாக இருக்கிறான்” என்கிறது யோக வாசிஷ்டம். மேலும்,”அவனிடம் உன் புத்தியுடன் போகாதே. ஹ்ருதயத்தால் தொடர்பு வைத்துக்கொள்’ என்கிறது.
இந்நிலையையே “கடலுக்குள் குமிழி அடங்கும். ஆனால், குமிழிக்குள் கடல் அடங்கும் என்று தெரிந்தவன் பாக்கியவான்” என்கிறார் கபீர்தாஸர்.
உன்னதமான இந்நிலையின் மகத்துவத்தைச் சொல்லாத மஹான்களே இல்லை.
“அகங்காரம் அழிந்த ஞானியின் உடல் வளர்ந்திருந்தாலும் அவன் உள்ளத்தால் என்றும் குழந்தையே” என்கிறார் ராம கிருஷ்ணர்.
எதிரிலிருப்பவனும் தானே என்றுணர்வதால், இவர்களிடையே, மற்றொருவரை அதட்டினால், அது தன்னைத்தான் என்று உணர்ந்து கொள்வதுண்டு.
சரி. இவர்கள் எப்படி இயங்கமுடியும்? பார்க்கலாம் “யாருக்கு செய்வது நான், அனுபவிப்பது நான் என்ற நினைப்பு இல்லையோ, யாருக்கு புத்தி ஒட்ட வில்லையோ, அவன் ஒண்ணுமே பண்ணவில்லை” என்கிறார் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்.
அகண்டாகார விருத்தியிலேயே இருப்பதால், ஜடப் பொருள்களோடு கூட இவர்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இப்படி ஆதி சங்கரர் கூறிய நான்கு வாக்கியங்களையும் எந்த ஒரு வகுப்புக்கும் செல்லாமல், குரு போதனையும் இல்லாமல், தானே தானாய் உணர்ந்து நடமாடிக் கொண்டிருக்கும் சித்த புருஷர்களே இந்த ஆட்டிஸ நிலையாளர்கள்.
சரி, இவர்கள் எப்படி இயங்க முடியும்?
பார்க்கலாம்.
லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்”
Comments are closed.