லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

உணர்வே இருப்பாய்!

உடல் வேறு உயிர் (ஆத்மா) வேறு என்று -பிரித்தறிந்தவன் அகண்ட போதமே உணர்வு
நிலையாய் இருப்பான்.
அதனால்தான் எல்லாவற்றையும் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டும். எந்த ஒரு தகவலும் ஒரே முறையில் அவனை சென்றடையாது.
வலது, இடது தெரியாது. ஒரு சின்ன வேலை செய்வதே கடினம்.
வலி உணர்வு குறைவாக இருக்கும். ஏனெனில் உடலுணர்வு இல்லாமல் (குறைவாக) இருப்பதால்.
அத்வைதமும் ஆட்டிஸமும்
பசி, தாகம் இருந்தாலும் சரியான நேரத்தில் தெரியாது. அளவு தெரியாது. வயிறு நிரம்பியது தெரியாது. அதனால்தான் சிலர் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். சிலர் சாப்பாட்டைப் பார்த்தால் வேக வேகமாகத் திணித்துக் கொள்வதும் உண்டு. அது அவர்களுக்கு ஒரு வேலை அவ்வளவே!
பெரும்பாலும், நேரம், காலம், இடம் குறித்த உணர்வே இருக்காது.
அவர்களின் செயல்பாட்டுடன் ஒப்பிட்டுத்தான் அன்றைய தினத்தை கணக்கிட்டுக் கொள்வார்கள்.
“அன்னைக்கு, யாரோ பெல் அடிக்கறாங்கன்னு வாசல் பக்கம் போயிட்டேன். பாத்ரூமிலருந்து அப்பிடியே வெளில வந்துட்டா. பதறிப் போயிட்டேன், ஏன் மேடம் இத்தன வயசாகியும் இத இவளால புரிஞ்சுக்க முடியல என்று தன் 20 வயதுப் பெண்ணைக் காட்டிச் சொன்னாள் அவள் தாய்“
“அவள் எதைக் கழட்டி வெக்கணுமோ அதக் கழட்டி வெச்சுட்டா. அதுனால அப்படி வெளில் வரது அவளுக்கு விகல்பமா தெரியல. நாம் இன்னும் கழட்டல அதுனால் மாட்டிக் கொண்டு அலைகிறோம்” அப்டீங்கறதுதான் பதில்.
ஏற்கனவே பார்த்தோம். உடல்,மனம்ரெண்டையும் கழட்டி வெச்சுட்டு இவர்கள் நடமாடுகிறார்கள் என்று. அந்த நிர்வாணம்தான் உண்மையான நிர்வாணம்.
“எங்க பேமிலியோட நாங்கள்ளாம் ஷாப்பிங் போவோம், ஹேப்பியா சினிமா போவோம். எவ்வளவு இருக்கோம். இவனுக்கு மட்டும்
இதெல்லாம் ஏன் மேடம் பிடிக்கல. ஒரு ஆசை கூட கிடையாதா?” என்று அங்கலாய்த்தார் ஒரு தாய்.
பசித்தவனுக்குத்தானே உணவு. வயிறு புடைக்க சாப்பிட்டவனுக்கு விருந்து எதுக்கு? அவனால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஐயோ வேண்டாம் .ஆளை விடு! என்றுதானே சொல்வான்.
அதேதான் இங்கேயும். ஏற்கனவே ஆனந்தத்தில் திளைக்கும் போது இந்தக் கூத்தெல்லாம் எதற்கு?
இக்கருத்தையே,

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றும்
நாமம் கெடக் கெடும்”- என்கிறார் திருவள்ளுவர்.

அதாவது, தன்னையே துறந்தவனுக்கு ஆசை எதிலும் இராது என்கிறார்.
இங்கு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்குக் கிடைப்பது மகிழ்ச்சி. இவர்களுக்குக் கிடைப்பது ஆனந்தம்.
இரண்டும் ஒன்றுதானே எனலாம். இல்லை. மகிழ்ச்சிக்கு எதிர் துன்பம் இருக்கிறது. ஆனால் ஆனந்தத்திற்கு எதிர்மறையே இல்லை. ஆனந்தமயம் மட்டுமே. இதனினும் ஆனந்தம் நாம் வெளியில் தேடும் பொருள் எதிலும் இல்லை.
இவர்கள் எதைச் செய்தாலும் நான் செய்கிறேன் நான் அனுபவிக்கிறேன் என்ற எண்ணமே இருக்காது.
‘யாருக்கு செய்வது நான், அனுபவிப்பது நான் என்ற நினைப்பு இல்லையோ, யாருக்கு புத்தி ஒட்டவில்லையோ, அவன் ஒண்ணுமே பண்ணவில்லை” என்கிறார் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்.
அவன் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்ய முடியும்.
“நான்” என்ற அகங்காரம் இல்லாத நிலையில் நமைப் போல் செயல் பட முடியாது.
உதாரணத்திற்கு, அந்த ஆட்டிஸ நிலையாளரின் அம்மா, ஒவ்வொரு மாதமும் உதவித் தொகை வாங்கச் செல்லும் போது அரசாங்க அதிகாரியைப் பார்த்து வணக்கம் சொல்ல மகனை வற்புறுத்துவதுண்டு.
ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார். “எத்தன வருஷமா வாங்கறோம். இன்னும் ஒரு வணக்கம் சொல்லக் கூடப் பழக்க முடியலையே” என்று வருத்தப்பட்டார்.
அவனால் அது முடியாது. நமைப் போல பிளான் செய்ய முடியாது. சமயோசிதமாக, நியாயமாக சிந்திக்க முடியாது.
அந்த நொடியில் அவனால் எப்படி செயல் பட முடியுமோ அப்படித்தான் செயல்பட முடியும்.
(spontaneous action).
அதனால்தான் சடார் சடாரென திடீரென இயங்குகிறான் (impulsivity).
நாம் எத்தனை தயார் செய்து ஒரு இடத்திற்குக் கூட்டிச் சென்றாலும் நாம் எதிர் பார்ப்பது போல் அவர்கள் இயங்க மாட்டார்கள். முடியவும் முடியாது.
இப்படி அவர்கள் உடல், மனதைத் தாண்டி அந்தப் பரம்பொருளுடன் இணைந்திருக்கிறார்கள். நான், எனது ஆகிய அகங்காரம், மமகாரம் இல்லை.
எதிரிலிருப்பவற்றில் விருப்பு வெறுப்பில்லாமல் இருக்கிறார்கள்.
அகண்டாகார விருத்தியிலேயே இருப்பதால், ஜடப் பொருள்களோடு கூட இவர்கள் தொடர்பு ஏற் படுத்திக் கொள்ள முடியும்.
இங்கு ஆட்டிஸ நிலையாளர்களின் மிக முக்கிய குணம் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். என்ன? அடுத்து பார்க்கலாம்.

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்”

Comments are closed.