லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

மனக் குவியலும் இவர்களின்
சிறப்புத் திறமையும்!

அர்ஜூனன் குரு துரோணரிடம் வில்வித்தை கற்று வந்தான். ஒரு மரத்தில் மேல் வைத்த குறியை மற்ற மாணவர்கள் அடிக்க முடியாமல் தோற்றுப் போனார்கள்.
ஆனால், மனதை ஒருமுகப் படுத்தி, அர்ஜூனன் அம்பை எய்தி அதனை அடித்தான். இதனை நாம் அறிந்திருக்கலாம்.
இந்த மனம் ஒரு முகப்படுதல் அல்லது மனக் குவியல் ஆட்டிஸ நிலையாளர்களுக்குக் கை வந்த கலை என்றே சொல்லலாம்.
தான் ஒன்று நினைத்து விட்டால், எப்படியாவது அதனைப் பெற்று விடுவார்கள்.
கண்ணில் தனக்கு வேண்டியது பட்டு விட்டால், கண்ணிமைக்கும் நேரத்தில் அதனைப் பறித்து விடுவார்கள். அங்கு அவர்கள் மேல் கோபம்தான் தோன்றுமே தவிர
அவர்களது மனக் குவியலைப் போற்றத் தவறி விடுகிறோம்.
இதே மனக் குவியல்தான் (mind focussing) அவர்கள் செய்யும் பல்வேறு கலைகளிலும் மிளிர்கிறது.
புதிர் அட்டைகளைப் பொறுத்துவதாகட்டும், ஓவியம், பெயிண்டிங், கை வினைப் பொருட்கள் செய்வது, இசை, தாள வாத்தியங்கள் வாசிப்பது என எல்லாவற்றிலும் இதனைப் பார்க்கலாம்.
இந்த மனக் குவியல்தான் இவர்களுக்கு அகப் பார்வைக்கும் உறு துணையாய் உள்ளது.
அமெரிக்காவில், சுவாமி விவேகானந்தர் சென்றிருக்கும் போது, ஒரு விநோத போட்டி நடந்தது. நூலில் கோர்க்கப் பட்ட முட்டை ஓடுகள் தண்ணீரில் மிதக்க விடப் பட்டன.
தள்ளியிருந்து, அவற்றை துப்பாக்கியால் சுட வேண்டும். இதுவே போட்டி. பலரும் முயன்று தோற்றனர். ஆனால், அதுவரை துப்பாக்கியைத்
தொட்டறிந்திராத விவேகானந்தர், குறி தவறாமல் அத்தனை ஓடுகளையும் சுட்டு வீழ்த்தினாராம்.
எல்லோரும் சூழ்ந்து கொண்டு, அவரிடம் “என்ன துப்பாக்கி இருக்கிறது?. எவ்வளவு நேரம் பயிற்சி பெறுவீர்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு அவர் சிரித்துக் கொண்டு மறுத்து விட்டு, “மனம் குவிந்ததால் சாத்தியமானது” என்றார்.
மனிதருக்குள்ள உணர்ச்சிகள் யாவும் தாவரங்களுக்கும் உண்டு என நிரூபித்தவர், அறிவியல் மேதை ஜகதீஸ் சந்திர போஸ்.
‘அதனை எப்படி தெரிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், “தாவரங்களின் இயல்பைத் தெரிந்து கொள்ள மனதை ஒரு முகப் படுத்தி, குவித்து நானே செடியானேன்” என்றார்.
இயற்கையில், புலன்களுக்கு வசப்படாத, பிரம்மத்தை கண்டறியவும் அவனில் கலந்திருக்கவும் ஒருமை புத்தி முற்றும் உதவுகிறது.
இதையே “ஒரு புத்தி உடையோன் மேலோன்’ என்று கீதையும் கூறுகிறது.
இதனால் கூட, தனக்குத் தேவையான பொருட்களை இவர்களால் கண்டறிய முடியும்.
தனக்குப் பிடித்த கலைகளில் பரிமளிக்க முடியும்.
என் மாணவி ஒருத்தி,” ஜிக் ஸா புதிர்களை பொறுத்தும் திறமையுடையவள். ஆயிரக் கணக்கில் இருக்கும் துண்டுகளைப் பொறுத்தும் போது, குறிப்பாக முடிக்கும் தருவாயில் அன்ன ஆகாரமின்றி, அசையாமல் மனதைக் குவித்து மிக அழகாக முடித்து விடுவதுண்டு.
அதே போல்தான், வாய் ஓயாமல் பேசும் ஒரு மாணவன் ஆரம்பித்த கோட்டோவியத்தை முடிக்கும் வரை ஆழ்ந்த அமைதியில் அதனை முடிப்பதுண்டு.
இது போல பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
இவர்கள் மனதை உள் முகமாகக் கொண்டு செல்வதாலேயே இதெல்லாம் சாதிக்க முடிகிறது.
இது மட்டுமல்ல, கவிதை எழுதுவது, அறிவியல், தத்துவம், முன் பின் அறிந்திராத பல வித மொழிகள் எல்லாவற்றுக்குமே இந்த மனக் குவியலே
காரணமாகும்.
விரிந்தோடும் சூரிய கிரணங்களை கண்ணாடியின் வாயிலாக குவியச் செய்தால், ஒளியும் வெப்பமும் குவிந்து அதிகரிக்கின்றன.
தீ மூட்ட அதன் மூலம் நெருப்பும் கிடைக்கும். அது போல, மனது குவியும் போது எதை எண்ணுகிறதோ அதன் பாவனையை அது விரைவில் எடுக்கிறது. செயலும் திறம்பட்டதாகிறது”
என்று ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார்.
சரி. நாம் எப்படி இயங்குகிறோம்? பார்க்கலாம்.
அது மட்டுமல்ல, நம் இயக்கத்திற்கும் இவர்களுடைய இயக்கத்திற்கும் பாவனையில் வித்தியாசம் உண்டா? பார்க்கலாம்.

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்”

Comments are closed.