
- கர்மத்தில் அகர்மம்!
அது ஒரு அழகான சிறிய குன்று. அங்கு அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார் அந்த சாது.
அவ்வழியே, மாடுகளை மேய்த்து வந்த ஒருவன், அவர் மேல் பரிதாபப் பட்டு, தான் கட்டிக் கொண்டு வந்திருந்த உணவில் கொஞ்சம் கொடுத்தான்.
இது தொடர்ந்தது. அவன் கொடுக்கும் ஒரே வேளை உணவை மட்டுமே அவர் சாப்பிடுவார். இப்படி நாட்கள் பல சென்றன.
அன்று, அவன் கட்டி வந்திருந்த உணவுப் பொட்டலத்தை வழியில் ஒரு குரங்கு பிடுங்கிக் கொண்டு விட்டது.
லெஷ்மி
மிகவும் மன வேதனையுடன் அந்த சாதுவை நோக்கி வந்தான் அவன். “தான் கூட வீட்டிற்குப் போய் சாப்பிட்டுக் கொள்ளலாம். சாதுவுக்கு உணவு கொடுக்க முடியவில்லையே” என்று மிகவும் வருத்தப் பட்டான் அவன்.
அவரிடம் வந்து புலம்பினான். அவரும் புன் முறுவலுடன், ‘அதனால் என்ன? , நான் கிளம்ப இருப்பது குரங்கிற்கு தெரிந்து விட்டது!’ என்றார் சிரித்துக் கொண்டே!
“என்ன சொல்றீங்க சாமி?” எனக்குப் புரியல என்றான் அவன்.
“நான் இன்று இங்கிருந்து கிளம்பப் போகிறேன்”, என்றார் அவர்.
“முடியாது. இன்னைக்கு என் கையால உணவு குடுக்காம நான் இங்க இருந்து கிளம்ப மாட்டேன்’ என்றவன், இப்போ வந்துடறேன்” என்று சொல்லிச் சென்றான்.
சிறிது நேரத்தில் வந்தவன்,
கையில் கிழங்குகள், சோளம், நெருப்பு, பானை என்று சமையல் செய்ய கிடைத்தவற்றைச் சேகரித்து வந்திருந்தான்.
‘அட இவ்வளவு சம்பாதிச்சுட்டியா?” என்றார்சாது.
“பாதி மலை ஏறும் இடத்துல இருக்கும் ஒரே ஒரு குடிசை என் நண்பனோடதுதான். அவனிடம் கிடைச்சது” என்று சொல்லிக் கொண்டே
கல்லைக் கூட்டி அடுப்பை மூட்டினான். அருகிலிருந்தமரக்கிளைகளைஒடித்து விறகாக்கினான்.
பானையை அடுப்பில் ஏற்றி, கொதிக்கும் நீரில் கிழங்குகளையும் சோளக் கதிர்களையும் போட்டான்.
அதற்கிடையில்,”சாமி, எங்க போறீங்க?” என்றான்.
‘கால் போன போக்கில் போக வேண்டியதுதான்” என்றார் சாது.
“சாமி, எனக்கு ஒரு ஆசை” என்றான் அவன்.
‘என்னப்பா? சொல்லு! நானே இத்தனை நாள் உன்னிடம் பிக்க்ஷை வாங்கிக் கொண்டதற்கு உனக்கு ஏதாவது செய்ய வேண்டும்.” என்றார் அவர்.
“எனக்கு உபதேசம் ஏதாவது சொல்லணும் சாமீ’ எனக்கு ஏதாவது ஏறுங்களா? நான் படிக்காதவன்” என்றான் அவன்.
அவனிடமிருந்து இந்த வேண்டுதலை அவர் எதிர்பார்க்கவில்லை. சொத்து, சுகம் இல்லாதவன் அதைக் கேட்காமல் உண்மையான சுகத்திற்கு ஆசைப் பட்டது குறித்து சந்தோஷப் பட்டார் அவர்.
விறகை அடுப்பினுள் தள்ளி விட்டான்.
அதனைப் பார்த்த சாது, “பானை சூடா இருக்கா?” என்றார்.
“ஆமா சா சாமீ தொட முடியல” என்றான்.
“உள்ளே சூடு ஏறி விட்டதா?” என்றார்.
”ஆமா சாமீ, பாதி வெந்து போச்சு” என்றான்..
சாமிக்கு பாவம் பசி போல என்று எண்ணிக் கொண்டே,”இப்ப ஆயிடும்” என்றான் அவன்.
சமைத்து இறக்கினான் அவன்.
“இங்கே உட்கார்” என்றார் அவனை.
“உன் சரீரம் பானையைப் போன்றது. உன் மனம், புத்தி, புலனுறுப்புகள் எல்லாம் அதில் போடப் பட்ட கிழங்கு, நீர் மற்றும் தானியங்களாகும்.”
எரியும் அடுப்பில் இதனை ஏற்றினால் இவை சுடும். ஆனாலும் இச்சூடு உண்மையில் பானையினுடைய சூடும் அல்ல. அதில் இட்ட பொருட்களின் சூடும் அல்ல. அதற்கு சூடு கொடுத்தது நெருப்பு.
அது போலவே மனிதனிடம் உள்ள பிரம்மத்தின் சக்தியால்தான் அவனுடைய மனம், புத்தி மற்றும் புலனுறுப்புகள் வேலை செய்கின்றன. இதை மட்டும் மறந்து விடாதே!” என்று முடித்தார்.
அதனைக் கேட்ட அந்த இடையன் அவரை நமஸ்கரித்து, அவருக்கு உணவு பரிமாற ஆரம்பித்தான்.
“செயலை நாம் செய்கிறோமா? அல்லது முன்னமே அது திட்டமிடப் பட்டு விடுகிறதா?” என்று அறிய ஒரு அறிவியல் சோதனை மேற் கொள்ளப் பட்டது.
நரம்பியல் துறையில் மிகச் சிறந்த விஞ்ஞானி பெஞ்ஜமின் லிபெட் ஆவார்.
1983ல் இவர் இச்சோதனையை மேற் கொண்டார்.
நரம்பியல் துறையில் மிகச் சிறந்த விஞ்ஞானி பெஞ்ஜமின் லிபெட் ஆவார்.
ஒரு குழுவை அமர வைத்து, இப்போது எல்லோரும் கை தூக்கவும் என்று அறிவுறுத்தினார். அது மட்டுமல்ல, கை தூக்குவதும் தூக்காமல் இருப்பதும் அவரவர் இஷ்டம்.” என்றார்.
ஒவ்வொருவருக்கும் கை தூக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் நேரம் குறிப்பிடப் பட்டது.
அவர்கள் தூக்கலாமா வேண்டாமா என்று நினைப்பதற்கு முன்பே மூளையில் செயல்பாடுகள் நடக்கின்றன. இதனை ஈ ஈ ஈ ஜி (EEG) பரிசோதனை உறுதிப் படுத்தியது.
ஒருவர் கை தூக்கலாம் என்று நினைப்பதற்கு முன்பே, அதற்குரிய மூளை மின் தூண்டல் நடை பெற்று விடுகிறது. அதற்குப் பிறகுதான் அவருக்கு அந்த உந்துதல் ஏற்படுகிறது என்று அறியப் பட்டது.
மற்றொருகுழுவுக்கு வேறு செயல்பாடுகொடுக்கப் பட்டது. அவர்களது செயல்பாடுகள் எம்.ஆர்.ஐ. (MRI) எனும் பரிசோதனை மூலம் கண்காணிக்கப் பட்டது.
அக் குழுவினருக்கு இடது, வலது பட்டன்களை அழுத்துவதற்கு அறிவுறுத்தப் பட்டது.
இப்போது, மூளையின் குறிப்பிட்ட பகுதியின் தூண்டலைப் பார்த்து,
அந்த மெஷினை இயக்கும் டெக்னீஷியன்களே சொல்கிறார்களாம், “இவர் வலது பட்டனை அழுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப் போகிறார்” என்று.
தீர்மானிப்பதற்கு முன்பே அங்கு திட்டம் எடுக்கப் பட்டு விடுகிறது.
பிரம்மத்தின் சக்தியால் நம் புத்தி முடிவு செய்து முடிக்கும் அந்த வேலைகளை எல்லாம் நாம் செய்வதாக நாம் மார் தட்டிக் கொள்கிறோம்.
இச்சோதனையைச் செய்து ஆச்சரியமடைந்த பெஞ்ஜமின் லிபெட் சொல்கிறார், “நான் குதிரையில் வேகமாக சென்று கொண்டிருக்கிறேன். இடையில் நிறுத்தி “எங்கே போகிறாய்?’ என்று கேட்டால், எனக்குத் தெரியாது. குதிரையைக் கேள் கேள் என்று
சொல்ல வேண்டும். ஆனால், நாம் எல்லோரும் குதிரை நாம்தான் என்று நினைத்துக் கொள்கிறோம். உங்கள் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொன்னது சர்வ நிச்சயம்” என்கிறார் அவர்.
ஸ்ரீ கிருஷ்ணர் என்ன சொல்லியிருக்கிறார்?
‘அக்கினி இருக்குமிடத்தில் வெப்பம் உண்டு. அது போல பிரம்மத்தின் சந்நிதானத்தில் வேலை நடக்கிறது. இயற்கையே எல்லா செயல்களுக்கும் மூல காரணம். ஆனால், இங்கு பிரம்மம் எந்த வேலையும் செய்வதில்லை. உடலை ஆத்மாவிலிருந்து பிரித்தறிந்த பிரம்ம ஞானி, தான் எதுவும் செய்யவில்லை என்றே நினைத்திருப்பான்.
இவ்வறிவு இல்லாதான் செய்வதெல்லாம் தானே என்று நினைத்திருப்பான்.” என்கிறார்.
இக்கருத்தை பகவத்கீதையில் மூன்று இடங்களில் ஆணித்தரமாகச் சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
அழியக்கூடிய இந்த உடல் இயற்கையைச் சார்ந்தது. இங்கு முடிவு செய்யும் புத்தியும் செயல் படுத்தும் உடலும் இயற்கையே!
இதையே ஸ்ரீஇராம கிருஷ்ண பரம ஹம்ஸரும், “உடலாகிய இந்த இயந்திரத்தை இயக்குவது கடவுள்” என்று அறிந்தவன் பிரம்ம ஞானி. ஜீவன் முக்தன்.” என்கிறார்.
இதனை நன்கு அறிந்த ஆட்டிஸ நிலையாளர்கள்தான் செய்த வேலையை அஜய் செய்தான். வித்யா செய்தாள் என்றுதான் தன் பெயரை முன் நிறுத்திச் சொல்லிக் கொள்வார்கள்.
நாம்தான், “நானே” செய்தேன் என்று சொல்லிக் கொள்வோம்.!
இப்படி ஆதி சங்கரர் கூறிய நான்கு வாக்கியங்களையும் எந்த ஒரு வகுப்புக்கும் செல்லாமல், குரு போதனையும் இல்லாமல், தானே தானாய் உணர்ந்து நடமாடிக் கொண்டிருக்கும் சித்த புருஷர்களே இந்த ஆட்டிஸ நிலையாளர்கள்!
உலகெங்கும், குறிப்பாக நம் பாரதத்தில் எத்தனையோ மஹான்கள் இருந்திருக்கிறார்கள். இருந்து கொண்டிருக்கிறார்கள்.
என் மாணவர்களின் சில விசித்திரமான நடவடிக்கைகள் என்னையுமறியாமல், அவர்களுடன் ஒப்பிடச் செய்யும். அப்படி ஒரு சிலரை அந்த மஹான்களுடன் ஒப்பிட்டுள்ளேன்.
வரும் அத்யாயத்தில் பார்க்கலாம்.
லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
