யூஜின் கில்லெவிக்/கவிதைக் கலை


தமிழில் : க மோகனரங்கன்

நான்
எனக்காக பேசுவதில்லை.
என் பெயரில் பேசுவதில்லை. என்னைப் பற்றியதுமல்ல இது.
நான் ஒன்றுமில்லை
கொஞ்சம் வாழ்க்கை,
நிறைய பெருமை
அவ்வளவுதான்.

எதற்கு வடிவம் உள்ளதோ
எவற்றிற்கு வடிவம் இல்லையோ
எல்லாவற்றிற்காகவும்
நான் பேசுகிறேன்.
நான் கனமானவற்றிற்காக மட்டுமல்ல
எடையற்றவற்றிற்காகவும்
பேசுகிறேன்.

என்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் குறித்து அறிவேன்.
தொடர்ந்து மேலே செல்லவும்
இன்னும் முழுமையாக வாழவும்
விரும்புகிறேன்.
இறக்கவேண்டிவந்தால்
இன்னும் ஆழமாக இறக்கவும்
விழைகிறேன்.

எனவே
என்னுடைய வார்த்தைகளை,
என் குரலில் உங்களுக்குள்
நீங்கள் கேட்கிறீர்கள்
என்று நினைக்காதீர்கள்.
இது எதிர்காலத்தை நோக்கி
நகரும் நிகழ்காலத்தின் குரல்,
உங்கள் சொந்த தோலுக்கு
அடியிலிருந்து எழும் குரல்.