ராம் மோகன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்?/அழகியசிங்கர்

இந்தக் கேள்வி ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்தநாள் போதும், நினைவு நாள் போதும் தோன்றி கொண்டே இருக்கும்.
அவர்தான் ராம் மோஹன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் ஸ்டெல்லா புரூஸ்.
காளி-தாஸ் என்ற இன்னொரு பெயரில் கவிதை எழுதுவார். அவர் தற்கொலை செய்துகொண்டு 15 ஆண்டுகள் பறந்து விட்டன.

ஆரம்பத்தில் அவருடைய கவிதைகள் ஆத்மாநாமை ஆசிரியராகக் கொண்ட ழ என்ற இலக்கியச் சிற்றேட்டில் வந்தன.

எளிமையான வரிகளைக் கொண்ட ஆழமான கவிதைகள். கவிதைகள் மட்டுமல்ல ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் ஆனந்த விகடனில் பிரபலமானவர். அவர் ஒரு ஓவியர். ழ சிற்றேட்டில் பல ஓவியங்கள் வரைந்துள்ளார்.

காளி – தாஸ் என்ற பெயரில் கவிதை எழுதியவர். விருது நகரில் நாடர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

ஆரம்பத்தில் அவரைப் பார்ப்பவர்களுக்கு முரட்டுத் தனமாக தோற்றம் அளிப்பார். இருந்தும் அவருக்கு குழந்தை மனது. அவர் வாழ்க்கயில் நடந்த சின்ன சின்ன நிகழ்ச்சிக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுவார்.

புத்தகம் படிப்பது, நல்ல இசையைக் கேட்பது, நண்பர்களுடன் பேசுவது இதைத்தான் அவர் செய்துகொண்டு வந்தார்.

பிஸினஸ் மூலம் அவருக்குக் கிடைத்த பெரிய தொகையை வங்கியில் சேமித்து அதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் எளிமையாக வாழ்ந்தார்.

உண்மையில் அவருடன் என் நட்பு தொடர்ந்தபோது எளிமையாக வாழ்வது எப்படி என்று அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

அவர் ஊரான விருது நகரிலிருந்து குடும்பத்தை விட்டு வெளியில் வந்து தனியாக வாழ்ந்தவர்.

சென்னை மேன்ஷனில் அறை வாசியாக பல ஆண்டுகள் வாழ்ந்தவர். அடிக்கடி ஊருக்கும் போவார். சில மாதங்கள் அப்பா அம்மாவுடன் அங்கும் தங்குவார்.

அவர் குடும்பத்தில் ஒவ்வொருவரும் மாமிசப் பிரியர்கள். இவர் வித்தியாசமானவர். மாமிசத்தைத் தொட மாட்டார்.

ரொம்ப வருடம் அவர் திருமணம் செய்துகொள்ள
வில்லை. அவர் தந்தை காங்கிரஸ் தலைவர் காமராஜுக்கு நண்பர். அவர் மூலம் ஸ்டெல்லா புரூஸை திருமணத்திற்குத் தூண்டியவர்.

திருமணமே செயதுகொள்ளாத பிரம்மச்சாரியான காமராஜ் தனக்குக் அறிவுரை கூறியதை எள்ளல் தன்மையுடன் கட்டுரை எழுதி கிண்டல் செய்திருந்தார்.

இக்கட்டுரையைத் தொடர்ந்து நாளை எழுதுகிறேன்.

இதை முடிப்பதற்குமுன்
அவருடைய கவிதை ஒன்றுடன் முடிக்கிறேன்.

மண்

காளி-தாஸ்

மண்ணில் உட்கார்ந்ததும்
சொந்தம்
இயல்பாக ஒட்டிக்கொள்கிறது
அதன் மௌனம்
அமைதி
நிறம்
கொஞ்சமும் தலையிடவில்லை
எத்தனை தூரம் கடந்தாலும்
உடன் இருக்கிறது
கவனித்துக் கொண்டே இருக்கிறது
……ஒருநாள்
மண்ணோட மண்ணாகிவிட
ஆதங்கம் வந்தது
சாய்ந்தேன்
மண்ணே இல்லாமல் ஆகாயம் தெரிந்தது

(இன்னும் வரும்)