சசிகலா விஸ்வநாதன்/ராதா



ராதாவும் மஹேஸ்வரியும் சமையலறையில் மும்முரமாக வேலையில் இருந்தார்கள்.சாமிநாதன் ஹாலில் கையில் செய்தி தாளுடன்.
“அப்பா! மேல் அலமாரியில் இருந்து மஞ்சள் பொடி எடுத்துக் கொடுங்க” என்றதும் அவர் வந்து எடுத்துக் கொடுத்தார்.
” அப்பா ! ஸ்டவ்வை கொஞ்சம் மீடியத்தில் வைங்களேன்” “இதோம்மா” என்று அவர் அடுப்பைக் தணித்தார்
“அப்பா! நாம் போய் காய்கறி வாங்கி வரலாமா”, என்று கேட்டு விட்டு, பதிலுக்குப் கூட காத்திராமல், “பையை எடுத்திட்டு , அப்படியே என் பர்ஸையும் எடுத்திட்டு வந்திருங்களேன்”., என்றாள்.
ஏன் ராதா? நான் பக்கத்தில் தானே இருக்கேன்;என்னிடம் ஏதும் சொல்லாமல் அவரை ஏன் கூப்பிடுகிறாய்? நான் செய்ய மாட்டேனா”,என்று மகேஸ்வரி சொன்னது, அவள் காதில் எங்கே ஏறிற்று? செவிடன் காதில் ஓதிய சங்குதான்.
ஏற்கனவே அவர் ரொம்ப கூச்ச சுபாவம். அதிகம் பேசமாட்டார். என்னிடமே சேர்ந்தாற் போல் ஐந்து நிமிடம் பேசமாட்டார். வெளிப் பேரிடம் “சரி” “உண்டு”, “இல்லை” என்று ஒற்றைச் சொல் உதிர்க்க ஓராயிரம் முறை யோசிப்பார். அவரே முன்வந்து பேசி நான் பார்த்தது அபூர்வம். இப்படி அவரை துளைத்து எடுக்கிறாளே,; என்று மஹேஸ்வரிமனதுக்குள் குமைந்தாள்.
அவர் அவளிடம் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. மஹேஸ்வரியும் அதை அப்படியே விட்டு விட்டாலும், மனதுக்குள் ஒரு உறுத்தல். தன்னை ராதா உதாசீனப் படுத்துகிறாளோ; என்ற நினைப்பு ஓடாமல் இல்லை‌
ராதா மாமனாரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருப்பாள். அவராக வந்து ஒரு நாள் ” “ராதா! எனக்கு காஃபி தர மறந்து விட்டாயா” என்று கேட்டவுடன் எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது. ராதாவின் முகம் மலர்ந்தது” , ஸாரி மாமா! கவனம் இல்லை! அந்த சர்க்கரை டப்பாவை எடுங்க”,என்று சொல்வதற்குள் கையில் எடுத்துக் கொடுத்து,” ராதா,! அடுத்து எதைக் கேட்பாய், என்று எனக்குத் தெரியாதா,” என்றார். மஹேஸ்வரிக்கு ஒரு வியப்பு. மருமகளோடு நேராக ஒரு பேச்சு! எப்பவும் அவள் வழியாகத்தான். நடக்கும் .‌. இரண்டு வாரம் கழித்து,” வாம்மா நாம் கோயிலுக்கு போய் வரலாமா; மகேஸு! நீயும் வருகிறாயா”, என்றது மஹேஸ்வரிக்கு அதிர்வை அளித்தது.
மூவருமாக கோயில் செல்லும் வழியில் அவர் நண்பர் பாலு எதிரே வர ; நாங்கள் இரண்டு பேரும் முன்னேறிச் சென்றோம்.
ராதா, ” அம்மா! என்ன ; ஆச்சரியமாக இருக்கிறதா? அப்பாவை எப்படி மாற்றி விட்டேன், பாருங்கள். இதற்காகத்தான் இரண்டு மாதமாக, அவருடன் போராட்டம். இனி என்னுடன் சகஜமாக பேசுவார். நீங்கள் என்னிடம் எப்படியும் ஒட்டுதலாக இருப்பீர்கள். அவரும் என்னுடன் எதார்த்தமாய் பழக வேண்டும் என்பதற்காகவே அவரை இந்த இரண்டு மாதமாக தொந்தரவு செய்து கொண்டே இருந்தேன். இனி கவலையில்லை. என்னைப் புரிந்து கொண்டு விட்டார்” என்று சொல்ல மஹேஸ்வரியும் மகிழ்வுடன் ஆமோதிக்கும் வண்ணமாக தலையசைத்தாள். இந்தக் காலப் பெண்கள் நினைத்தால் நடக்காதது என்று, ஒன்று இருக்கிறதா,?