
ஒரு வெக்கையான இரவு. புழுக்கத்தில் நடந்துகொண்டிருந்தேன்.
பூமி வெப்பமயமாகி வருகிறது. நீரின் அளவு குறைந்து வருகின்றது. பூமி அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது – கல்கி அவதாரம் எடுத்து வருவாறா? பிரபஞ்சம் என்பது என்ன? வேற்று கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா? மனிதன் அங்கெல்லாம் வாழ்வது சாத்தியமா? ஏதோ சிந்தனைகள். அறிவியல் புனைக் கதைகளின் தாக்கம் என்னை அலைக்கழித்தது!
திடீரென்று வானில் கீழ்நோக்கிப் பாயும் தீற்றிய கோடாய் நெருப்பு – எதிர்பாராமல் புவி ஈர்ப்புக்குள் வந்து விட்டாற்போல, ‘க்ளக்’ கென்று ஏதோ ஒன்று சிறிது தூரத்தில் வந்து விழுந்தது.
‘கெட்ட சகுனமோ? எனக்கு இன்று சந்திராஷ்டமம்’, காலையில் காலண்டர் சொன்னது.
அரையடி நீளத்தில் ஒழுங்கு வடிவமற்ற ஒரு பழுப்பு நிறக்கல். கொஞ்சம் அருகில் சென்று குனிந்து பார்த்தேன். அசைவுகள் இல்லை. செல்போனின் விளக்கொளியில் கவனித்தேன்.
சிறிய கழுத்து. நீண்ட, ஒயர் போன்ற ஏடாகூடமாக வாரி முடிந்த முடி, உருண்டை முகத்தில் மூக்கென்று ஒன்று இல்லை. வலது கண்ணில் குழந்தைகள் வரைந்தாற்போன்ற சூரியன், மேலும் கீழும் புருவங்கள். இடது கண், காதுகள் இல்லை. உதடுகள் விரிந்த வாய், இடது காதிருக்க வேண்டிய இடத்தில் பொருத்தியதைப் போல துருத்திக்கொண்டு இருந்தது. கொம்புகளோ, ஆண்டன்னாவோ இல்லை. கை, கால் இல்லாமல் உடைந்து விழுந்த மார்பளவு பொம்மை போல இருந்தது.
மெதுவாகக் காலால் எத்தினேன் அசையவில்லை. கையில் எடுக்க நினைத்து, செல்லுடன் கையை நீட்டினேன். கொஞ்சம் உருண்டு பின்னே சென்றது.
வலது கண் ஒளிர்ந்தது. இடது பக்கத்திலிருந்த வாய் விநோதமாய்த் திறந்து மூடியது. பற்கள் இல்லை. ஏதோ ஓசை எழுப்பியது. மொழி தெரியவில்லை. வேற்று கிரக ஆசாமியோ? இப்போது நான் பின்னால் நகர்ந்தேன்.
தரைச் சக்கரம்போல சுழன்று நிமிர்ந்து நின்றது. தலை, கழுத்துடன் பின்னப்பட்ட உருவம்.
புகை போன்ற ஏதோ ஒன்று அதன் கண்ணின் கீழிருந்த சிறிய துவாரத்திலிருந்து கசிந்து, என்னை நோக்கி வருவது தெரிந்தது. கெமிஸ்ட்ரி லாப் நாற்றம்.
ஒரு நொடி…. கண் மூடித் திறந்தேன். சற்றே பெரிய இரண்டு உருவங்கள், விழுந்திருந்த உருவத்தைப் பற்றியபடி வானில் விரைந்துகொண்டிருந்தன. வால்களில் நெருப்பு சீறியது.
மூக்கடைத்தது. தொண்டை இறுகியது. கை,கால்கள் துவண்டன. துணியாய்ப் பூமியில் விழுகிறேன். என்னைச் சுற்றித் தரையில் புல், சின்ன செடிகள் கருகியிருக்கின்றன…. என் செல் போனைக் காணவில்லை!

ஒரு செல்போன் வெடித்ததை இவ்வளவு பயங்கரமாக எழுதவும் கூடுமோ?