
ஆசிரியர் கலைமகள்……………
இன்று செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன். நண்பர் பி என் பரசுராமன் அவர்களை அங்கு சந்தித்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் அவருடைய வீட்டிற்குச் சென்றேன். இலக்கிய சம்பாஷனை நடைபெற்றது! கல்லாடம் என்று ஒரு நூலினை என்னிடத்தில் காட்டினார். சைவ சித்தாந்தப் பதிப்புக் கழக வெளியீடு அது!! அவருடைய பல நூல்களையும் பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது…….
என்னுடைய வீட்டிற்குத் திரும்பியதும் “கல்லாடம்” பற்றி நான் சிந்திக்கத் தொடங்கினேன்…… கல்லாடம் சம்பந்தமான என் வீட்டில் இருக்கும் நூல்களை எல்லாம் புரட்டினேன்…..
ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான கல்லாடம் என்னும் சைவ நூலை 11ஆம் நூற்றாண்டில் கல்லாடர் என்பவர் எழுதியதாகத் தெரிய வருகிறது.102 ஆசிரியப் பாக்கள் கொண்டது. இவற்றில் 2 பாயிரம். அடுத்து வரும் 100 பாடல்கள் என உள்ளடக்கத்துடன் ‘கல்லாடம் என்னும் நூலினை வெளியீடு
செய்துள்ளார்கள்………..

மதுரைச் சொக்கநாதர் திருப்பரங்குன்ற முருகக் கடவுள் ஆகியோருக்கு நூலில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இசைக் கலை, நாட்டியக் கலை, வில்வித்தை, வாள் பயிற்சி முதலானவை இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன…….
திருவாவடுதுறை மகாவித்துவான் தாண்டவராயத் தம்பிரான் சுவாமிகள், சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், இந்த நூலை மயிலேறும் பெருமாள் பிள்ளை உரையுடன் செப்பம் செய்து வைத்திருந்தார் என்றும், அதை அச்சிட்டு வெளியிடுவதற்குத் தாண்டவராய முதலியார் முயன்றார் என்றும் தெரிகிறது. திருநெல்வேலி சைவ சித்தாந்தப் பதிப்புக் கழக வெளியீடு தான் பெரும்பாலானவர்கள் கையில் இன்று இருக்கிறது………
தமிழ் தாத்தா உ வே சா அவர்களின் குருநாதர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இந்த நூலை (மூலம்) 1868 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிட்டார்கள்…………
கல்லாடர் பாட்டியல் என்று ஒரு பாட்டியல் (பாட்டு+இயல்)இலக்கண நூலும் உள்ளது.இதனைச் செய்தவர் கல்லாடர் எனும் புலவர். பன்னிரு பாட்டியல் என்னும் இலக்கண நூல், 15 பாட்டியல் புலவர்கள் செய்த பாட்டியல் நூல்களிலிருந்து சில பாடல்களைத் திரட்டி உருவாக்கப்பட்ட ஒரு தொகைநூல். இந்த 15 புலவர்களில் கல்லாடர் என்பவரும் ஒருவர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டுப் புலவர். இந்தக் கல்லாடர் என்பவரும் சைவத் திருமுறை கல்லாடம் பாடிய கல்லாடனாரும் ஒருவர் அல்ல! வெவ்வேறு புலவர்கள் என்பதையும் உ வே சா ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்……
கல்லாடம் என்னும் ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கல்லாட (Kallada )என்னும் பெயருடன் இன்றும் வழங்கி வருகிறது! சங்ககாலப் புலவர் கல்லாடனார் இவ்வூரில் வாழ்ந்தவர் என்பது ஒரு சாராரின் நம்பிக்கை!!…….
