கவிஞர் கூடல் தாரிக் கவிதை

நீல நிறப் பறவையொன்று
பறப்பதைப் பார்க்க
வேண்டும் போலிருக்கிறது
கடலுக்கு
இறக்கை முளைத்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும் ‘’ ?

2.
எல்லாருக்கும்
ஆறுதல் சொல்லியபடி
மனதுக்குள் அழும்
அப்பாவுக்குள்
அமைதியாக
ஓடிக்கொண்டிருக்கிறது
துயரமென்னும் பெருங்கடல் ‘’

3.
அப்படி என்னதான்
சொல்ல நினைக்கிறது
அலை ததும்ப ததும்ப
பேசத் துடிக்கும் கடல்

4.
புன்னகைத்தபடியே
கடந்து செல்லும்
மழலையொன்றின்
சின்னஞ்சிறு உதடு
ரோஜா மலரே தான் ‘’
‘’ செடியில் மட்டும் தான்
பூக்கள் பூக்குமெனச் சொன்னது தான்
யாரெனத் தெரியவில்லை
இதுவரையில் ‘’,

5.
அப்படியென்ன பிடிவாதம்
இந்த நிலாவுக்கு
ஒரே ஒரு முறையேனும்
பகலில்
வந்து போனாலென்ன