
முதல் கவிதை
தலைப்பு : சொற்கள்
காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன
மனதில் அலை மோதிக் கொண்டும்
அவற்றை இறுகப் பற்றி சிந்தையில்
நிறுத்தி எழுதும் கோலை அவசரமாய் திறக்கையில்
சுற்றிச சுற்றி கும்மியடிக்கின்றன.
ஒரு வட்டம் பல வட்டங்களாய்
சூழச் சூழ வருகையில் எதனுடைய கைகளையாவது பற்றும் ஆவேசத்தில்
தளர்கிறேன்.
அமைதியாய் காகிதத்தில்
வந்த மர்ந்து மிதக்கும் சிறகாய் தம்மை
எழுதிக் கொள்கின்றன அவைகள்.
&&&&&&&&&
கவிதை இரண்டு தலைப்பு : விளையாட்டு
அவன் அடித்த உடுக்கை
பிஞ்சுதிர, கனி உதிர,
காயுதிர, பூ உதிர என்று ஒலித்த போதே
ஆரம்பமாயின வாழ்வின் அபத்தங்கள்
அலகிலா விளையாட்டுடையான் என்று
கம்பன் வியந்ததில் நான் மயங்கினேன்,
தருணங்களின் சிறு துளி தரிசனத்தில் .
பின்னர் மீண்டு அவனிடமே கேட்டேன்.
இந்த விளையாட்டு அலுக்கவில்லையா என்று?
&&&&&&&&
கவிதை மூன்று
தலைப்பு : நட்பு
அன்னமிட வேண்டும் அடியவர்க்கு என்று தின்னமுடன் கேட்ட சுந்தரருக்கு
அன்று மணிமுத்தாறில் தங்கம் அளித்து கமலாலயத்தில்
மீட்டுக் கொடுத்த உன்னிடம் அப்படி என்ன கேட்டு விட்டேன்?
முதுமையைக் கேட்ட அவ்வையல்ல நான்
கைகளால் கைலாயத்தில் நடந்த காரைக்கால் அம்மையும் அல்ல நான்.
இருந்தும் உன் சோதித் திறம் பாடும் அடியவள் கேட்பது ஒன்றே .
இளமையும் சக்தியும் இன்னும் கொஞ்சm வேண்டும்.
பாதை நீண்டு பயணத்திற்கு அழைக்கிறது அன்புடைய நண்பரே!
(25 5 2024 குவிகம் விருட்சம் இணைந்து நடத்தும் கவியரங்கம்
கவிதைகளை எழுதியுள்ளது பானுமதி)

கும்மி அடிக்கும் சொற்களின் கை பிடித்து அழைத்து வர முயன்று தளர்ந்த வேளையில், தானே சிறகென பறந்து வந்து எழுதிக் கொள்ளும் மாயம் மனசைத் தொடுகிறது. சிறப்பு.
மிக்க நன்றி, மது வண்டி சார்
மதுவந்தி என்ற பெயர் தவறாக வந்து விட்டது.மன்னிக்கவும்