கருணா மூர்த்தி/”விசாரணைக் கமிஷன்.”

“விசாரணைக் கமிஷன்.”
சா கந்தசாமி .கவிதா வெளியீடு
முதல் பதிப்பு 1994 .நான்காம் பதிப்பு 2014.
மொத்த பக்கங்கள் 320 விலை ரூபாய் 150.
தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நாவல்களில் ஒன்று.
சா. கந்தசாமி , விசாரணைக் கமிஷன் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர் ஆவார்.
மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1968-இல் எழுதிய சாயாவனம் புதினம் பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. சவகர்லால் நேரு, பெரியார், உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை கந்தசாமி இலக்கிய வாழ்க்கைக்கான தளமாக அமைத்தார்.”இதன் மூலம் எனக்கு கிடைத்த கல்வி உதவித் தொகை எனக்கு வலிமை, நம்பிக்கை மற்றும் தன்மை ஆகியவற்றைக் கொடுத்துள்ளது, இது எனது படைப்புகளை நுட்பமாக பாதித்திருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.அவர் மேலும் மேலும் கூறுகிறார், “எழுத்துக்கலை கலை அலங்காரமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். சிறந்த இலக்கியம், நேரம், கலாச்சாரம், மொழி மற்றும் அரசியல் சித்தாந்தத்தின் தடைகள் ஆகியவற்றை கடந்து செல்லும் ஒன்றாகும்.
தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. இவரது தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் (terracotta) பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன் காவல் தெய்வங்கள் என்னும் 20 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது.
தென்னிந்திய டெரகோட்டா பற்றிய தனது ஆராய்ச்சி அடிப்படையில், சென்னை தூர்தர்சன் பொது தொலைக்காட்சி சேனல் 1989 ஆம் ஆண்டு சைப்ரசில் நிக்கோசியாவில் அங்கினோ திரைப்பட விழாவில் முதன்முதலாக 20 நிமிட ஆவணப்படமான “காவல் தெய்வங்கள்” தயாரித்தது. கலை வளர்ச்சிக்கான அவரது பங்களிப்புக்காக, தமிழ்நாடு அரசாங்கத்தின் லலித் கலா அகாடமி, மார்ச் 1995 இல் அவருக்கு ஒரு அங்கீகாரம் வழங்கியது. இவர் எழுதிய “நிகழ் காலத்திற்கு முன்பு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

#
   சா கந்தசாமி அவர்கள் தனது முன்னுரையில் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறார் .
 " எத்தனை தான் சொன்னாலும் சொல்லப்படாத ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதில் வாழ்க்கை போலவே சொல்லும் நாவல்."

ஒரு எழுத்தாளன் எத்தனைதான் தன் நாவல் பற்றி சொன்னாலும் அது ஒன்றும் பொருட்படுத்தக் கூடிய தில்லை .எழுதியிருக்கும் நாவலே கருத்து,கலை,என்பதை தெரிந்து கொள்ள போதுமானது என்பதை இலக்கிய சரித்திரம் நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. வாசிப்பின் வழியாக அறியவரும் வாழ்க்கை என்றும் ஜீவித்து கொண்டிருப்பது.
இலக்கியத்திற்கு மரபு உண்டு என்பது வாழ்க்கைக்கு மரபும் சரித்திரமும் உண்டு என்பதுதான். அதனை தமிழ் மொழியில் அதிகமாக அறிந்து கொள்ள முடிகிறது .
விசாரணை கமிஷன் எழுதி முடித்த பின்னர்– படித்த போது அது சிலப்பதிகாரத்தை ஓர் இழையாக பிடித்துக் கொண்டு வந்துள்ளது தெளிவாகியது .அது மரபின் தொடர்ச்சி .
அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் மரபின் தொடர்ச்சி இலக்கியத்திற்கு உண்டு என்பதுதான் .அதை அறிந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது “,என்கிறார் தனது முன்னுரையில் ஆசிரியர்.

#

     ஐராவதம் அவர்கள் தனது முன்னுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார் .
  " தங்கராசு என்ற தனிமனிதனின் சாவுச் செய்தி என்ற அதன் ஒற்றை பரிமாண நிலையிலிருந்து வளர்ந்து ,அதன் அரசியல் பின்னணிகள் என்ன என்ற விஷயங்கள் ஆராயப்படவேண்டிய நிகழ்ச்சியாக இரட்டை பரிமாணம் பெற்று , கைதேர்ந்த நாவலாசிரியரான கந்தசாமியின் இலக்கிய திறமையால் ஒரு முழுமையான கலைப் படைப்பு என்ற மூன்றாவது பரிமாண வளர்ச்சி பெற்று நிற்கிறது ."
     ஒரு தனி மனிதன் இறந்தால் அது செய்தி .;பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்து போனால் அது வெறும் புள்ளிவிவரம் ,என்கிறார் சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலின் என்பதை குறிப்பிட்டு கூறிய ஐராவதம் அவர்கள்," மேலும் தமிழ்நாட்டு வாசகர்கள் இந்த நாவலின் தீவிர தன்மையையும் சமூக வரலாற்று தன்மையையும் கலையை முதிர்ச்சியையும் அங்கீகரித்து , இதனை மிகச்சிறந்த படைப்பு என்ற நாலாவது பரிமாணத்தையும் இதற்கு அளிக்க கடமைப் பட்டிருக்கிறார்கள்" என்ற வேண்டுகோளையும் ஆசையையும் தனது முன்னுரையில் பதிவு செய்கிறார் ஐராவதம் அவர்கள்.

#

   அரசியலையும் மதத்தையும் பின்புலமாக வைத்து இந்த விசாரணை கமிஷன் நாவலை உருவாக்கியிருக்கிறார் சா .கந்தசாமி அவர்கள் .
   நாவலில் பிரதான கதாபாத்திரங்கள் இரண்டே இரண்டு பேர்கள் தான் .ஒருவர் பஸ் கண்டக்டர் தங்கராசு ,மற்றொருவர் பள்ளிக்கூட டீச்சரும் அவர் மனைவியுமான ருக்குமணி .
 கதையும் சாதாரண கதை தான் .கண்டக்டர் தங்கராசு அவருக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத சமூக குளறுபடி ஒன்றில் சிக்கி உயிர் துறக்கிறார் .அவர் மனைவி ருக்மணி வியாதி ஒன்றினால் பாதிக்கப்பட்டு உயிர்வாழும் தெம்பை அணுவணுவாக இழந்து வருகிறாள்.
  அந்தோணிசாமி என்கிற பாரதிவாணன் டீச்சர் ருக்மணியுடன் ஒருவிதமான மையல் பாவம் கொண்டு இருக்கிறான் . அவளுக்கு படிப்பதற்காக இரண்டு புத்தகங்கள் கொண்டு வந்து தருவதாக வாக்கு கொடுக்கிறான் .கடைசிவரை தருவதே இல்லை .
    ஒரு அரசியல்வாதியாக கூடிய எம்எல்ஏ ஆகக் கூடிய நிலையில் இருப்பவன் ஆரம்பத்திலேயே வாக்கு தவறுகின்ற வண்ணத்தை எண்ணத்தை ஆசிரியர் மிக தெளிவாக வெளிப்படுத்தி விடுகிறார்.
  ஜாதியில் உள்ள ஏற்றத்தாழ்வு வேறுபாடுகளை எல்லாம் ஆசிரியர்  கதை களத்தில் எழுதி இருக்கிறார் .ஆனால் என்ன ஜாதி என்ன மதம் என்று குறிப்பிடவில்லை. வரதட்சணை கொடுமை சீர் செனத்தி முதலியவற்றை கோடிட்டு காட்டுகிறார் ஆசிரியர்.

அதேபோல எந்த ஜாதியின் பழக்கம் நல்லது கெட்டது என்ற ஆராய்ச்சியிலும் ஆசிரியர் இறங்கவில்லை .இதை எல்லாவற்றையும் விட இந்த பேச்சினூடே தூக்கி நிற்கும் நுட்பம்.
எல்லா ஜாதிகளிலும் டீச்சர்கள் உருவாகிறார்கள் .ஆனால் ஜாதி வித்தியாசங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகின்றன என்பதை ஆசிரியர் நாசூக்காக வெளிப்படுத்தி இருக்கிறார்.
போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும் காவல் துறை ஊழியர்களுக்கும் ஆன மௌன யுத்தம் ஒரு நாள் வெடித்து விடுகிறது .அப்போது நமது அப்பாவி கதாநாயகன் கண்டக்டர் தங்கராசு எப்படியோ இதில் சிக்கி உயிர் துறக்கிறார் .
ஒரு தனி மனிதனின் அர்த்தமற்ற சாவு இந்த நாவலாசிரியரை பாதிக்கிறது .அதை அழகாக ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு சாதாரண கதை பிரமிப்பூட்டும் வகையில் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத வண்ணம் படித்து முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் தூண்டுகின்ற வகையில் எழுத்துநடை அபூர்வமாக அமைந்துள்ளது .சாயாவனம் படித்த சுவை இதிலும் காண்கிறேன் .இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்றாலும் இதன் நடை வேறு அதன் நடை வேறு .சமூக கண்ணோட்டம் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது..
சொல்லும் பாணியும் கூட நடப்பு கதை நடந்த கதை நினைவோட்டத்தில் ,பிளாஷ்பேக் உத்தியை பயன்படுத்தி சொல்லப்பட்டுள்ளது..

    ஒரு எழுத்தாளர் தான் எழுதுகின்ற படைப்பில் தான் அறிந்தவற்றை ,தான் அனுபவித்தவற்றை ,தனக்குத் தெரிந்ததை, தான் கேள்விப் பட்டதையெல்லாம் நாவலில் கதையில் கொண்டு வந்துவிடுவார் .
   சில சமயம் தன்னையுமறியாமல் தன்னையே எழுதிவிடுவதும் உண்டு. இந்த நாவலைப் படிக்கும்போது சில பல நிகழ்வுகள்  ஆசிரியரின் உண்மையான நிகழ்வுகளை, அறிந்து கொண்ட நிகழ்வு தான் செய்து கொண்ட நிகழ்வு என்று எண்ணும்படி உள்ளது .
 கதையின் ஆரம்பத்தில் படிக்கும்பொழுதே ஆசிரியர் தன்னைப்பற்றி கூறுவதாகவே நான் நினைத்துக் கொள்கிறேன்.
கதையின் முதல் பாராவை பாருங்கள்.
தங்கராசு சீப்பை எடுத்து தலையை வாரிக் கொண்டான் .வார வார தலையிலிருந்து மயிர் உதிர்ந்து கொண்டிருந்தது .

   ஐந்து ஆறு மாதங்களாக மயிர் சுத்தமாக கொட்டிக் கொண்டிருப்பது மாதிரிதான் இருந்தது .ஓரடி முன்னே எடுத்து வைத்து கொஞ்சம் போல குனிந்து இன்னொரு முறை கண்ணாடியில் முகத்தை நன்றாக பார்த்துக் கொண்டான் .
"இது அநியாயமா இருக்கு .உங்க பெரிய அண்ணனுக்கு முடி எல்லாம் கரு கருன்னு இருக்கு .உங்களுக்கு என்ன  நரை மட்டுமில்லை , வழுக்கையும் விழுந்து போச்சு "என்று தங்கராசு மனைவி ருக்மணி இரண்டு மூன்று மாதங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள் .
    தங்கராசு கொஞ்சம் போல குனிந்து இன்னொரு தடவை கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டான்  .நரைத்த இலவம் பஞ்சு மாதிரி அலை பாய்ந்து கொண்டு இருந்தது.

#

    சாயாவனம் ,விசாரணை கமிஷன் இரண்டு புத்தகங்களையும் படித்து முடித்த பிறகு ஒன்று மட்டும் நிச்சயமாக எனக்கு தோன்றியது. சா .கந்தசாமி அவர்களின் மனத்தில் சிலப்பதிகாரத்தின்  இழை நெஞ்சில் ஓடிக்கொண்டே இருக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.