தஞ்சாவூர் ஹரணி

ஒரு ரூபாய்க்கு நிம்மதி கிடைக்குமா
என்று தொடங்கினான் அவன்..
ஒரு ரூபாய்க்கு கவலையற்ற
இடம் கிடைக்குமா என்றான்…
ஒரு ரூபாய்க்கு மரணம் நீக்கும்
மருந்து கிடைக்குமா என்றான்
ஒரு ரூபாய்க்கு வலியொழிக்கும்
வழி கிடைக்குமா என்றான்.
ஒரு ரூபாய்க்கு நினைத்த வாழ்க்கை
கிடைக்குமா என்றான்..
சட்டென்று நிறுத்தியதும்
சொன்னார்கள்.
கோடி கொடுத்தாலும் கிடைக்காது..
அப்புறம் என்னா…?
மிச்சச்சொற்களை விழுங்கிவிட்டு
மீதமாய் சொன்னான்
அவங்கஅவங்களுக்குக் கிடைச்ச
வாழ்க்கைய ஒழுங்கா போய் வாழுங்க.
என்று சொன்ன கணத்தில்
மறைந்துபோனான்..
வந்தது யாரா இருக்கும்
கடவுளா? என்று யோசித்தபடியே
வாழப்போகாமல் பேசத்
தொடங்கினார்கள்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன