வத்சலா/மகளுக்கு ஒரு தாலாட்டு

தாலேலோ மகளே தாலேலோ
செல்வ மகளே தாலேலோ

அழுவதெ நிறுத்திடு பூமகளே
அறிவே வளர்த்திடு
என் மகளே
பல பல சாதனை புரிந்திடவே
பிறந்தாய்
நீ இந்த புவியினிலே உறங்கிடு பூமகளே உறங்கிடு நீ
இப்போது சுகமாக உறங்கிடுவாய்

கண்ணீரெதெற்கினி பூமகளே
கனவுகள் கண்டிடு
என் மகளே
உன் கனவுகள் பலிக்கவே அமுதோடு நம்பிக்கையும்
நான் ஊட்டுகிறேன் அன்பும் கருணையும் மட்டுமல்ல நெஞ்சுரத்தையும்
நான் ஊட்டுகிறேன் (பல பல…)

அம்புலிமாமாவெ மட்டுமல்ல
ஆகாசம் முழுவதும் காட்ட வந்தேன் தோளில் போட்டுன்னை தட்டிக்கொண்டு ப்ரபஞ்சத்தெப் பற்றி நான் பாட வந்தேன் சங்கிலியும் கொலுசும் மட்டுமல்ல
புத்தக செல்வமும் சேத்திருக்கேன்
(பல பல…)

உடல் வலுவும்
நீ வளர்த்திடுவாய் உள்ளத்தில் தைரியம் கொண்டிடுவாய் கொழுவை பற்றிடும் கொடியாகாதே ஆலமரமாய்
நீ தழைத்திடுவாய் சுயமாக சிந்தனை செய்திடுவாய் யாரையும் சாராமல் நின்றிடுவாய் (பல பல )

இல்லறத்திலும் நீ பங்கேற்பாய் அரசியலிலும் இடம் பெறுவாய்
இலக்கியங்கள் பல படைத்திடுவாய் அறிவியல் ஆராய்ச்சி செய்திடுவாய்
தட்டச்சும் சுருக்கெழுத்தும் மட்டுமல்ல
கணிபொறி இயலும் நீ கற்றிடுவாய் (பல பல…)

செங்கல தலெ மேலெ சுமந்துச் சென்று கட்டிடங்கள் கட்ட மட்டுமல்ல அணைகட்டும் பன்மாடி கட்டிடமும்
திட்டமிடவும் நீ பயின்றிடுவாய் ஆரம்பப் பள்ளி ஆசிரியையும் ஆவாய் நீ
அணுவால் ஆக்கப் பணியும் செய்திடுவாய் (பல பல…)

நாத்து நடவுல மட்டுமல்ல விவசாய இயலிலும் நீ தேர்ந்திடுவாய் சமையலறையில மட்டுமல்ல
நட்சத்திர ஹோட்டலில் இடமுனக்குண்டு பிள்ளைபேறும் நீ பார்த்திடுவாய் புற்றுநோயையும் ஒழித்திடுவாய் (பலபல…)

சரித்திரம் சரிவர கற்றிடுவாய் சரித்திரத்தை மாற்றி அமைத்திடுவாய் பெண்ணும் ஆணும் சரிசமமென்பதை ஆணும் பெண்ணும் நன்கு உணரச் செய்வாய்
ஆனந்த உலகை உருவாக்கிடவே அவ்வானந்த உலகை உருவாக்கிடவே –
உன் உன்னத உழைப்பை நீ தந்திடுவாய் –
ஆக
இப்போது சுகமாக உறங்கிடுவாய்

One Comment on “வத்சலா/மகளுக்கு ஒரு தாலாட்டு”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன