மதுவந்தி இரு கவிதைகள்

1.

அன்புக்கும் உண்டோ?

கல்லூரிக்கோடை விடுமுறையில்
வீட்டுக்குப் போன உடனேயே
ஆரம்பிக்கும் அமமாவின் பிரிய மழை.

“ஏன்யா இப்படி இளைச்சுப் போயிட்டியே,
ஹாஸ்ட்டல்ல என்னதான் சாப்பாடு
போடறங்கான்னு தெரியலியே!!!”
வாசலில் நுழையும் போதே
ஆரம்பிக்கும் அம்மா,
செய்தும் காட்டுவாள்
தினமும் விதவிதமாய்
உணவும் சிற்றுண்டியும்.

வீட்டில் மற்றவர்க்கு இட்லியும்
எனக்கு மட்டும் தனியாய்
தோசை செய்து தருவதிலிருந்து
தொடங்கும் அந்த அன்பு வெள்ளம்.

நெய்யில் வார்த்த
நாலாவது தோசையைச்
சாப்பிட பின்,
இன்னும் ஒண்ணே ஒண்ணு
முறுகலா சூடா சாப்பிடுவென
மறுதலிக்கும் என் கைகளைத்
தாண்டி தட்டில் அம்மா போட்டபின்
வேண்டாமென எப்படிச் சொல்வது?

இடம் துளிகூட இல்லாத
வயிற்றில் இதை எப்படி சேர்ப்பது?

யோசித்தபடியே தட்டின் முன்னே
அமர்ந்திருக்கிறேன்…

2.

நான் ஏன் கவிதை எழுதுகிறேன்?

நான் ஏன் கவிதை எழுதுகிறேன்?
நீ வாசிப்பாய்
என்றுதான்.

நீ வாசிக்கவியலாது
என்றோ
நீ வாசிக்க முடியாது
என்றோ
நீ இல்லை என்றோ
நிச்சயமாகத் தெரிந்தபின்

நான் எழுதுவதையும்
பகிர்வதையும்
நிறுத்தி விடக் கூடும்.

One Comment on “மதுவந்தி இரு கவிதைகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன