ந.பானுமதி கவிதைகள்

இணைப்பு

ஐந்து புள்ளி ஐந்து வரிசை கோலம்
முதல் வரிசை சீராக
இரண்டாம் வரிசையில் புள்ளிகள் விலகி
மூன்றாம் வரிசையில் புள்ளிகள் நெருங்கி
நாலாம் வரிசையில் இரண்டிரண்டாய் ஒன்றை மட்டும் விடுத்து
ஐந்தாம் வரிசையில் மீண்டும் சீராக
அழிக்க மனமில்லை
வளைவுகளாலும் கோடுகளாலும் பிணைத்ததில் என் அன்னை பூமி மகிழ்ந்து எழுந்தாள்.
கோணி இருப்பது நேர் செய்யத்தான்
பிணைந்து இருப்பது நம் வாழ்வும் தான்.


பசி

தகித்தது பகல் வெப்பம்
சுழற்சி முறை பணியில் இன்று மதியம் என் கடமை
பசியின் அளவா பகலும் தகிக்கும்?


வெள்ளைப் பூனை

எங்கிருந்தோ வந்தது அந்த வெள்ளைப பூனை
தாவி என் தோள் மீது ஏறி நின்று கொண்டது
யாருக்கோ யாரோவாகவோ நானும் இருக்கிறேனே என்று சிரித்தேன்.


மனதில் சுற்றிய காற்றாடி

ஒப்பந்த வண்டி வாசலில் நின்றது அவசரத்தில் காற்றாடி அணைக்க மறந்தேன்
அலுவலகத்திலும் மனதில் சுற்றும் காற்றாடி

தனித்த பாதை

தனித்திருந்தது அந்தப் பாதை
அதன் மௌனத்தை கலைக்க நான் யார்?
அதில் மர நிழல் ஆடட்டும்
கோழிகள் மேயட்டும்
பின்னர் நான் வருவேன்

2 Comments on “ந.பானுமதி கவிதைகள்”

Comments are closed.