கடலூர் ந.பாஸ்கரன்/தெரு மண்

சுற்றுச்சுவர் இல்லாத சொர்க்கம். குழந்தைகளைச் சேகரித்து வைத்திருக்கும் திறந்த உண்டியல்.
55 வீடுகள் குடியிருக்கும் அனைத்து இந்தியப் பல்கலைக்கழகம்.
பம்பரம் பளிங்கு சில்லு கோடு கண்ணாமூச்சி என்பன போன்ற வீதி விளையாட்டுகளில் ஜோதி ஏற்றிய காலம்.
உள்ளங்காலில் இருந்து உச்சந் தலைவரை தெருமண்ணெல்லாம் உடம்பெல்லாம்
ஒட்டி இருக்கும் திருவிளையாடல்கள். அம்மா அழைக்கும் அழைப்புச் சத்தத்தை விட அடுத்த வீட்டு நண்பன் திட்டுவது தித்திப்பாய் இருக்கும்.
அரைக் குவளை அரிசிக்கு கருவேப்பிலை கொத்தமல்லியை அள்ளிக் கொடுக்கும் பாட்டி தொடங்கி இரண்டு பக்கம் தொங்கவிட்ட பதநீர்க் காவடி எடுத்து வரும் மீசைக்காரன் வரை காலை நேரத் திருவிளையாட்டு முடிந்து திண்ணை விளையாட்டு தொடங்கி விடும்.
நாளைக்குப் பள்ளிக்கூடம் அடிக்கும் கொட்டத்தைப் பாரு…. அம்மாவின் குட்டு அன்றைய விளையாட்டுக்கான முற்றுப்புள்ளி வைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன