“சிட்டி” யின் வயது 114!/ஜெ.பாஸ்கரன்

முதுபெரும் எழுத்தாளரும், விமர்சகரும் ஆன ‘சிட்டி’ என்கிற பெ.கோ.சுந்தரராஜன் அவர்களின் 114 வது பிறந்தநாள், அவர்களது குடும்பத்தாரால் இலக்கியக் கூட்டமாகக் கொண்டாடப்பட்டது! மூத்த எழுத்தாளர் நரசய்யா அவர்கள் தலைமையில், திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், ‘சிட்டியும் நண்பர்களும்’ என்ற தலைப்பிலும், சிட்டி அவர்களின் பேரன் ‘சிட்டி எனும் நண்பன்’ என்ற தலைப்பிலும் உரையாற்ற ஓர் இனிமையான மாலைப் பொழுது அன்றைய இலக்கிய ஆளுமைகளை நினைவுகூறும் வகையில் அமைந்தது.

இந்த நிகழ்வின் அழைப்பிதழைத் தற்செயலாகத் திருப்பூர் கிருஷ்ணன் முகநூல் பக்கத்தில் பார்த்தேன். சிட்டி அவர்களின் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் (இப்போது அந்திமந்தாரை – மணிக்கொடிக் கதைகள் என் வாசிப்பில்) வாசித்திருக்கிறேன். திரு வேணுகோபால் – சிட்டி அவர்களின் மகன் – என் முகநூல் நண்பர் மற்றும் அநேகமாக எல்லா இலக்கியக் கூட்டங்களிலும் நான் சந்திக்கும் நல்ல நண்பர். மாலை 4.30க்கு சென்னை இந்திரா நகரில் சிறிய அரங்கத்தில் கூட்டம்.

மூத்த எழுத்தாளர் நரசய்யா அவர்களை முதன் முறையாக சந்திக்கிறேன். 90+ வயதானவரின் நினைவாற்றலும், இலக்கிய ஆர்வமும், எளிமையும், அன்பும் என்னை வியக்க வைத்தன. ‘A thing of beauty is a joy for ever’ என்பதில் இருக்கும் ஜாய் என்பதை ‘ஜாய்ஸ்’ என்று மாற்றி, தன்னை குறைத்துப் பார்த்த லண்டன் வீட்டு ஓனரை மனம் மாற்றிய செய்தியைச் சிரித்தபடி சொன்னார் – ஓனரின் பெயர் ‘Joice’! தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், தமிழில் எழுதுவதில் மகிழ்ந்தார். எங்களுடன் இணைந்துகொண்ட ஆர்கே கன்வென்ஷன் செண்டர் ராமகிருஷ்ணன் அவர்கள், நரசய்யாவின் சுயசரிதையை (ஆங்கிலத்தில்) வாசிக்க வேண்டும் என்றார்.

நரசய்யா தன் தலைமை உரையில், பள்ளிக்கூட ஆசிரியர் கந்தசாமிப் பிள்ளை அவர்களிடன் தான் ‘மரைன் என்ஜினீரிங்’ படிக்கப் போவதாகச் சொன்னதையும், அவரது தந்தை அவர் விரும்புவதையே படிக்கட்டும் என்றதையும், அதற்கான தேர்வை பங்களூரில் எழுதியதையும், காதில் சிவப்பு கடுக்கனுடன் லோனாவாலாவில் நேர்முகம் செய்யப்பட்டதையும் சுவாரஸ்யமாகச் சொன்னார்.

‘ஆங்கிலம் தெரியுமா?’ என்று கேட்ட வெள்ளைக்காரத் துரைக்கு தான் வாசித்த ‘Inside Asia’ புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டியதையும், பின்னர் கடற்படையில் சேர்ந்து பணியாற்றியதையும் குறிப்பிட்டார்.

நரசய்யா, நிறைய புத்தகங்கள் வாசிப்பவர். 1964ல் அவர் ஆனந்த விகடனுக்கு அனுப்பிய முதல் கதை பிரசுரமாகிறது. முதலில் ஆங்கிலத்தில் எழுதி, பின்னர் தமிழில் மொழிபெயர்த்து அனுப்பினாராம்! முதல் கதையே முத்திரைக் கதையாக வெளியாகிறது – கதையின் பெயர் ‘தேய்பிறை’!

டில்லியில் இந்திரா பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், சுஜாதா ஆகியோருடன் இலக்கியம் பேசியது குறித்தும் சொன்னார். சிட்டி மாமா, இ.பா. இவர்களின் ஊக்குவிப்பினாலேயே எழுத வந்ததாய்க் குறிப்பிட்டார். தனிப்பட்ட முறையில் சிட்டி மாமா செய்த உதவிகளை நினைவு கூர்ந்தார்.

நூற்றுக்கும் மேலான சிறுகதைகள், தமிழக அரசின் விருது பெற்ற நான்கு நூல்கள், கட்டுரைகள் என எழுதியுள்ள, நரசய்யா அவர்களின் எளிமையும், அமைதியும், அன்பும் பாராட்டுக்குரியவை.

திருப்பூர் கிருஷ்ணன் தனக்கே உரிய இயல்பான நடையில், ஏராளமான தாவல்களைப் பகிர்ந்து கொண்டார். நரசய்யாவின் கதைகளின் களங்கள், வித்தியாசமானவை என்றார். ஆனாலும், நரசய்யா அவர்களுக்குத் தமிழ் இலக்கிய வானில் உரிய அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமே என்றார். நரசய்யாவைப் போலவே, இ.பா. வின் முதல் கதையும் ஆனந்த விகடனில் வெளிவந்ததைக் குறிப்பிட்டார்.

சிட்டி அவர்களின் குடும்பத்தில் தானும் ஒருவனாகப் பழகியதைப் பகிர்ந்து கொண்டார். சிட்டி அவர்களின் நகைச்சுவை, நியாயமான கோபம், இலக்கியத்தில் ஈடுபாடு என சிட்டி அவர்களைப் பற்றிய சொற்சித்திரமாக அமைந்திருந்தது திருப்பூரார் பேச்சு!

அண்ணாதுரை அவர்களின் வகுப்புத் தோழர். அண்ணாவின் ‘செவ்வாழை’ ஒரு நல்ல கதை என்று எழுதியிருக்கிறார் சிட்டி என்றார் திருப்பூர் கிருஷ்ணன்.

நீண்ட கடிதங்கள் எழுதுவதில் மிகவும் விருப்பமுடையவர் சிட்டி. அவர் கடிதங்களில் இலக்கியத்தன்மை இருக்கும். அவருக்கும், எழுத்தாளர் கிருத்திகாவுக்கும் இடையே ஆன கடிதங்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டவர் நரசய்யா!

சிட்டி, பரமாச்சாரியார் பற்றியும், சத்தியமூர்த்தி பற்றியும் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூல்கள் சிறப்பானவை. அவரது கூர்மையான அறிவும், நகைச்சுவையும் அவரை ஓர் அறிவுஜீவியாகக் காட்டுகின்றன.

போட்டி, பொறாமையின்றி, சிட்டி, சிவபாத சுந்தரம், கு.ப.ரா., தி.ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களுடன் இணைந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். ஆழமான நட்புடன் பழகியவர்கள் இவர்கள். அதற்காக இலக்கியத்தில் சமரசம் செய்துகொள்ளாதவர் சிட்டி. பாராதியாரின் கண்ணன் பாட்டில் கூட தனது விமர்சனத்தை வைத்தவர் சிட்டி!

இரட்டைப் புலவர்கள் – ஒருவருக்கு கண் தெரியாது, மற்றவருக்குக் கால்கள் கிடையாது – அவர்கள் இருவரும் சேர்ந்து கவிதைகள் இயற்றும் கதையை சுவாரஸ்யமாகக் கூறி, சிட்டி மற்ற எழுத்தாளர்களுடன் கூடி இரட்டையர்களாய்ப் புத்தகங்கள் எழுதியதைப் பற்றி சிலாகித்தார்.

மனைவி இறந்த போது கூட, அமைதியாக இலக்கியம் பேசினாராம் சிட்டி.

சிவபாத சுந்தரத்துடன் ஆன நட்பு, இருவரும் எழுதுவதில் காட்டிய தீவிரம் (டைப் அடித்து, திருத்தி, மீண்டும் டைப் அடித்து – கம்ப்யூட்டர் இல்லாத காலம் – மிகவும் சிரமாமான ஒன்று), சிவபாத சுந்தரத்தின் பெண் பிரசன்னவதனி அவர்களின் முகத்தைத் தேர்ந்தெடுத்து, நேரு காலத்தில் வெளியிடப்பட்ட தபால் தலை, பின்னர் ஒரு தீ விபத்தில் அந்தப் பெண்னின் இறப்பு என ஏராளமான தகவல்கள்!

தி.ஜானகிராமனுடன் இருந்த நட்பினால், கும்பகோணத்துடன் சேர்த்து அவரைக் கேலி செய்வாராம் சிட்டி. அம்மா வந்தாள் கதையின் கடைசியில் காசிக்குப் போகும் அலங்காரத்தம்மாள் செல்லும் இரயிலிலேயே, அவரது காதலனும் அடுத்த பெட்டியில் போவதாக முடித்திருக்க வேண்டும் என்று சொல்வாராம் சிட்டி! தற்பெருமை பேசாதவர் தி.ஜா. யாரையும் புண்படுத்தாத குணம், தன்னைத் தாழ்த்திப் பேசியவரையும் கோபிக்காத மனம் கொண்டவர் தி.ஜா. சிட்டியின் ‘கமென்டு’களுக்கு சிரித்தபடியே இருப்பாராம் தி.ஜா. அவரது இறப்பிற்குப் பிறகு வெளிவந்தது ‘நளபாகம்’ நாவல் – அதன் வெளியீட்டு விழாவில், சிட்டியின் விருப்பப்படியே, திருப்பூர் கிருஷ்ணன், ‘தி.ஜா.வின் பெண் பாத்திரங்கள்’ கட்டுரையை வாசித்தாராம். அது தொடர்பாக நிகழ்ந்தவைகளை சுவைபடச் சொன்னார் திருப்பூர் கிருஷ்ணன்.

சி.சு.செல்லப்பா அவர்களின் கோபம், ஆல் இந்தியா ரேடியோவில் அவரது நேர்காணல், பி.எஸ்.ராமையாவிடன் செல்லப்பாவின் விமர்சனம் தாண்டிய அன்பு என திருப்பூர் படு சுவாரஸ்யம்.

சுதந்திரப் போராட்ட வீரர் திரு ஆர்யாவுக்கும் சிட்டிக்குமான நட்பு, சிட்டியின் உயர்ந்த பண்புக்கு ஓர் உதாரணம் என்றார் திருப்பூர். ஆர்யா இரண்டடி பொம்மையில் வெடிகுண்டு வைத்த கதையை சுவாரஸ்யமாகச் சொன்னார்!

தினமணி ஆசிரியர் திரு ஏ என் எஸ், பேட்டிகளில் நிறைய படங்கள் சேர்க்கச் சொல்லுவாராம் – காரணம் அந்த அளவிற்கு எழுத்துப் பிழைகள் தவிர்க்கப்படும் என்பாராம்!

திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் உரை ஏராளமான தகவல்களுடன், சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன், சிட்டியைப் பற்றியும் அவருடைய நண்பர்கள் பற்றியும் மிகவும் சிறப்பாக இருந்தது. (அவரது அனுபவங்களையெல்லாம் புத்தமாகக் கொண்டு வரவேண்டும் – ஒரு நல்ல ஆவணமாக எதிர்காலத்திற்குத் தேவைப்படும்!).

சிட்டியின் நண்பர் (விசிறி) திரு வெங்கட், இந்திரா பார்த்தசாரதி அவர்களின் மகளும், மருமகனும், ஆர்கே செண்டர் ராமகிருஷ்ணன் என நண்பர்கள் வந்திருந்தனர்.

சிட்டி அவர்களின் பேரன், பெயர்த்தி, கொள்ளுப் பெயர்த்தி, பேரன்கள், மகன்கள், மற்ற உறவினர்கள், நண்பர்கள் என கூடியிருந்தனர். இறைவணக்கம்(பெயர்த்தி), தாத்தாவின் அன்பும், பெருந்தன்மையும் என உரை(பேரன், பெயர்த்தி), விழாவின் இணைப்புரை(பெயர்த்தி) என எல்லாமே சிட்டியின் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தின.

ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி கூறினார் திரு வேணுகோபால்.

இன்றைய விழா, ஆடம்பரம் இல்லாமல், அன்பும் நட்பும் ததும்பும் ஓர் அழகான இலக்கியக் குடும்ப விழாவாக, மனதுக்கு நிறைவைத் தந்த விழாவாக நடந்தது என்றால் அது மிகையில்லை!

.

One Comment on ““சிட்டி” யின் வயது 114!/ஜெ.பாஸ்கரன்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன