புவனா சந்திரசேகரன்/ஆசைகளின் குதியாட்டம்

இயந்திர மயமான வாழ்க்கை!
வேளைக்கு உணவுண்டு
அளவோடு பேசி உரையாடி
நேரத்திற்குத் தூங்கி
நித்தமும் வாழ்கின்ற
தினசரி வாழ்க்கை
அலுத்துத் தான் போகிறது!

மாற்றங்கள் வேண்டி
துள்ளிக் குதிக்கிறது மனம்!
இலக்கில்லாமல் வெளியே சுற்றத்
துடிக்கிறது என் மனம்!

திட்டமிட்டபடி செயலை முடிக்காமல்
சறுக்கி விழுந்து அடிவாங்கி
சோதனைகள் எதிர்கொண்டு
சோகத்தை விழுங்கி
வீறுடன் மீண்டெழுந்து
சாதிக்கத் துடிக்கிறது மனம்!

மழையில் நனைந்தால்
உடல்நலம் கெடுமோ
மனதில் அச்சத்தை உதறி
மழையில் நனைந்து ரசித்து
இல்லத்தின் உள்ளே நுழைந்து
தும்மல் போட்டுத் தலை துவட்ட
துடிக்குது என்மனம்!

வெளியிடத்தில் வெட்டிப் பேச்சுடன்
வம்பு பேசி வேதனைகள் சேர்க்கும்
வேடிக்கை மனிதர்களை
பட்டென்று அறைந்து சட்டென்று
ஓடி வந்திடத் துடிக்குது மனது!

கைபேசியில் பேசிக் கொண்டு
கர்ணனின் கவசகுண்டலங்களாகக்
காதுகளில் கருவியணிந்து
பைத்தியங்கள் போலத் தெருவில்
நடந்து செல்லும் இளைஞர்களின்
கைபேசியைத் திருடிச் சென்று
உடைத்தெறியத் துடிக்குது மனது!

தேர்தல் பொதுக் கூட்டங்களில்
வாக்குறுதிகளை அள்ளி வீசி
பொய்களை மாலைகளாய் அணியும்
தலைவர்களை மேடையில் ஏறி
அடித்து விளாசிக் கீழே தள்ளும்
அற்ப ஆசை மனதில்!

விளம்பரப் போர்வைக்குள்
விதவிதமான கற்பனைகள்
மிகையாகப் பேசும் பொய்யர்களை
சுட்டுக் கொல்ல ஓர் அற்ப ஆசை!

விட்டுத் தள்ளி விடு மனதே
வேண்டாத ஆசைகளை!
மழையில் நனைந்து குதித்தாடி
மழலை போல் மகிழும் ஆசை
நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன்!
மற்றவை எல்லாம் கனவுகளே!
நடக்கப் போவதில்லை ஒருநாளும்!


One Comment on “புவனா சந்திரசேகரன்/ஆசைகளின் குதியாட்டம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன