முனைவர் ந.பாஸ்கரன்/இதயம்

இதய நிலத்தில் இறங்கும் மழையில்
புதிய கீதம் பூத்துக் குலுங்கட்டும்.

காதல் மணந்து களித்த நாட்டில்
மோதல் விளைந்து மோசம் முளைக்கலாமா?

சாதி பேதம் சூழ்ந்து நின்று காதல்
பூவைக் கனலில் வீசலாமா?

சாதியும் மதமும் சரியாய்ப் பார்த்தா
ஆதி காதலை அகிலம் தந்தது?

கௌரவக் கொலையில் காதல் சாவதா?
வளரிளம் பருவம் வாடித் தவிப்பதா?

அழகு ஆஸ்த்தி அளந்து பார்த்தா
பழகு காதல் பாரினில் வந்தது.

அன்பில் மலர்ந்து ஆத்மா பெற்று
இன்ப காதல் இதயம் தழுவியதே.

பணமும் சொத்தும் பதவியும் பகட்டும்
இனமும் பார்க்கும் இயங்கும் பிணங்களே.

கூழையும் குடித்து வாழ்ந்த காதல்
ஏழ்மையை ஏற்று ஏற்றியது தீபத்தை.

அறிந்து மகிழ்ந்து அணைந்து நில்லடா
சிரிக்கும் பூக்களில் சினேகம் வாங்கடா.

இதய நிலத்தில் ஈரம் தேக்கடா அன்பை
விதைத்து ஆனந்தம் அடைந்திடடா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன