குழந்தைகள் தினம் – சில நினைவுகள்

ஜெ.பாஸ்கரன்

சிதம்பரம் முனிசிபாலிடியின் நடுநிலைப் பள்ளியில்தான் எட்டாவது வரை படித்தேன் – மாலைகட்டித் தெருவில் இருந்த நடுநிலைப் பள்ளியில் தாத்தா என்னைச் சேர்த்துவிட்டார்.

எதிர் எதிராக இரண்டு வரிசையில் வகுப்பறைகள் – மடித்து, நகர்த்தக் கூடிய மரத் தடுப்புகளால் ஆன வகுப்பறைகள். ஆறாவது வரையில் தரையில்தான் உட்கார வேண்டும். ஏழு, எட்டு வகுப்புகளுக்கு சாய்ந்த டெஸ்குடன் பெஞ்சுகள் – மூன்று கால்களில் சார்த்தி வைக்கப்பட்ட போர்டு.

டீச்சருக்கு நாற்காலி, மேஜை. இவைதவிர பக்கவாட்டில் இரண்டு வகுப்பறைகள் (எப்போதும் ஐந்தாவது வகுப்புக்குதான் அந்த அறைகள்!), பின்னால் இரண்டு அறைகள் – கிராஃப்ட்டுக்கு. ஓர் அறையில் ‘தறி’ -துணி நெய்வதற்கு – மற்றொன்றில் டிராயிங் மற்றும் கைத்தொழில் பாடங்களுக்கான வகுப்புகள்!

எதிர் வரிசையின் மேற்கு மூலையில் ஒரு சிறிய கிச்சன் – மஞ்சள் நிற ரவையில் உப்புமாவும், பவுடர் கரைத்த பாலும் மதிய உணவு – யூனெஸ்கோவின் தயவில் பள்ளிகளில் மதிய உணவு – வகுப்பில் பாடம் கேட்பதை விட, கிச்சனில் உதவி செய்வது சுவாரஸ்யமானது!

ஒரு வார்த்தை பேசாமல், பெரிய அலுமினிய அடுக்கில் வாசனையான உப்புமாவும், சர்க்கரை கொஞ்சம் தூக்கலான கொதிக்கும் பவுடர் பாலும் செய்து, குழந்தைகளுக்குப் பரிமாறும் அந்த விதவைப் பெண்மணியின் முகம் எனக்கு மறக்கவே இல்லை – அவர் சிரித்தும், ஒரு வார்த்தை அதிர்ந்து பேசியதாகவும் என் நினவில் இல்லை, அவர் பெயரைப் போலவே.

இரண்டு வரிசை வகுப்பறைகளுக்கு நடுவே பெரிய இடம் – வானம் பார்த்த, மண் பூமி. பிரேயர் ஹால், ப்ளே கிரவுண்ட் எல்லாமும் அதுவே! தினமும் காலையில் எல்லா வகுப்புக் குழந்தைகளும் வரிசையாக நின்று, ஒவொரு வகுப்புகும் ஒரு இறைவணக்கப் பாடல் பாடி, அன்றைக்கு ஒரு நற்செய்தி சொல்லி, வரிசையாக வகுப்புக்குச் செல்ல வேண்டும்! சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, குழந்தைகள் தினம் எல்லாம் தேசீயக் கொடி ஏற்றி, (கொடிக்குள் மலர்கள் வைத்து, சரியாக மடித்து, கயிற்றில் கட்டி, ஒரு பக்கக் கயிற்றை இழுக்க, மலர்கள் சிதற, தேசியக் கொடியை நேராகப் பறக்க விடுவது ஒரு கலை –

தவறினால், பச்சை நிறம் மேலும், ஆரஞ்சு நிறம் கீழுமாகப் பறக்கும்!) மரியாதை செய்து, சாக்லெட் வழங்கி கொண்டாடிய நாட்கள் – சிறப்பு விருந்தினர் எல்லாம் கிடையாது – மாணவ, மாணவியர்களே சிறப்புரையாற்ற வேண்டும்.

பாட்டு, நடனம் எனக் கலை நிகழ்ச்சிகளும் உண்டு! அதற்கு ஒரு வாரம் தனியாகப் பயிற்சியும் உண்டு! பள்ளிகளில் நல்லொழுக்கமும், நாட்டுப்பற்றும், கலை, கலாச்சாரமும் பாடங்களுடன் சேர்த்தே கற்பிக்கப்பட்டன – மறக்கமுடியாத பள்ளி நாட்கள்!

என் அம்மாவும் இதே பள்ளியில்தான் படித்தாராம். அதைவிட முக்கியமான தகவல், என் அம்மாவின் டீச்சர் கனகவல்லி டீச்சரே எனக்கும் ஏழாவது கிளாஸ் டீச்சர்! அந்த ஆண்டு, குழந்தைகள் தினத்தையொட்டி, நகராட்சிப் பள்ளிகளுக்கான (ஏழு அல்லது எட்டு பள்ளிக்கூடங்கள்) பேச்சுப் போட்டியும், மாறுவேடப் போட்டியும் – உண்மையில் அது ‘நேரு’ வேடப் போட்டிதான் – அறிவித்திருந்தார்கள்.

மாலைகட்டித் தெரு நடுநிலைப் பள்ளியிலிருந்து நான் நேரு வேடப் போட்டிக்கும், மற்றும் இருவர் (என்னையும் சேர்த்து) பேச்சுப்போட்டிக்கும் தேர்வாகியிருந்தோம். ரங்கநாதன் சாரும், வேதவல்லி டீச்சரும் எழுதிக்கொடுத்த பேச்சுப்போட்டிக்கான உரையை – ‘கீழ் வானிலே உதித்ததோர் செங்கதிர் ஒளி’ எனத் தொடங்கும் பேச்சு – முப்பது விநாடிகளுக்குப் பிறகுதான் நேரு அவர்களின் பெயரே வரும் –

பஞ்சசீலக் கொள்கை, ஐந்தாண்டுத் திட்டங்கள் என விரிவான பேச்சு – ஏற்ற இறக்கங்களுடன் பேசி அனைத்துப் பள்ளிகளுக்கும் முதலாவதாக அறிவிக்கப் பட்டேன்! நேரு வேடப் போட்டியிலும் முதல் பரிசு. பரிசு வழங்கும் விழா சிதம்பரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் வித்தியாசமாக கொண்டாடப்பட்டது.

அன்றைய நகராட்சிக் கமிஷனர், தலைவர் (திரு வி.வி.சுவாமிநாதன் – பின்னாளைய தமிழக அரசில் மந்திரி) ஆகியோர் கலந்துகொள்ள நடந்த அந்த விழாவிற்குத் தலைமை நேரு வேடத்தில் வந்திருந்த, முதற்பரிசு பெற்ற மாணவர்தான் என்று அறிவிக்க, அடிவயிற்றை கலக்கியது. ஆறாவதோ, ஏழாவதோ நினைவில்லை – நாற்காலியின் முனையில் பயத்தில் வியர்த்து,

முழித்தபடி இருந்த நேருவை யாரும், வேறெங்கும் பார்த்திருக்கவே முடியாது! மீண்டும் அதே பேச்சு, மற்றவர்கள் வாழ்த்திப் பேச, கதரில் ஒரு பொன்னாடை, சான்றிதழ் உடன் மூன்றடிக்கு இரண்டடி அளவில் நெஞ்சில் ரோஜாவுடன் சிரித்தபடி இருந்த நேருவின் படம் – மெரூன் கலர் சட்டத்துடன் -பரிசாகப் பெற்றுக்கொண்டு வந்தேன்! இதன் பெருமையெல்லாம் என் பள்ளிக்கூடத்திற்கும், எனக்கு பேசுவதற்கும், நேரு உடைக்கும் உதவிய ஆசிரியர்களுக்குமே சேரவேண்டும் –

ஆனாலும் அவர்கள் என்னைக் கொண்டாடியது என்னால் மறக்க முடியாதது – எப்பேர்ப்பட்ட பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள்!

இதைவிட வீட்டில் நடந்தது நெகிழ்ச்சியானது – நான் வருவதற்குள் விபரம் கேள்விப்பட்டு, வாசலுக்கே வந்து, ஆரத்தி எடுத்து திருஷ்டி சுற்றிப் போட்ட ஜானகிப் பாட்டி, அம்மாவின் அம்மா – சைக்கிளில் பின் சீட்டில் அமர்த்தி, இரண்டு கிமீ தள்ளியிருந்த ‘கெம்பு’ ஸ்டூடியோவிற்கு அழைத்துச் சென்று போட்டோ எடுத்து மகிழ்ந்த ‘சாமாண்ணா’ என்கிற என் மாமா – வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

நான் சென்னைக்கு வந்து விட்டாலும், இரண்டு தாழ்வாரங்கள் கூடும் இடத்திலிருந்த நிலைப்படியின் மேலே பல வருடங்கள் சிரித்துக்கொண்டிருந்தார் நேரு!இன்று குழந்தைகள் தினம் – மனதில் உறைந்து விட்ட சில நினைவுகளை தூசி தட்டி எழுப்பிவிட்டது……(பள்ளிக்கூட புகைப்படம் மூன்று வருடங்களுக்கு முன் எடுத்தது. மந்திரி பூவராகன் பரிசு வழங்கும் வேறொரு நிகழ்ச்சி).ஜெ.பாஸ்கரன்.

One Comment on “குழந்தைகள் தினம் – சில நினைவுகள்”

  1. மிக நல்ல நினைவுகள். மீண்டும் நான் ஒரு முறை பள்ளிக்கூடம் சென்று வந்த மகிழ்வைத தந்தது. மகிழ்ச்சி

Comments are closed.