அப்பாவின் அறையில் விடுபட்ட சில ஞாபகங்கள்

கணேஷ்ராமன்

அழகிய சிங்கர் பாணி அப்பாவின் அறையில் விடுபட்ட சில ஞாபகங்கள். அப்பாவின் அறையில் விடுபட்ட சில ஞாபகங்கள் கிட்டத்தட்ட ஒரு நேர்முக வர்ணனை போல காட்சியமைத்து விடுகிறார். ஆலாபனைகளற்ற சினிமா சங்கீதம் போல. வீட்டிற்குள் நுழைகையில் ரேழியில் செருப்பைக் கழற்றி வேட்டியைக் கணுக்காலுக்கு மேலாக மெலுக்காகத் தூக்கிக் கொண்டு கூடத்திற்குப் போகிற அவகாசம் கிடையாது அவரிடத்தில். நேராக ஈஸிசேரில் அமர்ந்து சம்பாஷணையில் ஈடுபடுவார் கதைசொல்லி. மற்ற அலங்காரங்களை வாசகன்தான் செய்து கொள்ள வேண்டும்.

காபிப்பொடிக் கடைக்காரர் காப்பிப்பொடிதான் அரைத்துக் கொடுப்பார். நாம்தான் பால்காய்ச்சி டிகாக்க்ஷன் இறக்கி காப்பி கலந்து குடிக்க வேண்டும்.

வயதான அப்பாக்கள் இருக்கிற‌ வீடு எல்லோருக்கும் அமையாது. அது ஒருமாதிரி சுதந்திரம் பறிபோன தன்மை. ஆனாலும், மிகக் கடுமையான பாதுகாப்பு. உடலளவில் அப்பாக்களால் ஏதும் ஆகாது. ஆனால், மனதளவில் யானை பலம்.

வயதான அப்பாக்கள் குருக்ஷேத்திரத்தில் கடிவாளங்கள் பிடித்த கண்ணன் மாதிரி. அவர்கள் யுத்தம் செய்வதில்லை. ஆனால், அவர்கள் தான் எந்த ஒரு யுத்தத்தையும் ஜெயிப்பவர்கள்.

அம்மாக்களை இழந்த அப்பாக்களின் துக்கம் தாளமுடியாதது எனினும் அவர்கள் அதைப் புலம்பி வெளிப்படுத்துவது இல்லை.

அப்பாக்களை இழந்த அம்மாக்கள் சுலபமாக என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு பதவிசாக வாரிசுகளிடம் ஒட்டிக் கொண்டு விடுகிறார்கள். அவர்கள் தங்கள் வாரிசுகளிடம் காலம்காலமாக ஏற்படுத்தியிருந்த அன்னியோன்யம் அவர்களைத் தனிமையில் இருந்து காப்பாற்றி விடுகிறது.

ஆனால், அப்பாக்கள் எப்போதும் குடும்பத் தலைவன் என்கிற மோஸ்தரில் உலா வந்ததில் அன்னியோன்யம் விடுபட்டு, வெறும் பாசப்பிணைப்பால் மட்டுமே இணைக்கப் பட்டதில், அளவளாவ ஆட்கள் இன்றித் தனிமைப் பட்டுப் போகிறார்கள்.

அம்மாக்களைப் போல் சடுதியில் அப்பாக்கள், அன்றாடத் தேவையின் முதல் இலக்கான சமையலறையில் நுழைந்து விட முடிவதில்லை. இனம் புரியாத ஒரு சங்கோஜம் சார்த்திய கதவைப் போல அவர்களை நுழைய விடுவதில்லை.

அப்படியே எப்பவாவது அவர்கள் நுழைந்தாலும் அது ஒரு அன்புத் தொல்லையாக பாவிக்கப் படுமேயன்றி, அம்மா செய்வது போலான உதவியாக உருவாக்கம் பெறாது.

அம்மாவிடமான சலுகைகளும் அப்பாவிடமான சலுகைகளும் வேறானவை என்பது, வயது போன பிற்பாடு வேறு ஒரு அளவில் பாதிக்கிறது.

அம்மாவிடம் பேச இருக்கிற எவ்வளவோ விஷயங்கள் அப்பாவிடம் இருப்பதில்லை. நியாயமாக விஷயதாரியான அப்பாவிடம் தான் இருக்க வேண்டும். ஆனாலும், அப்பாக்கள் சுற்றுச்சூழலில் கணிசமான நபர்கள் இருந்தாலும் அத்யந்த பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் அல்லது அவர்களது நேரமின்மையில் பாதிக்கப்படும் முதல் நபராகவும் எப்படியோ மாறிவிடுகிறார்கள். அலுவலக நிர்ப்பந்தத்தில் நான் வீடு சேர நேரமாகும் காலங்கள் அவை. என் அப்பா, மொழி தெரியாத பூனாவின் ஷிவார்க்கர் பூங்காவின் சாய்வு இருக்கைகளில் ஓரிரு நபர்களை சம்பாதித்து வைத்திருந்தார். அவர்களில் ஒரு கிழவர் தெலுங்கர். மற்ற யாவரும் மராத்தியர்கள். அநேகமாக குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றுகூடி என்னத்தையோ பேசுவார்கள். என் அப்பாவைத் தவிர வேறு யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. என் அப்பாவுக்கு தமிழும் ஆங்கிலமும் தவிர வேறு மொழி தெரியாது. ஆனாலும், அவர்கள் சுவாரஸ்யமாக எதையோ உரையாடுவதை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நிறுத்தவில்லை. உரையாடலுக்கு மிகவும் அவசியமான மொழி, நினைக்கிற மாதிரி அவ்வளவு ஒன்றும் அவசியமானது அல்ல என்பதை நிரூபிக்கும் நிகழ்வு இது.

ஏதொவொரு பாதுகாப்பு கருதி, குடும்பத்தின் பிரதானமான அங்கத்தினராக அப்பாக்கள் நீடித்தாலும் (இந்த முதன்மை ஸ்தானத்தை அம்மாக்கள் எப்பவுமே விரும்புவதும் இல்லை, அடைந்ததும் இல்லை) அது உதட்டளவில் உப்புச்சப்பு இல்லாத இருக்கையாகவே நீடிப்பதை உணரும் போது தான் முதல் தனிமையை உணர்கிறார்கள்.

‘அப்பாவின் அறையில்’ கதையில் ஆசிரியர் எழுதியதை விட எழுதாதது தான் அதிகம்.

வாசகர்கள் நிறைய எழுதிக் கொண்டு விடுவார்கள் ஊடாக.

என் அப்பாவுக்கும் போன மாதக் கடைசியில் தொண்ணூற்று இரண்டு முடிந்து விட்டது. எங்களோடு தான் இருக்கிறார். இல்லை, நாங்கள் தான் அவரோடு இருக்கிறோம்.

3 Comments on “அப்பாவின் அறையில் விடுபட்ட சில ஞாபகங்கள்”

  1. சில சமயங்களில் நமக்கு இப்படி ஒரு அப்பா இல்லையே எனும் ஏக்கம் வராமலில்லை! நம்பாளு நேரத்துக்கு சாப்பிடுவார் உலா போவார் ஊதுவார் புகையிலை மணத்துடன் வீட்டை நிரைப்பார் உருப்படியாக ஒன்றும் செய்ய மாடடார் பிறப்பு கடனுக்கு எள் இறைக்கிறோம் 🙄

  2. உண்மை, நான் சமையல் அறை வரை சொல்லும் அப்பாதான். ஆனாலும் என்னால் அம்மாவாக முடியவில்லை. என்னிடம் எடுக்காத உரிமைகள் அவர்களின் அம்மாவிடம். என்ன செய்தாலும் மரியாதை நெறுக்கம் மட்டுமே,சண்டை போடுவது, உரிமை, சலுகை கேட்பது எல்லாம் அம்மாவிடமே . அப்பா அப்பாதான் என்ன செய்தாலும் அப்பா அம்மாவாக முடியாது. நானே தாத்தா ஆகிவிட்டேன் இருந்தாலும் என் அப்பாவை மறக்கமுடியாது. அவரி தியாகம் வார்தைகள் இல்லை. நல்ல நினைவுகளை தூண்டியமைக்கு நன்றி.அன்புடன்

Comments are closed.