அர்ணாக்கயிறு..போட்டுருக்கீங்களா?

இரா.நாறும்பூநாதன்

அரைஞான் கயிறு என்று சுத்தத்தமிழில் சொல்லி இந்தப் பதிவை நீங்கள் கவனிக்காமலேயே போயிருவீக்ளோ ன்னு தான் பேச்சுவழக்கு சொல்லில் போட்டேன்.ஜட்டி போன்ற உள்ளாடைகள் பணக்காரர்களின் வஸ்து என்று கருதப்படும் வரை, அர்ணாக்கயிறும் சாதாரண மக்களின் உடலோடு ஒன்றிப் போயிருந்தது.

பொதுவாக, குழந்தை பிறந்த 30வது நாளில் ஆணோ,பெண்ணோ இடுப்பில் இந்தக் கயிறைக் கட்டி விடுவார்கள்.ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் தான் பொம்பளைப் பிள்ளைகளுக்கு. ஆம்பளைங்க கடைசிக் காலம் வரைக்கும் ஒரு காலத்தில் கட்டிகிட்டுத் தான் இருந்தாங்க.


எனது பள்ளிக் காலத்தில் அர்ணாக்கயிறுக்கு கணிசமான பங்குண்டு. டவுசர் இடுப்பில் நிற்காத என்னைப் போன்றவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம்..(டவுசர் பட்டன் அந்து போனவங்களுக்கும் தான்)அப்போது பெல்ட்டும் கூட வசதியானவர்களின் வஸ்து தான்.


பள்ளிக்குப் போய் விட்டு வரும் வழியில், கழுகுமலை தெற்கு ஊரணியில் சேக்காளிகளுடன் குளித்து விட்டு,கரை ஏறும்போது தான் தெரியும், அர்ணாக்கயிறு இல்லாதது.குளிக்கும் போது கழண்டு போயிருக்கும். ரெண்டு நாளைக்கு இது அப்பாவிற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என நினைப்பேன்.

அதற்குள் அம்மை ட்ட கெஞ்சிக் கூத்தாடி வேறொரு கயறு வாங்கிக் கட்டிக் கொள்ளலாம் இல்லயா?..ஆத்திலேயோ,குளத்திலேயோ, குளிக்கும் போது, நீச்சல் தெரியாமல் முங்கிட்டு இருப்பவனைக் காப்பாத்தனும்னா அவன் அர்ணாக்கயரை பிடிச்சு இழுத்துரலாம்.

பெண்களுக்கு முடி நீளமா இருக்கும்.அவங்க முங்குனா,தலை முடியைப் பிடிச்சு இழுத்துரலாம்.
பயலுவளுக்கு சேக்கு முடில்லா..பிடிமானம் இருக்காது. ஆபத்துக்கு உதவும் சஞ்சீவி தான் இந்த அர்ணாக்கயிறு.


திருநெவெலி ல இருந்து எங்க ஆச்சி வந்துட்டா போதும்.சனிக்கிழமை எண்ணைய் தேய்ச்சுக் குளிக்காம இருக்க விட மாட்டா.எண்ணைய்க் குளியலுக்கு அர்ணாக்கயிறு ரொம்ப முக்கியம்.எல்லாத்தையும் விளக்கிச் சொல்ல முடியாது. நீங்களா புரிஞ்சுக்கணும். உடம்பில் நல்லெண்ணையை சொலுசொலுன்னு தேய்ச்சு விட்டு, கை,கால் விரல்களை இழுத்து சொடக்கு விழும் வரை விடமாட்டாள்.


அப்போ சமயங்களில் ஆச்சி கேப்பாள் அம்மைட்ட. “ஏளா..இவம் ஏன் இப்படி ஒரேயடியா கரஞ்சி போயிருக்கான்..சரியா சாப்பிடுதானா இல்லையா..?”.
எனக்கு புரியாது.நான் மெலிந்து போயிருக்கேன்னு எத வச்சு ஆச்சி சொல்லுதான்னு.
ஆச்சி கிட்டே கேப்பேன் எப்படி சொல்றேன்னு.
“அட மூதீ..இதுக்கு பெரிய டாக்டரு படிப்பா படிக்கணும்..எண்ணைய் தேய்க்கும்போது அர்ணாக்கயறு கழண்டு கழண்டு கீழே உழுதுல்லா..” என்பாள் ஆச்சி.


இடுப்பு சதை கூடினாலோ,குறைஞ்சாலோ கண்டு பிடிக்கும் வெயிங்க் மெசின் மாதிரி தான் இந்த அர்ணாக்கயிரும் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.(அரை-ஞான்-கயிறு..இடுப்பு-ஞானம்-ஆஹா..என்ன ஒரு அறிவு?).

ஆச்சி வேறொன்னும் சொன்னாள்.
அந்தக் காலத்தில், வயல் வெளிகளில் வேலை செய்யும் போது, பாம்பு மற்றும் பூச்சிகள் கடிக்க வாய்ப்புண்டு. வேட்டியை தார்ப்பாச்சி கட்டிக் கொண்டு வேலை செய்யும் ஆண்களுக்கு, அந்த நேரத்தில், கடிபட்ட இடத்தில், இறுக்கமாய் கட்டிக் கொள்ளவும் இந்த அர்ணாக்கயிறு பயன்படுமாம்.


இன்னும் சிலர், அர்ணாக்கயிறு சரியாகக் கட்டும்பட்சத்தில்,உடம்பின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
இன்று காலை,பாளையங்கோட்டை காய்கறிச்சந்தையில், காய் வாங்கிக் கொண்டு இருக்கும் போது, மணி கடைக்குப் போகும் முக்கில்,அந்த வயசான தாத்தா கைகளில் விதவிதமான கலர்களில் அர்ணாக்கயறுகளை தொங்கவிட்டபடி, கயரு வேணுமா,கயரு வேணுமா என்று மெல்லிய குரலில் கேட்பது தெரிந்தது.

அவருக்கு கண் தெரியாது..பலநாட்கள் அவரை அதே இடத்தில் பார்த்திருக்கிறேன்.

இந்த அர்ணாக்கயறு விற்று ஒரு மனிதன்,அவன் குடும்பம் சாப்பிட முடியுமா?


கயறு கட்டுவதை நிறுத்தி பல வருசங்கள் ஆனாலும், அவருக்காக ரெண்டு கயறுகள் வாங்கினேன்.கறுப்புக்கலரில்.

2 Comments on “அர்ணாக்கயிறு..போட்டுருக்கீங்களா?”

Comments are closed.