ப.மதியழகன்/நாயகன்

காற்று நிரம்பிய பலூன்
கைகளில் இருக்க
தேரை வடம் பிடித்து
இழுக்கும் கூட்டத்தை
வேடிக்கைப் பார்த்தபடி
வரும் குழந்தைகள்
தீபாராதனை காட்டினால்
கற்றுக் கொடுத்தபடி
கைகூப்பி கன்னத்தில்
போட்டுக் கொள்ளும்
பெருமாள் ராஜவீதிகளில்
வரும் வருவார்
நிலைக்கு வரும்வரை
காதை செவிடாக்கிவிடும்
வேட்டு சத்தம்
வீதியெங்கும் மனிதத் தலைகள்
வியாபாரம் என்னவோ
பெருமாள் புண்ணியத்தில்
தான் நடக்கிறது
செங்கமலத்திற்கு தனி
ரசிகர் கூட்டமே உண்டு
ஊரில் பெருமாள்
பள்ளிகொண்டிருப்பதே
விசேஷம் தானே
மன்னை நகரமல்ல
பூலோக வைகுண்டம்
இங்குதான் கோபாலன்
கோபியர்களோடு
லீலை செய்தான்
அவதாரங்களில்
பலபரிணாமங்கள் கொண்டவன்
கண்ணனே
சைவமோ, வைணவமோ
சம்பந்தரோ, ஆண்டாளோ
அருவமோ, உருவமோ
ஆழ்ந்து செல்வதில்
அப்படி என்ன இருக்கிறது
நான் யார்? என…
தெரிந்து கொண்டு
என்னவாகப் போகிறது
நாயகனிடம் சரண்புகுந்த
பின்பு!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன