ஜேம்ஸ் ஜாய்ஸும் புதுமைப்பித்தனும் -இரு சிறுகதைகள்/எம்.டி.முத்துக்குமாரசாமி

(புதுமைப்பித்தன் பிறந்ததினத்தை முன்னிட்டு/- சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 – ஜூன் 30, 1948)

இன்று காலை ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ்கட்டிகளை நீக்கிவிட்டு புதிதாக தண்ணீர் நிரப்பும்போது ஐஸ்கட்டி ஒன்றில் ஈக்குஞ்சொன்று சிக்கி கண்ணாடிப்பெட்டிக்குள் இருப்பதைப் போலக் காட்சி அளிப்பதைப் பார்த்தேன். ஐஸ் கட்டியை உடைத்து ஈக்குஞ்சை வெளியேற்றியபோது அது ஏற்கனவே இறந்து போய் பதனிடப்பட்டிருந்தது. பனிக்கட்டிக்குள் சிக்கிக்கொண்ட ஈக்குஞ்சு போலத்தான் நாமும் நம் வாழ்க்கைச் சூழல்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறோமா என யோசித்துக்கொண்டிருந்தேன்.

அந்த ஈக்குஞ்சு போலவே தங்கள் சூழல்களுக்குள் சிக்கிய மனிதர்களைப் பற்றிய இரண்டு கதைகள் நினைவுக்கு வந்தன. ஒன்று ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய ‘எவெலின்’ மற்றொன்று புதுமைப்பித்தன் எழுதிய ‘மனித எந்திரம்’.

ஜேம்ஸ் ஜாய்ஸின் Dubliners சிறுகதைத் தொகுதியில் உள்ள ‘எவெலின்’ சிறுகதையைத் தமிழில் க.நா.சு மொழிபெயர்த்திருக்கிறார்.

மொழிபெயர்ப்பு அல்லையன்ஸ் 1987இல் வெளியிட்ட அவருடைய ‘ஐரோப்பிய சிறுகதைகள்’ தொகுதியில் இருக்கிறது. ஜாய்ஸ் நனவோடை நடையைப் பயன்படுத்த ஆரம்பிப்பதற்கு முன்பு எழுதிய கதை.

எவெலினின் தாய் இறந்துவிட குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பு எவெலினுக்கு வந்து சேருகிறது; அவள் தந்தை வீட்டுக்குத் தேவையான பணத்தைத் தராமல் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அவளை ஏசிக்கொண்டே இருக்கிறான். எவெலினின் ஒரு சகோதரன் இறந்துவிட்டான். இன்னொரு சகோதரன் வேறு வேலையில் வெளியூரில் இருக்கிறான். பத்தொன்பதே வயதான எவெலினுக்கு டப்ளின் வாழ்க்கை மிகவும் அலுப்பூட்டக்கூடியதாக இருக்கிறது அவள் அவளுடைய காதலன் ஃபிராங்க்குடன் அர்ஜெண்டினாவுக்கு கப்பல் வழி ஓடி விடத் திட்டமிடுகிறாள். ஃப்ராங்க்குடன் பேசுவதையும் பழகுவதையும் எவெலினின் தந்தை தடை செய்திருக்கிறான். அதை மீறி துணிச்சலாக ஃப்ராங்க்குடன் துறைமுகம் வரை வரும் எவெலின் கப்பலில் ஏறாமல், கடைசி நொடியில், தன் காதலனைப் போகவிட்டு விட்டு கடற்கரையிலேயே தங்கிவிடுகிறாள்.

புதுமைப்பித்தனின் ‘மனித எந்திரம்’ கதையில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு பலசரக்குக் கடையில் கணக்கு எழுதுபவராக வேலை பார்க்கிறார். குறைவான சம்பளத்துக்கு வேலை பார்க்கும் அவருக்கு கொழும்புக்கு போய் நிறைய சம்பாதித்துவிட்டு ஊர் திரும்பவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஒரு நாள் துணிச்சலாக கடையிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொழும்புவுக்கு கப்பல் ஏற ரயில் நிலையத்துக்கு வந்து தூத்துக்குடிக்கு பயணச்சீட்டு எடுத்துவிடுகிறார்; ரயிலில் ஏறி பதைபதைப்புடன் இருக்கும் அவர் கடைசி நொடியில் ரயிலிருந்து இறங்கி ஓடி வந்துவிடுகிறார். மீனாட்சி சுந்தரம் கடையிருந்து எடுத்த பணத்தை தன் கணக்கில் பற்று வைக்குமாறு கடை முதலாளியிடம் சொல்லி கடைச்சாவியை அவரிடம் ஒப்படைப்பதோடு கதை முடிகிறது.

ஜாய்ஸ்சின் ‘எவெலின்’ கதை என்றில்லாமல் டப்ளினர்ஸ் கதைத்தொகுதி முழுதுமே ஒரு வரலாற்று காலக்கட்டத்தில் எப்படி துணிச்சலாக முடிவெடுக்கும் திறனின்மையால் அயர்லாந்தே எப்படித் தேங்கிக்கிடந்தது எனச் சொல்கின்ற கதைகள் என இலக்கிய விமர்சகர்கள் எடுத்துச் சொல்கிறார்கள். புதுமைப்பித்தனுக்கு வேறு விமர்சகர்களே வேண்டாம் கதை தலைப்பான ‘மனித எந்திரம்’ என்பதிலிருந்து, கதை முழுக்க மீனாட்சி சுந்தரத்தின் முடிவெடுக்கத் திறனில்லாத பயந்தாங்கொள்ளித்தனத்தை தன் விவரிப்புகள் மூலம் திட்டிக்கொண்டே இருக்கிறார். புதுமைப்பித்தனின் கதையின் தொடர்ச்சியாக, முடிவெடுக்க முடியாததன்மை, நிலவுடமை கிராமப் பின்னணியில் செயலின்மையாக எப்படி மாறுகிறது என்பதை ந.முத்துசாமியின் ‘செம்பனார் கோவிலுக்குப் போவதெப்படி’ கதையில் வாசிக்கிறோம். அந்த நிலவுடமை சமூகத்தின் செயலின்மையை ‘எலிபத்தாயம்’ (எலிப்பொறி) என்றே அழைக்கிறது அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைப்படம். எலிபத்தாயத்தில் பெரிய தாரவாடு வீட்டிலிருந்து வெள்ளையும் சொள்ளையும் குடையுமாக வீட்டை விட்டு கிளம்புகிற நாயகன் ஒரு சிறிய அழுக்கு மழை நீர் தெருத் தேக்கத்தை தாண்டாமல் வீடு திரும்பிவிடும் காட்சி இருக்கிறது. எலிப்பத்தாயமான வீடு பெரிய உத்தரங்களாலும் பெரிய பெரிய கதவுகளாலும் ஆனதாக இருக்கிறது.

வரலாற்று காலகட்டம் என்பது ஒரு சில உணர்வுநிலைகளின் தொகுப்பே ஆகும்; அந்த உணர்வுநிலைகளை தன்னகத்தே பிடிக்கின்ற படைப்புகளே காலத்தை விஞ்சி நிற்கும் படைப்புகளாக அமரத்துவம் பெறுகின்றன. வரலாற்றை இலக்கியப் படைப்புகளில் எழுதுதல் என்பதும் இவ்வாறே நிகழ்கிறது.

All reactions:

Active

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன