
வீட்டில் எந்த படம் மாட்டினாலும் லதாவின் அம்மாவிற்கு பிடிக்காது. கடிகாரத்தைத் தவிர சுவற்றில் எதையும் மாட்டக் கூடாது என்று வீட்டில் ஒரு சட்டம் போட்டு விட்டாள். லதாவிற்கு இந்த சர்வாதிகார மனப் போக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அப்பாவிடம் முணு முணுத்துக் கொண்டே இருப்பாள். ஒரு நாள் அவள் தன் தோழி உமா வீட்டிற்கு சென்ற போது அவள் தோழி ஒரு படத்தை இவளுக்குக் கொடுத்தாள். அது ஒரு பெண்ணின் படம். யாரோ வரைந்த ஓவியம். அந்தப் பெண்ணின் முகத்தில் சிரிப்பில்லை. லதாவுக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மேலும் அவளின் அம்மாவை நினைத்த போது இந்த படம் வேண்டவே வேண்டாம் என்று நினைத்தாள். ஆனால் தோழி மனம் புண்படுமே என்று அதை வாங்கி வீட்டில் தன் டேபிள் மீது வைத்தாள். அதை அம்மா பார்த்தால் என்ன சொல்வாரோ என்று நினைத்து கவலைப் பட்டாள். அதை ஒரு பேப்பரில் சுற்றி தன் அலமாரியில் வைக்க வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் கொண்டு வந்து வைத்த போதே அவள் அம்மா அதைப் பார்த்து விட்டாள். மாலை அவள் அப்பா
அலுவலகத்திலிருந்து வந்த போதே அவர் நடையில் ஒரு துள்ளல். லதாவிற்கும் அவள் அம்மாவிற்கும் ஒரே ஆச்சர்யம். இந்த துள்ளலுக்கான காரணம் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“லதா, ஒரு
சந்தோஷமான செய்தி. எனக்கு
மேனேஜர்
ப்ரமோஷன் வந்திருக்கு . ஐந்து வருடங்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இன்று வந்திருக்கு” என்று துள்ளலுடன் சொன்னார்.
லதாவின் அம்மா மகிழ்ச்சியுடன், ” லதா , நீ அந்தப் படத்தைக் கொண்டு வந்த நேரம் , அப்பாவிற்கு ப்ரமோஷன் … அந்தப் படத்தை ஹாலில் மாட்டு” என்றார். லதாவிற்கு நம்ப முடியவில்லை. அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தாள். அது இப்போது அவள் கண்ணுக்கு அழகாகத் தெரிந்தது.
05/05/2024
